ஓசியா 4
4
இஸ்ரயேலுக்கு எதிரான குற்றச்சாட்டு
1இஸ்ரயேலரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்;
நாட்டில் வாழ்கின்ற உங்களுக்கு எதிராகக் கொண்டுவருவதற்கான
ஒரு குற்றச்சாட்டு கர்த்தரிடம் இருக்கின்றது:
நாட்டில் உண்மையும் அன்பும் இல்லை,
இறைவனை அறியும் அறிவு இல்லை.
2அங்கே சாபமிடுதலும், பொய்யும், கொலையும்,
களவும், தகாத உறவும் மட்டுமே காணப்படுகின்றன;
அவர்கள் எல்லை மீறிப் போகின்றனர்,
இரத்தப் பழிகளுக்குமேல் இரத்தப் பழிகள் சேருகின்றன.#4:2 அல்லது கொலைக்குமேல் கொலை குவிந்து காணப்படுகிறது.
3இதனால் நாடு துயரத்தோடு இருக்கின்றது;
அங்கு வாழும் யாவரும் நலிந்துபோகின்றார்கள்.
காட்டுமிருகங்களும், ஆகாயத்துப் பறவைகளும்,
கடலில் உள்ள மீன்களும் இறக்கின்றன.
4ஆனால் ஒருவனும் ஒரு குற்றச்சாட்டையும் கொண்டுவர வேண்டாம்.
ஒருவன் இன்னொருவனைக் குற்றம் சாட்டவும் வேண்டாம்.
நீங்கள் மதகுருவுக்கு எதிராகக்
குற்றச்சாட்டுகளைக் கொண்டுவருகிறவர்கள் போல் இருக்கின்றீர்கள்;#4:4 எபிரேய மொழியில் தெளிவாக இல்லை
5நீங்கள் இரவிலும் பகலிலும் இடறிவிழுகிறீர்கள்;
இறைவாக்கினரும் உங்களுடன் விழுகிறார்கள்.
எனவே நான் உங்கள் தாயை#4:5 உங்கள் தாயை – இஸ்ரயேல் தேசத்தை, அழிப்பேன்.
6எனது மக்கள் அறிவில்லாததனால் அழிந்து போகின்றார்கள்.
“நீங்கள் அறிவைப் புறக்கணித்திருக்கிறீர்கள்,
அதனால் நானும் உங்களை என் மதகுருக்களாய் இல்லாதவாறு புறக்கணிப்பேன்.
நீங்கள் உங்கள் இறைவனின் சட்டத்தை மறந்தபடியால்,
நானும் உங்கள் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.
7மதகுருக்கள் எவ்வளவு அதிகமாய் பெருகினார்களோ,
அந்தளவு எனக்கெதிராக அவர்கள் அதிக பாவம் செய்கின்றார்கள்;
நான் அவர்களுடைய மேன்மையை
இகழ்ச்சியாக மாற்றுவேன்.#4:7 அல்லது அவர்கள் தங்களது மகிமையான இறைவனை இகழ்ச்சிக்குரியதாக மாற்றினார்கள்.
8எனது மக்களின் பாவத்தால்#4:8 மக்களின் பாவத்தால் அல்லது மக்கள் பாவத்துக்காக ஏறெடுக்கும் காணிக்கைகளால் மதகுருக்கள் தமது வயிற்றை வளர்த்து,
அவர்களது#4:8 அவர்களது – மக்களது குற்றச் செயல்களைக் குறித்து ஆவல் கொள்கிறார்கள்.
9அக்காலத்தில், மக்களுக்கும் மதகுருக்களுக்கும் ஒரேவிதமாக நேரிடும்.
எனவே அவர்களின் தீயவழிகளுக்காக நான் அந்த இரு சாராரையும் தண்டிப்பேன்.
அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்கு நான் பதிலளிப்பேன்.
