மத்தேயு 19

19
விவாகரத்து
1இயேசு இவற்றைச் சொல்லி முடித்த பின்பு அவர் கலிலேயாவைவிட்டுப் புறப்பட்டு, யோர்தானின் மறுபக்கத்தில் உள்ள யூதேயாவின் பகுதிகளுக்குச் சென்றார். 2அப்போது பெருங்கூட்டமாக மக்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அங்கே அவர்களை அவர் குணமாக்கினார்.
3சில பரிசேயர்கள் அவருடைய வார்த்தைகளால் அவரைச் சிக்க வைப்பதற்காக, அவரிடம் வந்தார்கள். அவர்கள் அவரிடம், “ஒருவன் தன் மனைவியை எந்தவொரு காரணத்தையாவது முன்னிட்டு விவாகரத்துச் செய்வானானால், நீதிச்சட்டத்தின்படி அது ஏற்புடையதா?” என்று கேட்டார்கள்.
4அதற்கு அவர், “தொடக்கத்திலே படைப்பின் இறைவன்#19:4 படைப்பின் இறைவன் – கிரேக்க மொழியில் படைத்தவர். அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்’#19:4 ஆதி. 1:27 என்பதை நீங்கள் வாசித்ததில்லையா? 5‘இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தந்தையையும் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இணைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே உடலாவார்கள்.’#19:5 ஆதி. 2:24 6எனவே அவர்கள் இனி இருவராய் இல்லாமல் ஒரே உடலாக இருக்கின்றார்கள். ஆகையால், இறைவன் ஒன்றிணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.
7அதற்கு அவர்கள், “அவ்வாறானால் தனது மனைவிக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து, அவளை அனுப்பி விடலாம் என்று மோசே கட்டளையிட்டிருப்பது ஏன்?” என்று கேட்டார்கள்.
8இயேசு அதற்குப் பதிலளித்து, “உங்கள் இருதயம் கடினமாய் இருந்தபடியால், உங்கள் மனைவியை விவாகரத்துச் செய்வதற்கு மோசே அனுமதித்தார். ஆனால் ஆரம்பத்திலிருந்து அவ்வாறிருக்கவில்லை. 9நான் உங்களுக்குச் சொல்கின்றேன், தன் மனைவி முறைகேடான பாலுறவில் ஈடுபட்டாலன்றி, வேறெந்த காரணத்திற்காகவும் ஒருவன் அவளை விவாகரத்துச் செய்துவிட்டு, அதன் பின்னர் வேறு ஒருத்தியைத் திருமணம் செய்தால், அவன் தகாத உறவுகொள்கின்றான்#19:9 உறவுகொள்கின்றான் – சில மூலப்பிரதிகளில் விவாகரத்துச் செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கின்றவனும் அவளோடு தகாத உறவுகொள்கிறான் என்று உள்ளது.” என்றார்.
10சீடர்கள் அவரிடம், “கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கும் உறவுநிலை இத்தகையதென்றால், திருமணம் செய்யாமல் இருப்பது நல்லதே” என்றார்கள்.
11இயேசு அதற்குப் பதிலளித்து, “இந்த வார்த்தை யாருக்குக் கொடுக்கப்பட்டதோ அவர்களால் மட்டுமே இதை ஏற்றுக்கொள்ள முடியும். 12சிலர் பிறவியிலேயே திருமண உறவுகொள்ள இயலாதவர்களாக இருக்கின்றார்கள்; சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; சிலர் பரலோக இராச்சியத்துக்காகத் திருமணத்தைக் கைவிட்டுத் தங்களைத் தாங்களே அவ்வாறு ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவன் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றார்.
சிறுபிள்ளைகளும் இயேசுவும்
13அதன்பின்பு, சிறுபிள்ளைகளின் மீது இயேசு கைகளை வைத்து ஜெபம்செய்ய வேண்டும் என்பதற்காக, சிறுபிள்ளைகளை அவரிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடர்களோ கொண்டுவந்தவர்களைக் கண்டித்தார்கள்.
14இயேசு அவர்களிடம், “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம். ஏனெனில் பரலோக இராச்சியம் இத்தகையோருக்கே சொந்தமானது” என்றார். 15அவர் பிள்ளைகள் மேல் தமது கைகளை வைத்த பின்பு, அந்த இடத்தைவிட்டுச் சென்றார்.
