சங்கீதம் 21:1-13
சங்கீதம் 21:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவே, அரசன் உமது பெலத்தில் களிகூருகிறார். நீர் கொடுக்கும் வெற்றிகளில் அவருடைய மகிழ்ச்சி எவ்வளவு பெரிதாயிருக்கிறது. அவருடைய இருதயத்தின் வாஞ்சையை நீர் அவருக்குக் கொடுத்திருக்கிறீர்; அவருடைய உதடுகளின் வேண்டுதலை நீர் புறக்கணிக்கவில்லை. நிறைவான ஆசீர்வாதங்களுடன் நீர் அவரை வரவேற்று, சுத்தத் தங்கத்தினாலான மகுடத்தை நீர் அவர் தலையின்மேல் வைத்தீர். அவர் உம்மிடம் ஆயுளைக் கேட்டார், அதை நீர் அவருக்குக் கொடுத்தீர்; அவர் என்றென்றும் வாழ, நீடித்த ஆயுளைக் கொடுத்தீர். நீர் கொடுத்த வெற்றிகளின் மூலம் அவருடைய மகிமை பெரியதாயிருக்கிறது; நீர் அவரை மகிமையாலும் மகத்துவத்தாலும் நிரப்பியிருக்கிறீர். நிச்சயமாகவே நீர் அவருக்கு நித்திய ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறீர்; உமது சமுகத்தின் ஆனந்தத்தால், அவரை மகிழ்ச்சியாக்கினீர். ஏனெனில் அரசன் யெகோவாவிலேயே நம்பிக்கை வைக்கிறார்; உன்னதமானவரின் உடன்படிக்கையின் அன்பினிமித்தம் அவர் அசைக்கப்படமாட்டார். உமது கரம் உம்முடைய பகைவர் எல்லோரையும் பிடிக்கும்; உமது வலதுகரம் உம்முடைய எதிரிகளைப் பிடித்துக்கொள்ளும். நீர் வரும் நேரத்தில் அவர்களை ஒரு நெருப்புச் சூளையைப்போல் ஆக்கிவிடுவீர். யெகோவா தமது கடுங்கோபத்தில் அவர்களை அழித்துவிடுவார்; அவருடைய நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும். நீர் அவர்களுடைய சந்ததிகளைப் பூமியிலிருந்து அழிப்பீர், அவர்களுடைய சந்ததிகளை மனுக்குலத்திலிருந்து அழிப்பீர். உமது பகைவர் உமக்கு எதிராக தீமையான சதி செய்தார்கள், பொல்லாத சதித்திட்டங்களை வகுத்தார்கள்; ஆனாலும் அவர்களால் வெற்றி பெறமுடியாது. நீர் வில்லை நாணேற்றி அவர்களை குறிபார்த்து எய்யும்போது, அவர்களை புறமுதுகு காட்டப்பண்ணுவீர். யெகோவாவே, உமது பெலத்தில் நீர் உயர்த்தப்பட்டிருப்பீராக; நாங்கள் உமது வல்லமையைப் பாடித் துதிப்போம்.
சங்கீதம் 21:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாக இருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாகச் சந்தோஷப்படுகிறார்! அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாமலிருக்கிறீர். (சேலா) உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் தலையில் பொற்கிரீடம் அணிவிக்கிறீர். அவர் உம்மிடத்தில் ஆயுளைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள நீடித்த ஆயுளை அளித்தீர். உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாக இருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு கொடுத்தீர். அவர் நீடித்த ஆசீர்வாதங்களை அவர்களுக்கு கொடுக்கிறார்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர். ஏனெனில் இராஜா யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறார்; உன்னதமான தேவனுடைய தயவினால் அசைக்கப்படாமல் இருப்பார். உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும். உமது கோபத்தின் காலத்திலே அவர்களை நெருப்புச் சூளையாக்கிப்போடுவீர்; யெகோவா தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; நெருப்பு அவர்களை அழிக்கும். அவர்கள் பிள்ளைகளை பூமியிலிருந்தும் அவர்கள் சந்ததியை மனுமக்களிலிருந்தும் அழிப்பீர். அவர்கள் உமக்கு விரோதமாக தீங்கு நினைத்தார்கள்; தீவினை செய்ய முயன்றார்கள்; ஒன்றும் வாய்க்காமல்போனது. உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைத் திரும்பி ஓடச்செய்கிறீர். யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடித் துதிப்போம்.
