புலம்பல் 3:46-66
புலம்பல் 3:46-66 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“எங்கள் பகைவர்கள் யாவரும் தங்கள் வாயை விரிவாகத் திறந்து எங்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள். எங்கள்மேல் பயங்கரமும் கண்ணியும், பாழும் அழிவும் வந்தன.” என் மக்கள் அழிக்கப்பட்டதனால் என் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் ஓடுகிறது. என் கண்கள் ஓய்வின்றி, கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும். பரலோகத்திலிருந்து யெகோவா கண்ணோக்கிப் பார்க்கும் வரைக்கும். என் நகரத்திலுள்ள பெண்களின் நிலைமையை நான் காண்கையில், என் ஆத்துமா துக்கிக்கிறது. காரணமின்றி எனக்குப் பகைவர்களாயிருந்தவர்கள், என்னை ஒரு பறவையைப்போல் வேட்டையாடினார்கள். அவர்கள் என் வாழ்வை முடிக்க முயன்று, குழியில் தள்ளி என்மேல் கற்களை எறிந்து மூடினார்கள்; வெள்ளம் என் தலையை மூடிக்கொண்டது. நான் அழிந்து போகப்போகிறேன் என்று நினைத்தேன். யெகோவாவே, குழியின் ஆழத்திலிருந்து, உமது பெயரைச்சொல்லிக் கூப்பிட்டேன். “ஆறுதலுக்காகக் கதறும் என் சத்தத்திற்கு உமது செவியை மூடிக்கொள்ளாதேயும்” என்ற என் விண்ணப்பத்தை நீர் கேட்டீர். நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, நீர் என் அருகே வந்து, “நீ பயப்படாதே” என்றீர். யெகோவாவே, நீரே என் வழக்கை பொறுப்பேற்றீர்; என் உயிரை மீட்டுக்கொண்டீர். யெகோவாவே! எனக்குச் செய்யப்பட்ட தீமைகளை நீர் கண்டிருக்கிறீர். நீர் எனக்காக வாதாடும்! அவர்களுடைய பழிவாங்குதலின் ஆழத்தையும், அவர்கள் எனக்கெதிராகப் போட்ட சதித்திட்டங்களையும் கண்டிருக்கிறீர். யெகோவாவே, அவர்களுடைய எல்லா அவமதிப்புகளையும், எனக்கெதிரான அவர்களுடைய எல்லா சதிகளையும் கேட்டீர்; அதை என் பகைவர்கள் நாள்முழுவதும் இரகசியமாய்ப் பேசி, எனக்கு எதிராய் முணுமுணுக்கிறார்கள். அவர்களைப் பாரும்! உட்கார்ந்தாலும் நின்றாலும், அவர்கள் தங்கள் பாடல்களால் என்னை கேலி செய்கிறார்கள். யெகோவாவே, அவர்களுக்குத் தகுந்த பதில் செய்யும். அவர்களின் கைகள் செய்தவற்றுக்காக பதில் செய்யும். அவர்களுடைய இருதயத்தின்மேல் திரைபோடும், உமது சாபம் அவர்கள்மேல் இருக்கட்டும். கோபத்தோடு அவர்களைப் பின்தொடர்ந்து, யெகோவாவின் வானங்களின் கீழ் இருந்து அவர்களை அழித்துப்போடும்.
புலம்பல் 3:46-66 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எங்கள் பகைவர்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகத் தங்கள் வாயைத் திறந்தார்கள். பயமும், படுகுழியும், பயனற்றநிலையும், அழிவும் எங்களுக்கு நேரிட்டது. மகளாகிய என் மக்கள் அடைந்த கேட்டினால் என் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது. யெகோவா பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்கும்வரை, என் கண் இடைவிடாமல் ஓய்வின்றி வழிகிறது. என் பட்டணத்தின் பெண்கள் அனைவரினிமித்தம், என் கண் என் ஆத்துமாவுக்கு வேதனையுண்டாக்குகிறது. காரணமே இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பறவையைப்போல வேட்டையாடினார்கள். படுகுழியிலே என் உயிரை ஒடுக்கி, என்மேல் கல்லைவைத்தார்கள். தண்ணீர் என் தலைக்குமேல் வந்தது; அழிந்தேன் என்றேன். மகா ஆழமான குழியிலிருந்து, யெகோவாவே, உம்முடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன். என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும். நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் கேட்டு: பயப்படாதே என்றீர். ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் உயிரை மீட்டுக்கொண்டீர். யெகோவாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; எனக்கு நியாயம் செய்யும். அவர்களுடைய எல்லா விரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர். யெகோவாவே, அவர்கள் அவமதித்த அவமானங்களையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும், எனக்கு விரோதமாக எழும்பினவர்களின் வாய்ச்சொற்களையும், அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாக யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர். அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன். யெகோவாவே, அவர்களுடைய கைகள் செய்த செயல்களுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் கொடுப்பீர். அவர்களுக்கு மனவேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும். கோபமாக அவர்களைப் பின்தொடர்ந்து, யெகோவாவுடைய வானங்களின் கீழே அவர்கள் இல்லாதபடி அவர்களை அழித்துவிடுவீர்.
