மத்தேயு 18
18
பரலோக இராச்சியத்தில் பெரியவன்
1அந்தவேளையில் சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பரலோக இராச்சியத்தில் யார் பெரியவன்?” என்று கேட்டார்கள்.
2அவர் ஒரு சிறுபிள்ளையைத் தம்மருகில் அழைத்து, அவர்கள் நடுவில் நிறுத்தினார். 3அவர் அவர்களிடம், “உண்மையாகவே, நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நீங்கள் மனம்மாறி, சிறுபிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் ஒருபோதும் பரலோக இராச்சியத்துக்குள் செல்ல மாட்டீர்கள். 4ஆதலால், இந்தச் சிறுபிள்ளையைப் போல் தன்னைத் தாழ்த்துகின்றவனே பரலோக இராச்சியத்தில் பெரியவனாய் இருக்கின்றான்” என்றார். 5“இத்தகைய ஒரு சிறுபிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்கின்றவன் என்னையும் ஏற்றுக்கொள்கின்றான்.
பாவம் செய்ய வைத்தல்
6“ஆனால், என்னில் விசுவாசம் வைத்துள்ள இந்தச் சிறியவர்களில் ஒருவரை, எவராவது பாவம் செய்ய வைத்தால், அவ்வாறு செய்பவனின் கழுத்திலே ஒரு பெரிய திரிகைக்கல் கட்டப்பட்டு, அவன் கடலின் ஆழத்தில் தள்ளப்படுவது அவனுக்கு ஏற்படவிருக்கும் தண்டனையைவிட#18:6 ஏற்படவிருக்கும் தண்டனையைவிட – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. நலமாய் இருக்கும். 7மக்களைப் பாவத்திற்கு இட்டுச் செல்கின்ற#18:7 பாவத்திற்கு இட்டுச் செல்கின்ற – கிரேக்க மொழியில் தடுக்கி விழச் செய்கின்ற தடைக்கல். சோதனைகள் இங்கே இருப்பதனால் இந்த உலகத்திற்கு ஐயோ பேரழிவு! இத்தகைய சோதனைகள் வர வேண்டியதே. ஆனால் அவை யார் மூலமாக வருகின்றதோ அவனுக்கு ஐயோ பேரழிவு! 8உனது கையோ அல்லது காலோ உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி வீசிவிடு. இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் உடையவனாய் நீ நித்திய நெருப்புக்குள் வீசப்படுவதைப் பார்க்கிலும், அங்கவீனமுற்றவனாகவோ, கால்ஊனமுற்றவனாகவோ நித்திய வாழ்வுக்குள் செல்வது உனக்குச் சிறந்தது. 9உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத் பிடுங்கியெடுத்து வீசிவிடு. நீ இரண்டு கண்களுடன் நரக நெருப்புக்குள் வீசப்படுவதைப் பார்க்கிலும், ஒற்றைக்கண்ணுடன் நித்திய வாழ்வுக்குள் போவதே உனக்குச் சிறந்தது.
வழிதப்பிய செம்மறியாடு பற்றிய உவமை
10“நீங்கள் இந்தச் சிறியவர்களில் ஒருவரையாவது பெறுமதி அற்றவர்களாக எண்ணாதிருங்கள். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், பரலோகத்திலுள்ள அவர்களுக்குரிய இறைதூதர்கள், எனது பரலோக பிதாவின் முகத்தை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 11ஏனெனில் வழிதவறிப் போனவர்களைத் தேடி இரட்சிப்பதற்காகவே மனுமகன் வந்திருக்கிறார்.#18:11 சில மூலப்பிரதிகளில் மட்டுமே இந்த வசனம் காணப்படுகிறது. இதற்கு ஒத்த வசனத்தை லூக். 19:10 காண்க.
