யாத்திராகமம் 23:1-9

யாத்திராகமம் 23:1-9 TAERV

“பிறருக்கு விரோதமாகப் பொய் பேசாதீர்கள். சாட்சி சொல்லும்படி நீதி மன்றத்துக்கு நீங்கள் சென்றால், ஒரு தீய மனிதன் பொய் சொல்வதற்கு உதவாதீர்கள். “பிறர் செய்கிறார்கள் என்பதால் மட்டுமே நீங்கள் சிலவற்றைச் செய்யாதீர்கள். ஒரு கூட்டம் ஜனங்கள் தவறு செய்தால் அவர்களோடு சேராதீர்கள். அந்த ஜனங்கள் உங்களை தீயவற்றைச் செய்யும்படியாகத் தூண்டவிடாதீர்கள். எது சரியென்றும் நியாயமானதென்றும் தெரிகிறதோ, அதையே செய்யுங்கள். “ஒரு ஏழை நியாயந்தீர்க்கப்படுகையில் அவன் மீதுள்ள இரக்கத்தினால் ஜனங்கள் அவனுக்கு ஆதரவாக இருக்கலாம். ஆனால், நீங்கள் அவ்வாறு செய்யக்கூடாது. அவன் செய்தது சரியாக இருந்தால் மட்டுமே அவனுக்கு ஆதரவாக இருங்கள். “காணாமற்போன மாட்டையோ, கழுதையையோ பார்த்தீர்களானால், அதை அதன் உரிமையாளனிடம் சேர்ப்பிக்க வேண்டும். அதன் உரிமையாளன் உனது பகைவனாக இருந்தாலும், நீ அதைச் செய்ய வேண்டும். “மிகுந்த பாரத்தால் நடக்க முடியாத மிருகத்தைக் கண்டால் அதை நிறுத்தி அதற்கு உதவ வேண்டும். அது உனது பகைவர்களில் ஒருவனுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் அம்மிருகத்திற்கு நீ உதவ வேண்டும். “ஒரு ஏழை மனிதனுக்கு ஜனங்கள் அநியாயம் செய்ய விடாதே. அவனும் பிறரைப் போன்றே நியாயந்தீர்க்கப்பட வேண்டும். “ஒருவன் குற்றவாளி என நீ கூறும்போது எச்சரிக்கையாக இரு. ஒருவனுக்கு எதிராக வீண் பழி சுமத்தாதே. குற்றமற்ற ஒருவன் செய்யாத செயலுக்குத் தண்டனையாகக் கொல்லப்படுவதற்கு வகை செய்யாதே. குற்றமற்ற மனிதனைக் கொல்பவன் கொடியவன். அம்மனிதனை நான் மன்னிக்கமாட்டேன். “ஒருவன் தவறு செய்யும்போது அவன் செயலை ஆமோதிப்பதற்காக ஒருவன் உனக்கு லஞ்சம் கொடுக்க வந்தால் அதை ஏற்றுக்கொள்ளாதே. நீதிபதிகள் உண்மையைப் பார்க்காதபடிக்கு இத்தகைய பணம் நீதிபதிகளைக் குருடாக்கும். அந்தப் பணம் உண்மையுள்ளவர்களையும் பொய்யராக்கும். “அந்நியனுக்குத் தீங்குசெய்யாதீர்கள். எகிப்து தேசத்தில் வாழ்ந்தபோது நீங்களும் அந்நியராக இருந்ததை நினைவு கூருங்கள்.

யாத்திராகமம் 23:1-9 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்