மத்தேயு 14

14
யோவான் ஸ்நானகனின் சிரச்சேதம்
1அக்காலத்திலே சிற்றரசனான ஏரோது,#14:1 ஏரோது மகா ஏரோதின் மகனாகிய அந்திபாஸ், தேசத்தின் நான்கில் ஒரு பகுதியை ஆட்சி செய்தான். இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டான். 2ஏரோது தனது ஏவலாட்களிடம், “இவன் யோவான் ஸ்நானகனே; இவன் மீண்டும் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறான். அதனால்தான் இவனால் வல்லமையான அற்புதங்களைச் செய்ய முடிகின்றது” என்று சொன்னான்.
3தனது சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் பொருட்டு, ஏரோது ஏற்கெனவே யோவானைக் கைதுசெய்து, அவனுக்கு விலங்கிட்டு அவனை சிறையில் அடைத்திருந்தான். 4ஏனெனில் யோவான் அவனிடம், “அவளை நீ வைத்திருப்பது நீதிச்சட்டத்திற்கு முரணானது” என்று சொல்லியிருந்தான். 5ஏரோது யோவானைக் கொலைசெய்ய விரும்பினான், ஆயினும் மக்களுக்குப் பயந்திருந்தான். ஏனெனில் மக்கள் யோவானை இறைவாக்கினன் என்று எண்ணினார்கள்.
6ஏரோதின் பிறந்த நாள் அன்று, ஏரோதியாளின் மகள் அவர்களுக்காக நடனமாடி, ஏரோதை மிகவும் மகிழ்வித்தாள். 7அதனால் அவள் எதைக் கேட்டாலும் அதை அவளுக்குத் தருவதாக ஏரோது ஆணையிட்டு வாக்குக் கொடுத்தான். 8அவள் தனது தாயின் தூண்டுதலினால், “யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து எனக்குக் கொடுங்கள்” என்று கேட்டாள். 9அதனால் அரசன் மிகவும் துக்கமடைந்தான். ஆனாலும் தனது ஆணையின் பொருட்டும், தனது விருந்தினர்களின் பொருட்டும், அவள் கேட்டதைக் கொடுக்கும்படி அவன் உத்தரவிட்டான். 10அவ்வாறே அரசனின் உத்தரவை நிறைவேற்றி, யோவானை சிறையில் வைத்து சிரச்சேதம் செய்தார்கள். 11அவனுடைய தலை ஒரு தட்டில் வைக்கப்பட்டு, அந்தச் சிறு பெண்ணிடம் கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. அவள் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள். 12யோவானின் சீடர்கள் வந்து, அவனது உடலை எடுத்து அடக்கம் செய்தார்கள். அதன்பின்பு அவர்கள், இயேசுவிடம் சென்று நடந்ததைச் சொன்னார்கள்.
இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல்
13இவ்வாறு நடந்ததைக் கேள்விப்பட்டதும், இயேசு யாருக்கும் தெரியாமல் அவ்விடத்தை விட்டுவிலகி, தனிமையான ஒரு இடத்துக்குப் படகில் ஏறிச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட மக்கள், பட்டணங்களிலிருந்து நடந்தவாறு அவரைப் பின்தொடர்ந்து போனார்கள். 14இயேசு கரையில் இறங்கியவுடன், அங்கே பெருந்திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டு, அவர்கள்மீது இரக்கம்கொண்டு, அவர்களில் நோயுற்று இருந்தோரைக் குணமாக்கினார்.
15மாலை வேளையானபோது, சீடர்கள் அவரிடம் வந்து, “இது ஒரு ஒதுக்குப்புறமான இடம், அத்துடன் காலம் கடந்துவிட்டது. ஆகவே கூடியிருப்பவர்களை இங்கிருந்து வெளியேற்றி விடுவீராக. அவர்கள் கிராமங்களுக்குப் போய், அங்கே தங்களுக்கு வேண்டிய உணவை வாங்கிக்கொள்ளட்டும்” என்றார்கள்.
16அதற்கு இயேசு, “அவர்கள் போக வேண்டியதில்லை. நீங்களே அவர்களுக்கு ஏதாவது உண்ணக் கொடுங்கள்” என்றார்.
17“இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன” என அவர்கள் சொன்னார்கள்.
