ஆமோஸ் 3

3
இஸ்ரயேலுக்கு எதிரான சாட்சியங்கள்
1இஸ்ரயேல் மக்களே, உங்களுக்கு எதிராக, எகிப்திலிருந்து நான் கொண்டுவந்த முழுக் குடும்பத்தினருக்கும் எதிராக கர்த்தர் பேசியதைக் கேளுங்கள்.
2“பூமியின் குடும்பங்கள் எல்லாவற்றிலிருந்தும்
உங்களையே நான் தெரிவுசெய்தேன்.
எனவே, உங்கள் அனைத்து பாவங்களுக்காகவும்
நான் உங்களைத் தண்டிப்பேன்.”
3சேர்ந்து நடப்பதற்கு ஒருமனப்படாமல்,
இருவர் ஒன்றுசேர்ந்து நடந்து செல்ல முடியுமோ?
4இரை எதுவும் அகப்படாமல்
புதருக்குள் இருந்து சிங்கம் கர்ச்சிக்குமோ?
தான் எதையும் பிடிக்காமல்
இளஞ்சிங்கம் தன் குகையில் இருந்து உறுமுமோ?
5கண்ணி விரிக்கப்படாத தரையில்
பறவை வந்து சிக்குமோ?
பொறியில் எதுவும் பிடிபடாமல்,
அந்த பொறி நிலத்திலிருந்து துள்ளுமோ?
6ஒரு பட்டணத்தில் போர் எக்காளம் முழங்கும்போது
மக்கள் நடுநடுங்காதிருப்பார்களோ?
கர்த்தர் அதைச் செய்யாமல்
ஒரு பட்டணத்துக்கு பேராபத்து வருமோ?
7தமது ஊழியர்களான இறைவாக்கினருக்கு
தமது திட்டத்தை வெளிப்படுத்தாமல்,
ஆண்டவராகிய கர்த்தர் ஒன்றும் செய்வதில்லை.
8சிங்கம் கர்ச்சித்தது,
யார் பயப்படாதிருப்பான்?
ஆண்டவராகிய கர்த்தர் பேசியிருக்கிறார்,
யாரால் இறைவாக்கு சொல்லாமல் இருக்க முடியும்?
9அஸ்தோத் பட்டணத்தின் கோட்டைகளுக்கும்,
எகிப்து நாட்டின் கோட்டைகளுக்கும் இதைப் பிரசித்தப்படுத்துங்கள்:
“சமாரியாவின் மலைகளின்மேல் ஒன்றுகூடுங்கள்.
இஸ்ரயேலில் நடக்கும் பெரும் கலவரத்தையும்,
அங்குள்ள மக்களிடையே நடக்கும் ஒடுக்குதலையும் பாருங்கள்.”
10“சரியானதை எப்படிச் செய்வது என்று என் மக்களாகிய#3:10 என் மக்களாகிய – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது அவர்களுக்குத் தெரியாது.
அவர்கள் வன்முறையையும், கொள்ளைப்பொருட்களையும்
தங்கள் கோட்டைகளில் குவித்து வைக்கிறார்கள்”
என கர்த்தர் அறிவிக்கின்றார்.
11ஆகவே ஆண்டவராகிய கர்த்தர் சொல்வது இதுவே:
“பகைவன் ஒருவன் நிலத்தை ஆக்கிரமிப்பான்.
அதன் அரண்களை இடித்து,
அவன் உங்கள் கோட்டைகளைக் கொள்ளையிடுவான்.”
12கர்த்தர் சொல்வது இதுவே:
“சிங்கத்தின் வாயிலிருந்து ஒரு மேய்ப்பன்
தனது ஆட்டின் கால் எலும்புகள் இரண்டையோ அதன் காதின் துண்டொன்றையோ மீட்டெடுப்பான்;
அதைப் போன்றே இஸ்ரயேலர்கள்
சமாரியாவில் படுக்கையின் ஓரங்களுடனும்,
தமஸ்குவிலுள்ள ஆசனங்களின் மூலைகளுடனும் மட்டுமே தப்புவிக்கப்படுவார்கள்.”
13“இதைக் கேட்டு யாக்கோபின் குடும்பத்துக்கெதிராக#3:13 குடும்பத்துக்கெதிராக அல்லது சந்ததிக்கெதிராக நாடு முழுவதும் சாட்சி சொல்லுங்கள்” என்று ஆண்டவராய் இருக்கும் சேனைகளின் இறைவனாகிய கர்த்தர் அறிவிக்கின்றார்.
14“இஸ்ரயேலின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிக்கும் நாளிலே,
பெத்தேல் நகரத்திலுள்ள தெய்வத்தின் பலிபீடங்களை அழிப்பேன்.
பலிபீடங்களின் கொம்புகள் வெட்டப்பட்டு
அவை தரையில் விழும்.
15செல்வந்தர்களின்#3:15 செல்வந்தர்களின் – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது குளிர்கால வீடுகளையும்,
அவற்றுடன் அவர்களது கோடைகால வீடுகளையும் இடிப்பேன்.
தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடுகள் அழிக்கப்படும்.
மாளிகை வீடுகள் பாழாகிவிடும்”
என கர்த்தர் அறிவிக்கின்றார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ஆமோஸ் 3: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்