சங்கீத புத்தகம் 21:1-13

சங்கீத புத்தகம் 21:1-13 TAERV

கர்த்தாவே, உமது பெலன் ராஜாவை மகிழ்விக்கிறது. நீர் அவனை மீட்கும்போது அவன் மிகவும் சந்தோஷமடைகிறான். நீர் ராஜாவுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தீர். ராஜா சிலவற்றைக் கேட்டான். கர்த்தாவே, அவன் கேட்டவற்றை நீர் கொடுத்தீர். கர்த்தாவே, நீர் உண்மையாகவே ராஜாவை ஆசீர்வதித்தீர். அவன் தலையில் பொற்கிரீடத்தைச் சூட்டினீர். தேவனே ராஜா உம்மிடம், ஆயுளைக் கேட்டான். நீர் அதை அவனுக்குக் கொடுத்தீர். நீர் அவனுக்கு என்றென்றும் நிலைத்துத் தொடரும் நீண்ட ஆயுளைக் கொடுத்தீர். வெற்றிக்கு நேராக நீர் ராஜாவை வழிநடத்தினீர். அவனுக்குப் பெரும் மேன்மையைத் தந்தீர். அவனுக்குப் பெருமையையும், புகழையும் தந்தீர். தேவனே, நீர் உண்மையாகவே என்றென்றைக்கும் தேர்ந்தெடுத்த ராஜாவை ஆசீர்வதித்தீர். உமது உயர்ந்த வல்லமையை உபயோகித்து ராஜாவைப் பாதுகாத்தீர். ராஜா உம்முகத்தைப் பார்க்கும்போது அது அவனை மகிழச் செய்யும். ராஜா கர்த்தரை நம்புகிறான். உன்னதமான தேவனாகிய நீர் அவனை ஏமாற்றமாட்டீர். தேவனே, உமது பகைவர்க்கு உம் பெலனை உணர்த்துவீர். உம்மைப் பகைக்கிற அந்த ஜனங்களை உமது வல்லமை வெல்லும். கர்த்தாவே, நீர் ராஜாவோடு இருக்கும் போது, அவர் எல்லாவற்றையும் கொளுத்திவிடும் உலையைப்போல் இருப்பார். அவர் தன் பகைவர்களை அழிப்பார். அவரது பகைவர்களின் குடும்பங்கள் அழிக்கப்படும். அவர்கள் பூமியிலிருந்து அகற்றப்படுவார்கள். ஏனெனில் கர்த்தாவே, அந்த ஜனங்கள் தீயவற்றை உமக்கெதிராய் திட்டமிட்டார்கள். அவர்கள் தீயன செய்யத் திட்டமிட்டும் வெற்றி பெறவில்லை. கர்த்தாவே, அந்த ஜனங்களை அடிமைகளைப் போலாக்கினீர். நீர் அவர்களைக் கயிறுகளால் கட்டினீர். அவர்களின் கழுத்துக்களைச் சுற்றி கயிறுகளால் வளைத்தீர். அடிமைகளைப் போல் உம்மைக் குனிந்து வணங்கச் செய்தீர். கர்த்தாவே, உமது மகத்துவத்தில் நீர் உயர்ந்திரும். கர்த்தருடைய மேன்மையைப் பாடல்களால் பாடி இசைப்போம்!