12“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவனுக்கு நூறு செம்மறியாடுகள் இருந்தாலும், அவற்றில் ஒன்று வழிதவறிப் போனால், அந்தத் தொண்ணூற்றொன்பது செம்மறியாடுகளையும் மலைகளில் விட்டுவிட்டு, வழிதவறியதைத் தேடிப் போக மாட்டானோ? 13நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கின்றேன், அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, வழிதவறிப் போகாத தொண்ணூற்றொன்பது செம்மறியாடுகளைவிட, அந்த ஒரு செம்மறியாட்டைக் குறித்து அதிகமாக சந்தோஷப்படுகிறான். 14அதுபோலவே, இந்த சிறியவர்களில் ஒருவராவது வழிதவறிப் போவது உங்கள் பரலோக பிதாவின் விருப்பமல்ல.
எனக்கெதிராய் பாவம் செய்த சகோதரன்
15“உன் சகோதரன்#18:15 சகோதரன் – உன் குழுவைச் சேர்ந்தவர், சக விசுவாசி, சகோதரி என்றும் மொழிபெயர்க்கலாம். 21ம், 35ம் வசனங்களிலும் காணப்படுகின்றது. உனக்கு எதிராகப் பாவம் செய்தால், நீ போய் அவனும் நீயும் தனிமையாய் இருக்கையில், அவனுடைய குற்றத்தை அவனுக்குச் சுட்டிக்காட்டு. அவன் அதை ஏற்றுக்கொண்டால், நீ உனது சகோதரனை மீண்டும் வென்றெடுத்தவனாவாய். 16ஆனால், அவன் ஏற்றுக்கொள்ளாவிட்டால் இன்னும் ஒருவரை அல்லது இருவரை உன்னுடன்கூட அழைத்துக்கொண்டு போ. ஏனெனில், ‘அனைத்து விடயமும் இரண்டு அல்லது மூன்று சாட்சியங்களின் மூலமாக உறுதி செய்யப்பட வேண்டுமென, இறைவார்த்தையில் சொல்லப்பட்டுள்ளது.’#18:16 உபா. 19:15 17அவர்கள் சொல்வதை அவன் கேட்க மறுத்தால், அதைத் திருச்சபைக்குக் கூறு; திருச்சபை சொல்வதை அவன் கேட்க மறுத்தால், இறைவனை அறியாத ஒருவனைப் போலவும், வரி சேகரிக்கின்ற#18:17 வரி சேகரிக்கின்ற – அந்நாட்களில் ரோமருக்காக வரி சேகரிக்கின்றவர்கள், சமூகத் துரோகிகளாகக் கருதப்பட்டனர். ஒருவனைப் போலவும் அவனை நடத்து.
18“மேலும் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், நீங்கள் பூமியில் எதைப் பிணைக்கின்றீர்களோ, அது பரலோகத்திலும் பிணைக்கப்படும். பூமியில் எதைக் கட்டவிழ்க்கின்றீர்களோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்.”
19“மீண்டும் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், நீங்கள் கேட்கும் எதைக் குறித்தாவது பூமியிலே உங்களில் இருவர் இணக்கம் கொண்டால், பரலோகத்திலிருக்கின்ற என் பிதாவினால், அது உங்களுக்காகச் செய்யப்படும். 20ஏனெனில் எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரில் ஒன்றாய்க்கூடி வருகின்றார்களோ, அங்கே நான் அவர்களுடன் இருக்கின்றேன்” என்றார்.
இரக்கமற்ற வேலையாள்
21அதன் பின்னர் பேதுரு இயேசுவிடம் வந்து அவரிடம், “ஆண்டவரே, என் சகோதரன் எனக்கெதிராகப் பாவம் செய்யும்போது, அவனை நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை வரைக்குமோ?” எனக் கேட்டான்.
22இயேசு மறுமொழியாக, “ஏழு முறை அல்ல, ஏழு எழுபது முறைக்கும் அதிகமாக#18:22 ஏழு எழுபது முறைக்கும் அதிகமாக – இதன் பொருள் கணக்கிட முடியாதளவு. என்று நான் உனக்குச் சொல்கின்றேன்” என்றார்.
