சங்கீத புத்தகம் 104:24-35

சங்கீத புத்தகம் 104:24-35 TAERV

கர்த்தாவே, நீர் பல அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர். பூமி, நீர் உண்டாக்கின பல பொருள்களால் நிரம்பியிருக்கிறது. நீர் செய்யும் ஒவ்வொன்றிலும் உமது ஞானத்தைக் காண்கிறோம். சமுத்திரத்தைப் பாருங்கள், அது எவ்வளவு பெரியது! பல உயிர்கள் அங்கு வாழ்கின்றன! எண்ணமுடியாத சிறியதும் பெரியதுமான உயிரினங்கள் அங்கு வாழ்கின்றன. நீர் உண்டாக்கின கடல் விலங்கான லிவியாதான் கடலில் விளையாடும்போது கப்பல்கள் சமுத்திரத்தின் மேல் பயணம் செய்கின்றன. தேவனே, எல்லாக்காரியங்களும் உம்மைச் சார்ந்திருக்கின்றன. தக்கநேரத்தில் நீர் அவற்றிற்கு உணவைக் கொடுக்கிறீர். தேவனே, எல்லா உயிரினங்களுக்கும் அவை உண்ணும் உணவை நீர் கொடுக்கிறீர். நல்ல உணவால் நிரம்பிய உமது கைகளை நீர் திறக்கிறீர், அவை வயிறு நிரம்பும்வரை அவற்றை உண்ணும். நீர் அவற்றை விட்டு விலகும்போது அவை அஞ்சும். அவற்றின் சுவாசம் அவற்றைவிட்டு நீங்கும். அவை சோர்ந்து மரிக்கும். அவற்றின் உடல்கள் மீண்டும் புழுதியாகிவிடும். ஆனால் கர்த்தாவே, நீர் உமது ஆவியை அனுப்பும்போது அவை ஆரோக்கியம் பெறும்! நீர் மீண்டும் நிலத்தைப் புதிதாகமாற்றுவீர். கர்த்தருடைய மகிமை என்றென்றும் தொடரட்டும்! கர்த்தர் தாம் உண்டாக்கின பொருள்களைக் கண்டு களிப்படையட்டும். கர்த்தர் பூமியைச்சற்றே பார்த்தால் அது அதிரும். அவர் மலைகளைத் தொட நேர்ந்தால் அவற்றிலிருந்து புகையெழத் தொடங்கும். என் ஆயுள் முழுவதும் நான் கர்த்தரைப் பாடுவேன். நான் வாழும்வரை கர்த்தரைத் துதித்துப் பாடுவேன். நான் கூறுபவை அவரை மகிழ்ச்சியாக்கும் என நம்புகிறேன். நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிறேன். பூமியிலிருந்து பாவம் மறைந்து போகட்டும். தீயோர் என்றென்றும் அழிந்து போவார்களாக.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்