புலம்பல் 3:46-66 பரிசுத்த பைபிள் (TAERV)
எங்களது பகைவர்கள் எல்லாம் எங்களுடன் கோபத்தோடு பேசுகிறார்கள். நாங்கள் பயந்திருக்கிறோம். நாங்கள் குழியில் விழுந்திருக்கிறோம். நாங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் உடைந்திருக்கிறோம்!” என்கிறேன். எனது கண்களில் கண்ணீர் ஓடை பாய்கின்றது! எனது ஜனங்களின் அழிவினால் நான் அழுகிறேன். எனது கண்களில் கண்ணீர் நிறுத்தப்படாமல் பாய்ந்துக்கொண்டிருக்கின்றன! நான் அழுதுகொண்டேயிருக்கிறேன்! கர்த்தாவே, நீர் என்னைக் கீழே பார்க்கிறவரை, நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்! நீர் பரலோகத்திலிருந்து பார்க்கிறவரை நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்! எனது நகரத்தில் பெண்களுக்கு என்ன ஏற்பட்டது என்று பார்க்கும்போது என் கண்கள் என்னைத் துக்கமுறச் செய்தன. அந்த ஜனங்கள் காரணம் இல்லாமலேயே எனக்குப் பகைவர்கள் ஆனார்கள். ஆனால் அவர்கள் என்னைப் பறவையைப்போன்று வேட்டையாடினார்கள். நான் உயிரோடு இருக்கும்போதே என்னைப் பள்ளத்தில் போட்டார்கள். அவர்கள் என்மீது கல்லையும் எறிந்தார்கள். என் தலைக்கு மேலே தண்ணீர் வந்தது. “நான் முடிந்து போனேன்” என்று எனக்குள் சொன்னேன். கர்த்தாவே, நான் உமது நாமத்தை அழைத்தேன். நான் பள்ளத்திற்குள்ளிருந்து உமது நாமத்தைச் சொல்லி அழைத்தேன். நீர் எனது சத்தத்தைக் கேட்டீர். நீர் உமது காதுகளை மூடவில்லை. நீர் என்னை மீட்பதற்கு மறுக்கவில்லை. நான் உம்மை அழைத்த நாளன்று நீர் என்னிடம் வந்தீர். “பயப்படாதே” என்று நீர் என்னிடம் சொன்னீர். கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றினீர். நீர் எனது உயிரை மீண்டும் எனக்காக மீட்டுக் கொண்டு வந்தீர். கர்த்தாவே, நீர் எனது துன்பங்களைப் பார்த்தீர். இப்பொழுது எனக்காக எனது வழக்கை நியாயந்தீரும். எனது பகைவர்கள் எவ்வாறு என்னைக் காயப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறீர். அவர்கள் எனக்கு எதிராகச் செய்த அனைத்து தீயத் திட்டங்களையெல்லாம் நீர் பார்த்திருக்கிறீர். கர்த்தாவே, அவர்கள் என்னை நிந்தித்ததைக் கேட்டீர். அவர்கள் எனக்கு எதிராகச் செய்த அனைத்து தீயத் திட்டங்களைப்பற்றி கேள்விப்பட்டீர். எல்லா நேரத்திலும் எனது பகைவர்களின் வார்த்தைகளும் எண்ணங்களும் எனக்கு எதிராக இருக்கின்றன. கர்த்தாவே, அவர்கள் உட்காரும்போதும், எழுந்திருக்கும் போதும், என்னை எவ்வாறு பரிகாசம் செய்கிறார்கள் என்று பாரும்! கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்ததிற்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும்! அவர்கள் செய்திருப்பதை அவர்களுக்குத் திருப்பிக்கொடும்! அவர்களுக்கு கடினமான இதயத்தைக் கொடும்! பிறகு, அவர்கள் மீது உமது சாபத்தைக் கொடும்! அவர்களைக் கோபத்தோடு துரத்தும்! அழியும்! கர்த்தாவே, வானத்தின் கீழே அவர்களை அழித்துவிடும்!
புலம்பல் 3:46-66 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எங்கள் பகைஞர் எல்லாரும் எங்களுக்கு விரோதமாய்த் தங்கள் வாயைத் திறந்தார்கள். திகிலும் படுகுழியும் பாழ்க்கடிப்பும் சங்காரமும் எங்களுக்கு நேரிட்டது. என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது. கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும், என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது. என் நகரத்தினுடைய குமாரத்திகள் அனைவரினிமித்தமும், என் கண் என் ஆத்துமாவுக்கு நோவுண்டாக்குகிறது. முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட்சியைப்போல வேட்டையாடினார்கள். காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லைவைத்தார்கள். தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன். மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப்பற்றிக் கூப்பிட்டேன். என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும். நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர். ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் பிராணனை மீட்டுக்கொண்டீர். கர்த்தாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; என் நியாயத்தைத் தீரும். அவர்களுடைய எல்லாக் குரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர். கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும், எனக்கு விரோதமாய் எழும்பினவர்களின் வாய்மொழிகளையும், அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாய் யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர். அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன். கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்த கிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர். அவர்களுக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும். கோபமாய் அவர்களைப் பின்தொடர்ந்து கர்த்தருடைய வானங்களின் கீழ் இராதபடிக்கு அவர்களை அழித்துவிடுவீர்.