யோனா 4

4
கர்த்தரின் இரக்கமும் யோனாவின் கோபமும்
1ஆனால் இது யோனாவுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது; அவன் சினம் அடைந்தான். 2அவன் கர்த்தரிடம், “ஆ கர்த்தரே, இதைத்தானே நான் எனது சொந்த நாட்டில் இருக்கும்போது சொன்னேன். இதனால்தான் நான் தர்ஷீசுக்குத் தப்பியோட விரைந்தேன்; நீர் மிகுந்த கிருபையும் கருணையும் உள்ள இறைவன், கோபிக்கத் தாமதிப்பவர், நிலையான அன்பு நிறைந்தவர், பேரழிவை அனுப்பாமல் மனம்மாறுகின்ற இறைவன் என்பது எனக்குத் தெரியும். 3ஆதலால் இப்போது, கர்த்தரே, என் உயிரை எடுத்துக் கொள்வீராக, நான் வாழ்வதைவிட மரணிப்பதே மேலானது” என மன்றாடினான்.
4ஆனால் கர்த்தர் அவனிடம், “நீ கோபமடைவது சரியானதுதானா?” எனக் கேட்டார்.
5அதன் பின்னர், யோனா வெளியே போய் பட்டணத்தின் கிழக்கே ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் தனக்கென ஒரு குடிசையை அமைத்து, அதன் நிழலில் அமர்ந்து அந்தப் பட்டணத்துக்கு நிகழப்போவதைப் பார்ப்பதற்காக அங்கு காத்திருந்தான். 6அப்போது கர்த்தராகிய இறைவன், ஒரு ஆமணக்குச் செடியை நியமித்து, அதை யோனாவுக்கு மேலாக வளரச் செய்தார். அது யோனாவுக்கு மேலாகப் படர்ந்து அவனது அசௌகரியத்தை நீக்கி, அவனுக்கு நிழல் கொடுத்தது. யோனா அந்த ஆமணக்குச் செடியைக் குறித்து மிகவும் சந்தோஷமடைந்தான். 7ஆனால் மறுநாள் அதிகாலையில் இறைவன் ஒரு புழுவை நியமித்தார். அது அந்த ஆமணக்குச் செடி முழுவதையும் அரித்ததனால் அச்செடி வாடிப்போயிற்று. 8சூரியன் உதித்தபோது, கடும் சூடான கொண்டல் காற்றை#4:8 கொண்டல் காற்றை – கிழக்கிலிருந்து வீசும் காற்று இறைவன் நியமித்தார். உச்சிவெய்யில் யோனாவின் தலையைச் சுட்டதனால், அவன் மிகவும் சோர்வுற்றுத் தளர்ந்து போய், “நான் வாழ்வதைவிட மரணிப்பதே மேலானது” என இறைவனிடம் கூறினான்.
9ஆனால் இறைவன் யோனாவிடம், “நீ இந்தச் செடிக்கு நடந்ததைக் குறித்து கோபமடைவது சரியானதுதானா?” என்று கேட்டார்.
அதற்கு அவன், “ஆம், நான் கோபப்படுவது சரியானதே, மரணிக்கும் அளவுக்கு அதிக கோபம் பற்றி எரிகின்றது முறையானதே” என்றான்.
10அதற்குக் கர்த்தர், “நீ அந்த ஆமணக்குச் செடியைப் பராமரிக்கவும் இல்லை, வளர்க்கவும் இல்லை. ஒரே இரவில் முளைத்து, ஒரே இரவில் அது அழிந்து போயிற்று. அதற்காக நீ மனமுருகுகின்றாயே. 11ஆனால் வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் தெரியாத#4:11 வித்தியாசம் தெரியாத அல்லது சரி எது பிழை எது என்பதை அறியாத. 120,000 பேருக்கும் அதிகமான மக்களும், ஏராளமான வளர்ப்பு மிருகங்களும் இருக்கின்ற நினிவே மாநகரம் குறித்து நான் மனமுருகாமல் இருப்பேனோ?” என்று கேட்டார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யோனா 4: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்