23“பரலோக இராச்சியமானது தனது வேலைக்காரர்களுடன் கணக்குப் பார்க்க வந்த ஒரு அரசனைப் போன்று இருக்கின்றது. 24அவன் கணக்குப் பார்க்கத் தொடங்கியபோது, பத்தாயிரம் தாலந்து#18:24 பத்தாயிரம் தாலந்து – ஒருவருடைய 20 வருட சம்பளத்துக்குச் சமனான பெருந்தொகைப் பணம். பணம் கடன்பட்ட ஒருவன் அவனுக்கு முன்பாகக் கையளிக்கப்பட்டான். 25அவனோ கடனைத் திருப்பிச்#18:25 கடனைத் திருப்பி – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. செலுத்த முடியாத நிலையில் இருந்தான். அதனால் அவனையும், அவனது மனைவியையும், பிள்ளைகளையும், அவனிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று கடனைத் திருப்பிச் செலுத்தும்படி, அவனுடைய எஜமான் உத்தரவிட்டான்.
26“வேலைக்காரனோ அவனுக்கு முன்னால் மண்டியிட்டு, ‘என்மீது பொறுமையாய் இருப்பீராக! நான் எல்லாவற்றையும் திரும்பக் கொடுப்பேன்’ என்று கெஞ்சிக் கேட்டான். 27வேலைக்காரனின் எஜமான் அவன்மீது அனுதாபப்பட்டு, அவனுடைய கடனை ரத்துசெய்து, அவனைப் போகவிட்டான்.
28“ஆனால் அந்த வேலைக்காரன் வெளியே போனபோது, தன்னிடத்தில் நூறு தினாரி#18:28 நூறு தினாரி – ஒரு தினாரி ஒருவருடைய ஒருநாள் சம்பளத்துக்குச் சமனான பணம். பணம் கடன்பட்டிருந்த தன் சக வேலைக்காரனைக் கண்டான். அவன் அவனைப் பிடித்து கழுத்தை நெரித்து, ‘நீ என்னிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடு’ என வற்புறுத்திக் கேட்டான்.
29“அவனுடைய சக வேலைக்காரன் காலில் விழுந்து, ‘என்மீது பொறுமையாய் இருப்பீராக! நான் உமக்குத் திருப்பிக் கொடுப்பேன்’ எனக் கெஞ்சிக் கேட்டான்.
30“ஆனால் அவனோ அதற்கு மறுத்து, அந்தக் கடனைக் கட்டித் தீர்க்கும்வரைக்கும், அவனைச் சிறையில் அடைத்தான். 31நடந்தவற்றைக் கண்ட மற்றைய வேலைக்காரர் மிகவும் மனவேதனைப்பட்டு, எல்லாவற்றையும் தங்கள் எஜமானுக்குப் போய்ச் சொன்னார்கள்.
32“அப்போது எஜமான் வேலைக்காரனை அழைத்து, அவனைப் பார்த்து, ‘கொடுமையான வேலைக்காரனே, நீ என்னிடம் கெஞ்சிக் கேட்டபடியினால், நான் உனது கடன்களையெல்லாம் ரத்துசெய்தேன். 33நான் உன்னில் இரக்கம் காட்டியது போல, நீயும் உனது சக வேலைக்காரனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டுமல்லவா?’ என்று கேட்டான். 34அவனுடைய எஜமான் கோபம்கொண்டு, அவன் கடன்பட்ட அனைத்தையும் கொடுத்துத் தீர்க்கும்வரை அவனைச் சித்திரவதை செய்யுமாறு, சிறைக்காவலரிடம் கையளித்தான்.
35“நீங்களும் உங்கள் சகோதரனை மனப்பூர்வமாய் மன்னிக்காவிட்டால், இவ்வாறே எனது பரலோக பிதாவும் உங்களுக்குச் செய்வார்” என்றார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
மத்தேயு 18: TRV
சிறப்புக்கூறு
பகிர்
ஒப்பீடு
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.