செல்வந்தனான வாலிபன்
16அப்போது ஒருவன் இயேசுவிடம் வந்து, “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு நான் செய்யவேண்டிய நல்ல காரியம் என்ன?” எனக் கேட்டான்.
17“நல்லதைக் குறித்து, நீ ஏன் என்னிடம் கேட்கின்றாய்? நல்லவர் ஒருவரே இருக்கின்றார். நீ நித்திய வாழ்வுக்குள் செல்ல வேண்டுமானால், கட்டளைகளுக்குக் கீழ்ப்படி” என்றார்.
18“எந்தக் கட்டளைகள்?” என அவன் விசாரித்தான்.
அதற்கு இயேசு, “கொலை செய்யாதே, தகாத உறவுகொள்ளாதே, திருடாதே, பொய்ச்சாட்சி கூறாதே, 19உன் தந்தைக்கும் தாய்க்கும் மதிப்பளித்திடுவாயாக,#19:19 யாத். 20:12-16; உபா. 5:16-20 நீ உன்னில் அன்பாய் இருப்பது போல், உன் அயலவனிடமும் அன்பாய் இரு என்பவையே அவை” என்றார்.#19:19 லேவி. 19:18
20அதற்கு அந்த வாலிபன், “இவை எல்லாவற்றையும் கடைப்பிடித்து வருகின்றேன், இன்னும் என்னுடைய குறைபாடு என்ன?” என்றான்.
21இயேசு அதற்குப் பதிலளித்து, “நீ முழு நிறைவுள்ளவனாக இருக்க விரும்பினால், போய் உனது உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்போது, பரலோகத்தில் உனக்குச் செல்வம் இருக்கும். அதன் பின்னர் என்னைப் பின்பற்றி வா” என்றார்.
22இதை அந்த வாலிபன் கேட்டபோது மனவேதனையுடன் திரும்பிச் சென்றான். ஏனெனில் அவனிடம் அதிக செல்வம் இருந்தது.
23அப்போது இயேசு தமது சீடர்களிடம், “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கின்றேன், ஒரு செல்வந்தன் பரலோக இராச்சியத்துக்குள் செல்வது மிகக் கடினமானது. 24மறுபடியும் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், ஒரு செல்வந்தன் இறைவனின் இராச்சியத்துக்குள் செல்வதைவிட, ஒரு ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது இலகுவாயிருக்கும்” என்றார்.
25சீடர்கள் இதைக் கேட்டபோது, மிகவும் வியப்புற்று, “அவ்வாறாயின் யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” எனக் கேட்டார்கள்.
26இயேசு அவர்களை நோக்கிப் பார்த்து, “மனிதனால் இது முடியாது. ஆனால் இறைவனால் எல்லாவற்றையும் செய்ய முடியும்” என்றார்.
27பேதுரு அவருக்குப் பதிலளித்து, “உம்மைப் பின்பற்றுவதற்காக நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டோமே! அவ்வாறானால், எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்றான்.
28இயேசு அவர்களிடம், “உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அனைத்தும் புதுப்பிக்கப்படும் நாளில், மனுமகன் தமது மகிமையின் அரியணையில் அமர்ந்திருப்பார். என்னைப் பின்பற்றிய நீங்களும் பன்னிரண்டு அரியணைகளில் அமர்ந்து, இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்கும் நீதியான தீர்ப்பு வழங்குவீர்கள். 29என்னைப் பின்பற்றுவதன் காரணமாக#19:29 கிரேக்க மொழியில் என் பெயரால். வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ#19:29 சில மொழிபெயர்ப்புகளில் மனைவி என்பதும் சேர்க்கப்பட்டுள்ளது. விட்டுவந்த ஒவ்வொருவனும், அதற்கு நூறு மடங்காகப் பெறுவான்; நித்திய வாழ்வையும் உரிமையாக்கிக்கொள்வான். 30ஆனால், கடைசியாய் இருக்கின்ற அநேகர் முதன்மையானவர்களாகவும், முதன்மையானவர்களாய் இருக்கின்ற அநேகர் கடைசியானவர்களாகவும் இருப்பார்கள்” என்றார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

மத்தேயு 19: TRV

சிறப்புக்கூறு

பகிர்

ஒப்பீடு

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்