நீதிமொழிகள் 4:10-19
நீதிமொழிகள் 4:10-19 TAERV
மகனே, நான் சொல்வதைக் கவனி. நான் சொல்லுகிறபடி செய்தால் நீ நீண்ட காலம் வாழலாம். நான் உனக்கு ஞானத்தைப்பற்றிப் போதித்திருக்கிறேன். நான் நேரான பாதையில் உன்னை வழிநடத்திச் சென்றிருக்கிறேன். இப்பாதையில் தொடர்ந்து செல், உனது கால்கள் எந்த வலைக்குள்ளும் அகப்படாது. இடறிவிழாமல் உன்னால் ஓடமுடியும். நீ செய்ய முயலுகிற செயல்களில் எல்லாம் பாதுகாப்பாக இருக்கலாம். எப்போதும் இந்த அறிவுரைகளை நினைவில் வைத்துக்கொள். அவற்றை மறக்காதே. அவை உனது ஜீவனாகும். தீயவர்கள் நடந்துசெல்லுகிற பாதையில் நீ போக வேண்டாம். அவர்களைப்போல வாழாதே. அவர்களைப் போன்று இருக்கவும் முயலவேண்டாம். பாவத்திலிருந்து விலகி இரு. அதன் அருகில் போகாதே. நேராகக் கடந்துசெல். தீமையைச் செய்துமுடிக்கும்வரை கெட்டவர்களால் தூங்கமுடியாது. அடுத்தவனைப் புண்படுத்தாமல் அவர்களால் தூங்கமுடியாது. அவர்களால் மற்றவர்களுக்குத் தீமை செய்யாமலும் மற்றவர்களைப் புண்படுத்தாமலும் வாழமுடியாது. நல்லவர்கள் அதிகாலை வெளிச்சத்தைப் போன்றவர்கள். சூரியன் உதிக்கும்போது நாளானது பிரகாசமும், மகிழ்ச்சியும் அடைகின்றது. ஆனால் தீயவர்களோ இருண்ட இரவைப் போன்றவர்கள். அவர்கள் இருளில் காணாமற்போவார்கள். அவர்கள் தங்களால் பார்க்க முடியாதவற்றில் விழுந்துவிடுவார்கள்.



