மத்தேயு எழுதிய சுவிசேஷம் 8:18-34

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 8:18-34 TAERV

அனைத்து மக்களும் தன்னைச் சுற்றி இருப்பதை இயேசு கண்டார். எனவே, இயேசு தன் சீஷர்களிடம் ஏரியின் மறு கரைக்குச் செல்லுமாறு கூறினார். பின் வேதபாரகரில் ஒருவன் இயேசுவிடம் வந்து, “போதகரே, நீர் போகுமிடமெல்லாம் நான் உங்களைத் தொடர்ந்து வருவேன்” என்றான். அதற்கு இயேசு, “நரிகள் தாம் வாழ குழிகளைப் பெற்றுள்ளன. பறவைகள் தாம் வாழ கூடுகளைப் பெற்றுள்ளன. ஆனால், மனிதகுமாரனுக்குத் தலை சாய்க்க ஓரிடமும் இல்லை” என்று கூறினார். இயேசுவின் சீஷர்களில் மற்றொருவன் அவரிடம், “போதகரே, நான் போய் முதலில் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுப் பின், உம்மைத் தொடர்ந்து வருகிறேன்” என்றான். ஆனால் இயேசு அவனிடம், “என்னைப் பின்பற்றி வா. மரித்தோர் தம் மரித்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும்” என்றார். இயேசு ஒரு படகில் ஏறினார். அவரது சீஷர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். படகு கரையை விட்டுப் புறப்பட்ட பின்னர், கடலில் மிகப் பலமான புயல் உருவானது. படகை அலைகள் சூழ்ந்தன. ஆனால், இயேசு அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார். அவரது சீஷர்கள் அவரிடம் சென்று அவரை எழுப்பினார்கள். அவர்கள், “ஆண்டவரே! எங்களைக் காப்பாற்றும். இல்லையேல் நாங்கள் மூழ்கிவிடுவோம்!” என்று சொன்னார்கள். இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்குப் போதிய விசுவாசம் இல்லை” என்று கூறினார். பின்பு, இயேசு எழுந்து நின்று காற்றுக்கும் அலைகளுக்கும் ஒரு கட்டளை பிறப்பித்தார். காற்று நின்றது. கடல் மிகவும் அமைதியானது. படகிலிருந்தவர்கள் வியப்புற்று, “எப்படிப்பட்ட மனிதர் இவர்? காற்றும் கடலும் கூட இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று கூறி வியப்படைந்தனர். இயேசு கெதரேனே மக்கள் வசிக்கும் ஏரியின் மறு கரையை வந்தடைந்தார். அங்கு இருவர் இயேசுவிடம் வந்தனர். அவர்களுக்குப் பிசாசுகள் பிடித்திருந்தன. அவர்கள் இருவரும் கல்லறைகள் இருக்குமிடத்தில் வாழ்ந்தனர். மிக அபாயமானவர்கள் அவர்கள். எனவே, மக்கள் அவர்கள் வசித்த கல்லறைகளுக்கு அருகில் சென்ற பாதைகளை உபயோகிக்க இயலவில்லை. இயேசுவிடம் வந்த அவ்விருவரும், “தேவகுமாரனே, எங்களிடமிருந்து என்ன வேண்டும்? தக்க சமயத்திற்கு முன்பாகவே எங்களைத் துன்புறுத்த வந்தீரோ?” என்று சத்தமிட்டனர். அந்த இடத்திற்கு அருகில் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துக்கொண்டிருந்தன. அவர்களைப் பிடித்திருந்த பிசாசுகள் இயேசுவிடம், “இவர்களை விட்டு எங்களை வெளியேற்றுவதானால், தயவுசெய்து நாங்கள் அந்த பன்றி கூட்டத்திற்குள் செல்லவிடுங்கள்” என்று கெஞ்சின. இயேசு பிசாசுகளிடம், “செல்லுங்கள்” என்றார். உடனே, அப்பிசாசுகள் அவர்களை விட்டு நீங்கி பன்றி கூட்டத்திற்குள் சென்றன. பிறகு, அப்பன்றிக் கூட்டம் முழுவதும் குன்றிலிருந்து கீழிறங்கி ஏரிக்குள் ஓடின. எல்லாப் பன்றிகளும் நீரில் மூழ்கின. பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்த ஆட்கள் நகரத்திற்குள் ஓடினார்கள். அவர்கள் நகர மக்களிடம் பிசாசு பிடித்திருந்த இருவருக்கும் பன்றிகளுக்கும் என்ன நடந்தது என்பதைக் கூறினார்கள். பிறகு, அந்த நகர மக்கள் அனைவரும் இயேசுவைக் காணச் சென்றனர். இயேசுவைக் கண்ட மக்கள், அவர்களது இடத்தைவிட்டு அவரை விலகிச் செல்லுமாறு கெஞ்சினர்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்