எரேமியாவின் புலம்பல் 3:46-66

எரேமியாவின் புலம்பல் 3:46-66 TAERV

எங்களது பகைவர்கள் எல்லாம் எங்களுடன் கோபத்தோடு பேசுகிறார்கள். நாங்கள் பயந்திருக்கிறோம். நாங்கள் குழியில் விழுந்திருக்கிறோம். நாங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் உடைந்திருக்கிறோம்!” என்கிறேன். எனது கண்களில் கண்ணீர் ஓடை பாய்கின்றது! எனது ஜனங்களின் அழிவினால் நான் அழுகிறேன். எனது கண்களில் கண்ணீர் நிறுத்தப்படாமல் பாய்ந்துக்கொண்டிருக்கின்றன! நான் அழுதுகொண்டேயிருக்கிறேன்! கர்த்தாவே, நீர் என்னைக் கீழே பார்க்கிறவரை, நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்! நீர் பரலோகத்திலிருந்து பார்க்கிறவரை நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்! எனது நகரத்தில் பெண்களுக்கு என்ன ஏற்பட்டது என்று பார்க்கும்போது என் கண்கள் என்னைத் துக்கமுறச் செய்தன. அந்த ஜனங்கள் காரணம் இல்லாமலேயே எனக்குப் பகைவர்கள் ஆனார்கள். ஆனால் அவர்கள் என்னைப் பறவையைப்போன்று வேட்டையாடினார்கள். நான் உயிரோடு இருக்கும்போதே என்னைப் பள்ளத்தில் போட்டார்கள். அவர்கள் என்மீது கல்லையும் எறிந்தார்கள். என் தலைக்கு மேலே தண்ணீர் வந்தது. “நான் முடிந்து போனேன்” என்று எனக்குள் சொன்னேன். கர்த்தாவே, நான் உமது நாமத்தை அழைத்தேன். நான் பள்ளத்திற்குள்ளிருந்து உமது நாமத்தைச் சொல்லி அழைத்தேன். நீர் எனது சத்தத்தைக் கேட்டீர். நீர் உமது காதுகளை மூடவில்லை. நீர் என்னை மீட்பதற்கு மறுக்கவில்லை. நான் உம்மை அழைத்த நாளன்று நீர் என்னிடம் வந்தீர். “பயப்படாதே” என்று நீர் என்னிடம் சொன்னீர். கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றினீர். நீர் எனது உயிரை மீண்டும் எனக்காக மீட்டுக் கொண்டு வந்தீர். கர்த்தாவே, நீர் எனது துன்பங்களைப் பார்த்தீர். இப்பொழுது எனக்காக எனது வழக்கை நியாயந்தீரும். எனது பகைவர்கள் எவ்வாறு என்னைக் காயப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறீர். அவர்கள் எனக்கு எதிராகச் செய்த அனைத்து தீயத் திட்டங்களையெல்லாம் நீர் பார்த்திருக்கிறீர். கர்த்தாவே, அவர்கள் என்னை நிந்தித்ததைக் கேட்டீர். அவர்கள் எனக்கு எதிராகச் செய்த அனைத்து தீயத் திட்டங்களைப்பற்றி கேள்விப்பட்டீர். எல்லா நேரத்திலும் எனது பகைவர்களின் வார்த்தைகளும் எண்ணங்களும் எனக்கு எதிராக இருக்கின்றன. கர்த்தாவே, அவர்கள் உட்காரும்போதும், எழுந்திருக்கும் போதும், என்னை எவ்வாறு பரிகாசம் செய்கிறார்கள் என்று பாரும்! கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்ததிற்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும்! அவர்கள் செய்திருப்பதை அவர்களுக்குத் திருப்பிக்கொடும்! அவர்களுக்கு கடினமான இதயத்தைக் கொடும்! பிறகு, அவர்கள் மீது உமது சாபத்தைக் கொடும்! அவர்களைக் கோபத்தோடு துரத்தும்! அழியும்! கர்த்தாவே, வானத்தின் கீழே அவர்களை அழித்துவிடும்!

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த எரேமியாவின் புலம்பல் 3:46-66