மத்தேயு 8:18-34

மத்தேயு 8:18-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தன்னைச் சுற்றி நின்ற கூட்டத்தை இயேசு கண்டபோது, அவர் தம்முடைய சீடர்களிடம், மறுகரைக்குப் போகும்படி, கட்டளையிட்டார். அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட ஆசிரியன் அவரிடம் வந்து, “போதகரே, நீர் போகும் இடமெல்லாம் நான் உம்மைப் பின்பற்றுவேன்” என்றான். இயேசு அதற்குப் பதிலாக, “நரிகளுக்குக் குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. ஆனால் மானிடமகனாகிய எனக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்றார். இன்னொரு சீடன் அவரிடம், “ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனை அடக்கம் செய்துவிட்டு வர எனக்கு அனுமதிகொடும்” என்றான். அதற்கு இயேசு அவனிடம், “நீ என்னைப் பின்பற்று. மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்” என்றார். அதற்குப் பின்பு இயேசு படகில் ஏறினார். அவரது சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அப்பொழுது திடீரென ஒரு புயல்காற்று கடலின்மேல் வீசியது; அலைகள் படகிற்கு மேலாக மோதியது. இயேசுவோ தூங்கிக்கொண்டிருந்தார். சீடர்கள் இயேசுவிடம் வந்து, அவரை எழுப்பி, “ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்! நாங்கள் தண்ணீரில் மூழ்கப்போகிறோம்!” என்று அவரிடம் சொன்னார்கள். அதற்கு இயேசு, “விசுவாசக் குறைவுள்ளவர்களே! நீங்கள் ஏன் இவ்வளவாய் பயப்படுகிறீர்கள்?” எனக் கேட்டார். பின்பு அவர் எழுந்து காற்றையும் அலைகளையும் கடிந்துகொண்டார். அப்பொழுது மிகுந்த அமைதி உண்டாயிற்று. அதைக் கண்டவர்கள் வியப்படைந்து, “இவர் எப்படிப்பட்டவரோ? காற்றும் அலைகளுங்கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே!” என்று பேசிக்கொண்டார்கள். இயேசு மறுபக்கத்திலுள்ள கதரேனருடைய நாட்டிற்கு வந்தபோது, பிசாசு பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வந்து அவரைச் சந்தித்தனர். ஒருவரும் அந்த வழியாய்ச் செல்லமுடியாதவாறு, அவர்கள் மிகவும் கொடூரமானவர்களாய் இருந்தார்கள். அவர்கள், “இறைவனின் மகனே, உமக்கு எங்களிடம் என்ன வேண்டும்? நியமிக்கப்பட்ட காலம் வருமுன், எங்களைச் சித்திரவதை செய்யவா நீர் இங்கே வந்தீர்?” என உரத்த சத்தமிட்டார்கள். அவர்களுக்கு கொஞ்சம் தூரத்தில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தது. பிசாசுகள் இயேசுவிடம், “நீர் எங்களை வெளியே விரட்டுவதானால், பன்றிக்கூட்டத்திற்குள் அனுப்பிவிடும்” என்று கெஞ்சிக்கேட்டன. இயேசு அவைகளிடம், “போங்கள்!” என்றார். எனவே அவைகள் வெளியே வந்து, பன்றிகளுக்குள் புகுந்துகொண்டன. அந்த முழுப்பன்றிக்கூட்டமும், மேட்டிலிருந்து விரைந்தோடி, கடலுக்குள் விழுந்து செத்தன. பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பட்டணத்திற்குள் ஓடிப்போய், பிசாசு பிடித்தவர்களுக்கு நிகழ்ந்ததையும், நடந்த எல்லாவற்றையும் அறிவித்தார்கள். அப்பொழுது பட்டணத்திலுள்ள யாவரும் இயேசுவை சந்திக்க வெளியே வந்து. அவர்கள் இயேசுவைக் கண்டபோது, தங்களுடைய பகுதியைவிட்டுப் போய்விடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.

மத்தேயு 8:18-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு, திரளான மக்கள் தம்மைச் சுற்றியிருக்கிறதை இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார். அப்பொழுது, வேதபண்டிதன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனிதகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். அவருடைய சீடர்களில் வேறொருவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்செய்ய எனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம் செய்யட்டும், நீ என்னைப் பின்பற்றிவா என்றார். அவர் படகில் ஏறினபோது அவருடைய சீடர்கள் அவருக்குப் பின்னேசென்று ஏறினார்கள். அப்பொழுது படகு அலைகளினால் மூடப்படத்தக்கதாகக் கடலில் பெருங்காற்று உண்டானது. அவரோ தூங்கிக்கொண்டிருந்தார். அப்பொழுது, அவருடைய சீடர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களைக் காப்பாற்றும், மரித்துப்போகிறோம் என்றார்கள். அதற்கு அவர்: விசுவாசக்குறைவுள்ளவர்களே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டானது. அந்த மனிதர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள். அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டிற்கு வந்தபோது, பிசாசுகள் பிடித்திருந்த இரண்டுபேர் கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியவர்களாக இருந்தபடியால், அந்தவழியாக ஒருவனும் நடக்கக்கூடாமலிருந்தது. அவர்கள் அவரைப் பார்த்து: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று சத்தமிட்டார்கள். அவர்களுக்கு சிறிது தூரத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி அனுமதிகொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன. அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிகளுக்குள் சென்றன; அப்பொழுது, பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து தண்ணீரில் இறந்துபோயின. அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் செய்திகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்கு நடந்தவைகளையும் அறிவித்தார்கள். அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் அனைவரும் இயேசுவிற்கு எதிர்கொண்டுவந்து, அவரைக்கண்டு, தங்களுடைய எல்லைகளைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.