சங்கீதம் 21:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தாவே, உமது பெலன் ராஜாவை மகிழ்விக்கிறது. நீர் அவனை மீட்கும்போது அவன் மிகவும் சந்தோஷமடைகிறான். நீர் ராஜாவுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தீர். ராஜா சிலவற்றைக் கேட்டான். கர்த்தாவே, அவன் கேட்டவற்றை நீர் கொடுத்தீர். கர்த்தாவே, நீர் உண்மையாகவே ராஜாவை ஆசீர்வதித்தீர். அவன் தலையில் பொற்கிரீடத்தைச் சூட்டினீர். தேவனே ராஜா உம்மிடம், ஆயுளைக் கேட்டான். நீர் அதை அவனுக்குக் கொடுத்தீர். நீர் அவனுக்கு என்றென்றும் நிலைத்துத் தொடரும் நீண்ட ஆயுளைக் கொடுத்தீர். வெற்றிக்கு நேராக நீர் ராஜாவை வழிநடத்தினீர். அவனுக்குப் பெரும் மேன்மையைத் தந்தீர். அவனுக்குப் பெருமையையும், புகழையும் தந்தீர். தேவனே, நீர் உண்மையாகவே என்றென்றைக்கும் தேர்ந்தெடுத்த ராஜாவை ஆசீர்வதித்தீர். உமது உயர்ந்த வல்லமையை உபயோகித்து ராஜாவைப் பாதுகாத்தீர். ராஜா உம்முகத்தைப் பார்க்கும்போது அது அவனை மகிழச் செய்யும். ராஜா கர்த்தரை நம்புகிறான். உன்னதமான தேவனாகிய நீர் அவனை ஏமாற்றமாட்டீர். தேவனே, உமது பகைவர்க்கு உம் பெலனை உணர்த்துவீர். உம்மைப் பகைக்கிற அந்த ஜனங்களை உமது வல்லமை வெல்லும். கர்த்தாவே, நீர் ராஜாவோடு இருக்கும் போது, அவர் எல்லாவற்றையும் கொளுத்திவிடும் உலையைப்போல் இருப்பார். அவர் தன் பகைவர்களை அழிப்பார். அவரது பகைவர்களின் குடும்பங்கள் அழிக்கப்படும். அவர்கள் பூமியிலிருந்து அகற்றப்படுவார்கள். ஏனெனில் கர்த்தாவே, அந்த ஜனங்கள் தீயவற்றை உமக்கெதிராய் திட்டமிட்டார்கள். அவர்கள் தீயன செய்யத் திட்டமிட்டும் வெற்றி பெறவில்லை. கர்த்தாவே, அந்த ஜனங்களை அடிமைகளைப் போலாக்கினீர். நீர் அவர்களைக் கயிறுகளால் கட்டினீர். அவர்களின் கழுத்துக்களைச் சுற்றி கயிறுகளால் வளைத்தீர். அடிமைகளைப் போல் உம்மைக் குனிந்து வணங்கச் செய்தீர். கர்த்தாவே, உமது மகத்துவத்தில் நீர் உயர்ந்திரும். கர்த்தருடைய மேன்மையைப் பாடல்களால் பாடி இசைப்போம்!
சங்கீதம் 21:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்! அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா) உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர். அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர். உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாயிருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு அருளினீர். அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர். ராஜா கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருக்கிறார்; உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார். உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும். உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப்போடுவீர்; கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும். அவர்கள் கனியைப் பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரில் இராதபடி ஒழியப்பண்ணுவீர். அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்; தீவினையை எத்தனம் பண்ணினார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று. அவர்களை இலக்காக வைத்து, உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே விடுகிறீர். கர்த்தாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக் கீர்த்தனம் பண்ணுவோம்.