18அவர், “அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். 19அதன்பின்பு அவர் மக்களை புற்தரையில் அமர்ந்திருக்கச் செய்து, அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை நோக்கிப் பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, அப்பங்களைத் துண்டு துண்டுகளாக்கிச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்கள் அதை மக்களுக்குக் கொடுத்தார்கள். 20அவர்கள் எல்லோரும் உணவு உண்டு திருப்தியடைந்தார்கள். அவர்கள் உண்ட பின்னர் மீதியான துண்டுகளை, சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள். 21உணவு உண்ட ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. இவர்களைத் தவிர, பெண்களும் பிள்ளைகளும்கூட இருந்தார்கள்.
இயேசு தண்ணீர் மேல் நடந்தது
22அதன் பின்னர், அவர் மக்கள் கூட்டத்தை அங்கிருந்து வெளியேற்றிக் கொண்டிருக்கையில், தான் செல்வதற்கு முன்னர் படகில் ஏறி மறுகரைக்குச் செல்லுமாறு சீடர்களை வற்புறுத்தினார். 23அவர்களை அனுப்பிவிட்ட பின்பு, இயேசு தனிமையாக ஜெபம்செய்வற்கென ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுதுசாய்ந்தபோது, அவர் அங்கே தனிமையாய் இருந்தார். 24ஆனால் சீடர்கள் சென்ற படகு, கரையைவிட்டு வெகுதூரம் போயிருந்தது. எதிர்க்காற்று வீசியதால், படகு அலைகளினால் அலைக்கழிக்கப்பட்டது.
25அதிகாலை மூன்று மணியளவில்#14:25 மூன்று மணியளவில் – கிரேக்க மொழியில், நான்காம் சாமம். அதாவது அதிகாலை மூன்று மணி முதல் ஆறு மணி வரை. இயேசு கடலின் மேல் நடந்து அவர்களிடம் சென்றார். 26அவர் கடலின் மேல் நடந்து வருவதை கண்டபோது சீடர்கள் திகிலடைந்து, “அதோ ஒரு பேய்#14:26 பேய் – அல்லது ஆவி.!” என்று கூறி, பயத்தில் அலறினார்கள்.
27உடனே இயேசு அவர்களிடம்: “தைரியமாய் இருங்கள்! நான்தான், பயப்பட வேண்டாம்” என்றார்.
28அதற்கு பேதுரு, “ஆண்டவரே, உண்மையில் நீர்தான் என்றால், நானும் தண்ணீர் மேல் நடந்து உம்மிடம் வரும்படி கட்டளையிடுவீராக” என்றான்.
29அதற்கு அவர், “வா” என்றார்.
அப்போது பேதுரு படகைவிட்டு வெளியே இறங்கி, தண்ணீரின் மேல் நடந்து இயேசுவை நோக்கி வந்தான். 30ஆனால் அவன் காற்றைக் கண்டபோது, பயமடைந்து கடலில் மூழ்கத் தொடங்கி, “ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்!” என்று கதறினான்.
31உடனே இயேசு தமது கையை நீட்டி, அவனைப் பிடித்து, “விசுவாசம் குறைந்தவனே! நீ ஏன் சந்தேகப்பட்டாய்?” என்றார்.
32அவர்கள் படகில் ஏறியபோது காற்று தணிந்தது. 33படகில் இருந்தவர்கள் அவரை வழிபட்டு, “உண்மையாகவே, நீர் இறைவனின் மகன்” என்றார்கள்.
34அவர்கள் மறுகரைக்குச் சென்று, கெனேசரேத்து என்னும் இடத்தில் கரை இறங்கினார்கள். 35அந்த இடத்து மக்கள், இயேசுவை அடையாளம் கண்டுகொண்டதும், சுற்றுப்புறங்களுக்கு எல்லாம் செய்தி அனுப்பி, நோயுற்றிருந்தவர்களையெல்லாம் அவரிடம் கொண்டுவந்தார்கள். 36நோயாளிகள் அவரது மேலாடையின் ஓரத்தையேனும் தொடுவதற்கு, அவர் அனுமதிக்க வேண்டுமென, அவரைக் கெஞ்சிக் கேட்டார்கள். அவரைத் தொட்ட யாவரும் குணமடைந்தார்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

மத்தேயு 14: TRV

சிறப்புக்கூறு

பகிர்

ஒப்பீடு

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்