மத்தேயு 8:18-34 பரிசுத்த பைபிள் (TAERV)

அனைத்து மக்களும் தன்னைச் சுற்றி இருப்பதை இயேசு கண்டார். எனவே, இயேசு தன் சீஷர்களிடம் ஏரியின் மறு கரைக்குச் செல்லுமாறு கூறினார். பின் வேதபாரகரில் ஒருவன் இயேசுவிடம் வந்து, “போதகரே, நீர் போகுமிடமெல்லாம் நான் உங்களைத் தொடர்ந்து வருவேன்” என்றான். அதற்கு இயேசு, “நரிகள் தாம் வாழ குழிகளைப் பெற்றுள்ளன. பறவைகள் தாம் வாழ கூடுகளைப் பெற்றுள்ளன. ஆனால், மனிதகுமாரனுக்குத் தலை சாய்க்க ஓரிடமும் இல்லை” என்று கூறினார். இயேசுவின் சீஷர்களில் மற்றொருவன் அவரிடம், “போதகரே, நான் போய் முதலில் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுப் பின், உம்மைத் தொடர்ந்து வருகிறேன்” என்றான். ஆனால் இயேசு அவனிடம், “என்னைப் பின்பற்றி வா. மரித்தோர் தம் மரித்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும்” என்றார். இயேசு ஒரு படகில் ஏறினார். அவரது சீஷர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். படகு கரையை விட்டுப் புறப்பட்ட பின்னர், கடலில் மிகப் பலமான புயல் உருவானது. படகை அலைகள் சூழ்ந்தன. ஆனால், இயேசு அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தார். அவரது சீஷர்கள் அவரிடம் சென்று அவரை எழுப்பினார்கள். அவர்கள், “ஆண்டவரே! எங்களைக் காப்பாற்றும். இல்லையேல் நாங்கள் மூழ்கிவிடுவோம்!” என்று சொன்னார்கள். இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்குப் போதிய விசுவாசம் இல்லை” என்று கூறினார். பின்பு, இயேசு எழுந்து நின்று காற்றுக்கும் அலைகளுக்கும் ஒரு கட்டளை பிறப்பித்தார். காற்று நின்றது. கடல் மிகவும் அமைதியானது. படகிலிருந்தவர்கள் வியப்புற்று, “எப்படிப்பட்ட மனிதர் இவர்? காற்றும் கடலும் கூட இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று கூறி வியப்படைந்தனர். இயேசு கெதரேனே மக்கள் வசிக்கும் ஏரியின் மறு கரையை வந்தடைந்தார். அங்கு இருவர் இயேசுவிடம் வந்தனர். அவர்களுக்குப் பிசாசுகள் பிடித்திருந்தன. அவர்கள் இருவரும் கல்லறைகள் இருக்குமிடத்தில் வாழ்ந்தனர். மிக அபாயமானவர்கள் அவர்கள். எனவே, மக்கள் அவர்கள் வசித்த கல்லறைகளுக்கு அருகில் சென்ற பாதைகளை உபயோகிக்க இயலவில்லை. இயேசுவிடம் வந்த அவ்விருவரும், “தேவகுமாரனே, எங்களிடமிருந்து என்ன வேண்டும்? தக்க சமயத்திற்கு முன்பாகவே எங்களைத் துன்புறுத்த வந்தீரோ?” என்று சத்தமிட்டனர். அந்த இடத்திற்கு அருகில் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துக்கொண்டிருந்தன. அவர்களைப் பிடித்திருந்த பிசாசுகள் இயேசுவிடம், “இவர்களை விட்டு எங்களை வெளியேற்றுவதானால், தயவுசெய்து நாங்கள் அந்த பன்றி கூட்டத்திற்குள் செல்லவிடுங்கள்” என்று கெஞ்சின. இயேசு பிசாசுகளிடம், “செல்லுங்கள்” என்றார். உடனே, அப்பிசாசுகள் அவர்களை விட்டு நீங்கி பன்றி கூட்டத்திற்குள் சென்றன. பிறகு, அப்பன்றிக் கூட்டம் முழுவதும் குன்றிலிருந்து கீழிறங்கி ஏரிக்குள் ஓடின. எல்லாப் பன்றிகளும் நீரில் மூழ்கின. பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்த ஆட்கள் நகரத்திற்குள் ஓடினார்கள். அவர்கள் நகர மக்களிடம் பிசாசு பிடித்திருந்த இருவருக்கும் பன்றிகளுக்கும் என்ன நடந்தது என்பதைக் கூறினார்கள். பிறகு, அந்த நகர மக்கள் அனைவரும் இயேசுவைக் காணச் சென்றனர். இயேசுவைக் கண்ட மக்கள், அவர்களது இடத்தைவிட்டு அவரை விலகிச் செல்லுமாறு கெஞ்சினர்.

மத்தேயு 8:18-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு, திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதை இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார். அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள். அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. அவரோ நித்திரையாயிருந்தார். அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள். அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று. அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள். அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியாக ஒருவனும் நடக்கக்கூடாதிருந்தது. அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள். அவர்களுக்குக் கொஞ்சதூரத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவுகொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன. அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிக்கூட்டத்தில் போயின; அப்பொழுது, பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து ஜலத்தில் மாண்டுபோயின. அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் சங்கதிகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்குச் சம்பவித்தவைகளையும் அறிவித்தார்கள். அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் யாவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டுவந்து, அவரைக் கண்டு, தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்