ஆபகூக் 1

1
1ஆபகூக் இறைவாக்கினன் தரிசனமாய் கண்ணுற்ற இறைவெளிப்பாடு.
அநீதி குறித்து ஆபகூக்கின் முறைப்பாடு
2கர்த்தரே, நான் எவ்வளவு காலத்துக்கு உதவி கேட்டு உம்மை அழைக்க வேண்டும்?
நீரோ இன்னும் செவிசாய்க்காமல் இருக்கின்றீரே.
எவ்வளவு காலத்துக்கு உம்மிடம், “வன்முறை” எனக் கதறவேண்டும்?
இன்னும் எம்மைக் காப்பாற்றாமல் இருக்கின்றீரே.
3நீர் ஏன் என்னை அநீதியைப் பார்க்கும்படி செய்கின்றீர்?
ஏன் அநியாயத்தைச் சகித்துக் கொண்டிருக்கின்றீர்?
எங்கு பார்த்தாலும் அழிவும் வன்முறையுமாக இருக்கின்றன;
சண்டையும் சச்சரவும் பெருகிக்கொண்டு செல்கின்றன.
4ஆதலால் சட்டம் வலுவிழந்துள்ளது,
நீதி ஒருபோதும் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை.
கொடுமையானவர்கள் நேர்மையானவர்களை ஒடுக்குகின்றார்கள்.
அதனால் நீதி புரட்டப்படுகிறதே.
கர்த்தரின் பதில்
5“இனங்களைக் கவனித்துப் பாருங்கள்,
பார்த்து முழுவதுமாய் வியப்படையுங்கள்.
உங்களுக்குச் சொன்னாலும்,
உங்களால் நம்பமுடியாத ஒரு செயலை,
உங்கள் நாட்களிலேயே நான் செய்யப் போகின்றேன்.
6இரக்கமற்றவர்களும்
மூர்க்கம் கொண்டவர்களுமான பாபிலோனியரை#1:6 பாபிலோனியரை அல்லது கல்தேயர்கள் நான் எழுப்புகிறேன்.
அவர்கள் தங்களுக்குச் சொந்தமல்லாத இருப்பிடங்களைக் கைப்பற்றுவதற்காக,
பூமியெங்கும் அணி அணியாய் செல்வார்கள்.
7அவர்கள் பயமும் திகிலுமூட்டும் மக்கள்;
அவர்கள் தாங்கள் செய்வதே சரியானதும் சட்டமும் என்று எண்ணுபவர்கள்.
தங்கள் சொந்த மேன்மையை மட்டுமே உயர்த்துபவர்கள்.
8அவர்களுடைய குதிரைகள் சிறுத்தைப் புலிகளைவிட வேகமானவை,
பொழுதுசாயும் நேரத்தில் நடமாடுகின்ற ஓநாயிலும் பயங்கரமானவை.
அவர்களுடைய குதிரைப்படை தலைதெறிக்க ஓடிவரும்;
அவர்களுடைய குதிரைவீரர்களோ, தொலைவிலிருந்து வருகின்றார்கள்.
இரைமீது பாயும் கழுகைப் போல, அவர்கள் பறந்து வருவார்கள்;
9அவர்கள் எல்லோரும் வன்முறையை நாடியே வருகின்றார்கள்.
அவர்களுடைய படைகள் பாலைவனக் காற்றைப் போல் முன்னேறிச் சென்று,
மணலை அள்ளுவதைப் போன்று தாம் கைப்பற்றியவர்களை வாரிச் சேர்த்துக்கொள்வார்கள்.
10அரசர்களை அவர்கள் கேலி செய்து,
ஆளுநர்களை ஏளனம் செய்கின்றார்கள்.
அரண்செய்த பட்டணங்களையெல்லாம் பார்த்து நகைக்கின்றார்கள்;
மண்ணினால் முற்றுகை அரண்களைக் கட்டி,
அந்த பட்டணங்களை கைப்பற்றுகிறார்கள்.
11காற்றைப் போல் கடந்து போகின்றார்கள்.
அவர்கள் தங்கள் சுய பலத்தையே தெய்வமாகக் கொண்டிருக்கும் குற்றவாளிகள்.”
ஆபகூக்கின் இரண்டாவது முறைப்பாடு
12கர்த்தரே, என் இறைவனே, என் பரிசுத்தரே,
நீர் நித்தியத்தில் இருந்தே இருப்பவர் அல்லவோ?
நாங்கள்#1:12 நாங்கள் சில மொழிபெயர்ப்புகளில் நீர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அழிவுக்கு உள்ளாவதில்லை.
கர்த்தரே, எங்களை நியாயம் தீர்க்க
நீர் அவர்களை நியமித்திருக்கின்றீர்;
எங்கள் மலைப்பாறையானவரே,
எங்களைத் தண்டிப்பதற்காக நீர் அவர்களை அமர்த்தியிருக்கின்றீர்.
13உம்முடைய கண்கள் அதிக தூய்மையானதால்,
அவை தீமையைப் பார்ப்பதில்லை;
அநியாயத்தை சகிக்க உம்மால் முடியாது.
அவ்வாறாயின் துரோகிகளை நீர் ஏன் சகிக்கின்றீர்?
கொடியவர்கள் தங்களைவிட நீதியானவர்களை விழுங்கும்போது,
நீர் ஏன் மௌனமாய் இருக்கின்றீர்?
14நீர் மனிதர்களை கடலில் உள்ள மீன்களைப் போல,
தலைவனில்லாத கடல் உயிரினங்களைப் போல ஆக்கினீர்.
15கொடியவன் அவர்கள் எல்லோரையும் தூண்டிலினால் இழுக்கிறான்.
தனது வலையினால் அவர்களைப் பிடிக்கிறான்.
தனது இழுவை வலையினால் அவர்களை ஒன்றாய் அள்ளிச் சேர்க்கிறான்.
இவ்விதம் அவன் மகிழ்ச்சிகொண்டு களிகூருகிறான்.
16ஆகவே அவன் தனது வலைகளுக்குப் பலிகளை ஏறெடுத்து,
தனது இழுவை வலைக்குத் தூபம் காட்டுகிறான்.
ஏனெனில் தனது வலையினால் அவன் செல்வச் சிறப்புடன் வாழ்ந்து,
சிறந்த உணவைச் சாப்பிட்டு மகிழ்கிறான்.
17அவ்வாறாயின் அவன் தனது வலையை தொடர்ந்து நிரப்பி எடுத்துக்கொண்டே இருப்பானோ?
அவன் இனங்களை இரக்கமின்றி அழிப்பானோ?

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ஆபகூக் 1: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்