10“அவர்கள் எல்லோரும் சாப்பிடுவார்கள், ஆனால் திருப்தியடைய மாட்டார்கள்;
அவர்கள் தகாத உறவில் ஈடுபட்டாலும் பிள்ளைகளைப் பெற்றெடுக்கப் போவதில்லை;
ஏனெனில் அவர்கள் தங்கள் தகாத உறவுக்காகக் கர்த்தரைக் கைவிட்டார்கள்.
11புது மற்றும் பழைய திராட்சைரசம்
எனது மக்களின் புரிந்துகொள்ளும் ஆற்றலை பறித்துவிட்டது.
12எனது மக்கள் மரத்தாலான விக்கிரகத்திடம் ஆலோசனையைக் கேட்கிறார்கள்;
தங்களுடைய கோல் பதில் தருமென்றிருக்கிறார்கள்.
தகாத உறவின் ஆவி அவர்களை வழிவிலகச் செய்கின்றது;
அவர்கள் தங்கள் இறைவனுக்கு உண்மையற்றவர்களாய் இருக்கின்றார்கள்.
13அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு,
குன்றுகளிலே இன்பமான நிழல் தருகின்ற கர்வாலி, புன்னை,
தேவதாரு ஆகிய மரங்களின் கீழ்
தகனபலிகளைப் பலியிடுகிறார்கள்.
எனவே உங்கள் மகள்மார் தகாத உறவுக்கும்,
மருமகள்மார் ஒழுக்கக்கேட்டுக்கும் திரும்புகிறார்கள்.
14“உங்கள் மகள்மார் பாலியல் ஒழுக்கக்கேட்டுக்குத் திரும்பும்போதும்,
மருமகள்மார் தகாத உறவில் ஈடுபடும்போதும்
நான் அவர்களைத் தண்டிக்க மாட்டேன்.
ஏனெனில் ஆண்களும் விலைமாதர்களுடன் கூடியிருந்து,
கோயில் விலைமாதர்களுடன் பலியிடுகிறார்கள்,
அறிவில்லாத மக்கள்
சீரழிந்து போவார்கள்.
15“இஸ்ரயேலே, நீ தகாத உறவில் ஈடுபட்டாலும்,
யூதா நாடாகிலும் குற்றமற்றதாய் இருக்கட்டும்.
“நீ தெய்வங்களை வழிபட#4:15 தெய்வங்களை வழிபட – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது. கில்காலுக்குப் போக வேண்டாம்;
பெத்-ஆவெனுக்கும் போக வேண்டாம்.
‘உயிருள்ள கர்த்தர்மீது ஆணை’ என்று சொல்லி ஆணையிடவும் வேண்டாம்.
16இஸ்ரயேலரோ அடங்காத
இளம் பசுவைப் போல் பிடிவாதமாயிருக்கிறார்கள்.
அவ்வாறிருக்க, புல்வெளியில்
செம்மறியாட்டுக்குட்டிகளை மேய்ப்பது போல கர்த்தர் எவ்வாறு அவர்களை மேய்க்க முடியும்?
17எப்பிராயீம்#4:17 எப்பிராயீம் – இஸ்ரயேல் மக்களைக் குறிக்கின்றது. விக்கிரகங்களோடு இணைந்துவிட்டான்;
அவனைத் தனியே விட்டுவிடு!
18அவர்களுடைய மதுபானங்கள் முடிந்து போனாலும்,
அவர்கள் எப்போதும் தங்கள் தகாத உறவைத் தொடர்கிறார்கள்;
அவர்களுடைய ஆளுநர்கள் வெட்கக்கேடான வழிகளை ஆவலுடன் விரும்புகின்றார்கள்.
19சுழல்காற்று அவர்களை அடித்துக் கொண்டுபோகும்,
அவர்கள் விக்கிரகங்களுக்குப் படைக்கும் பலிகள்
அவர்களுக்கு வெட்கக்கேட்டையே கொண்டுவரும்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
ஓசியா 4: TRV
சிறப்புக்கூறு
நகல்
ஒப்பீடு
பகிர்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.