யாத்திராகமம் 23:1-9

யாத்திராகமம் 23:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாயாக; கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக. தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக. வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக. உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக. உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்து கிடக்கக்கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக. உன்னிடத்திலிருக்கிற எளியவனுடைய வியாச்சியத்தில் அவனுடைய நியாயத்தைப் புரட்டாயாக. கள்ளக்காரியத்துக்குத் தூரமாயிருப்பாயாக; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாயாக; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன். பரிதானம் வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும். அந்நியனை ஒடுக்காயாக; எகிப்துதேசத்தில் அந்நியர்களாயிருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே.

யாத்திராகமம் 23:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“பொய் வதந்திகளைப் பரப்பவேண்டாம். தீயநோக்கமுள்ள சாட்சியாய் இருந்து கொடியவனுக்கு உதவவேண்டாம். “பிழையானதைச் செய்யும் மக்கள் கூட்டத்தைப் பின்பற்றவேண்டாம். ஒரு வழக்கில் நீங்கள் சாட்சி கொடுக்கும்போது, அதிகமான மக்களுக்கு சார்பாக இருந்து நீதியைப் புரட்டவேண்டாம். ஒரு ஏழையின் வழக்கிலே அவனுக்கு பட்சபாதம் காட்டவேண்டாம். “உங்கள் பகைவனுடைய மாட்டையோ அல்லது கழுதையையோ வழிதப்பி திரிகிறதை நீங்கள் காணநேரிட்டால், அதைத் திரும்பவும் அவனிடம் கொண்டுபோய்விடத் தவறவேண்டாம். உங்களை வெறுக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டால், அதை அங்கேயே விட்டுவிட்டுப் போகவேண்டாம். அவனுக்கு உதவிசெய்யவும் தவறவேண்டாம். “உங்களிடத்தில் இருக்கும் ஏழை மக்களுக்கு அவர்களுடைய வழக்கில் நீதிவழங்க மறுக்கவேண்டாம். பொய்க்குற்றச்சாட்டுடன் சம்பந்தப்படவேண்டாம். குற்றமற்றவனையும், உண்மையுள்ளவனையும் கொலைசெய்ய வேண்டாம். ஏனெனில் நான் குற்றவாளியைத் தண்டியாமல் விடமாட்டேன். “இலஞ்சம் வாங்கவேண்டாம், இலஞ்சம் பார்வையுள்ளவர்களைக் குருடராக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டுகிறது. “பிறநாட்டினனை ஒடுக்கவேண்டாம்; பிறநாட்டினராய் இருப்பது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமே. ஏனெனில், நீங்களும் எகிப்தில் பிறநாட்டினராய் இருந்தீர்களே.

யாத்திராகமம் 23:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாதே; கொடுமையுள்ள சாட்சிக்காரனாக இருக்க ஆகாதவனோடு சேராதே. தீமைசெய்ய அநேகம்பேர்களின் வழியைப் பின்பற்றாதே; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட கூட்டத்தின் பக்கம் சாய்ந்து, தீர்ப்பு சொல்லாதே. வழக்கிலே தரித்திரனுடைய முகத்தைப் பார்க்காதே. உன்னுடைய எதிரியின் மாடோ அவனுடைய கழுதையோ தப்பிப்போவதைப் பார்த்தால், அதைத் திரும்ப அவனிடம் கொண்டுபோய் விடு. உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடு விழுந்திருப்பதைப் பார்த்தால், அதற்கு உதவிசெய்யாமல் இருக்கலாமா? அவசியமாக அவனுடன்கூட அதற்கு உதவிசெய்யவேண்டும். உன்னிடத்தில் இருக்கிற எளியவனுடைய வழக்கிலே அவனுடைய நியாயத்தைப் புரட்டாதே. தவறான காரியத்தை விட்டுவிலகு; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாதே; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன். லஞ்சம் வாங்காதே; லஞ்சம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும். அந்நியனை ஒடுக்காதே; எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே.

யாத்திராகமம் 23:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

“பிறருக்கு விரோதமாகப் பொய் பேசாதீர்கள். சாட்சி சொல்லும்படி நீதி மன்றத்துக்கு நீங்கள் சென்றால், ஒரு தீய மனிதன் பொய் சொல்வதற்கு உதவாதீர்கள். “பிறர் செய்கிறார்கள் என்பதால் மட்டுமே நீங்கள் சிலவற்றைச் செய்யாதீர்கள். ஒரு கூட்டம் ஜனங்கள் தவறு செய்தால் அவர்களோடு சேராதீர்கள். அந்த ஜனங்கள் உங்களை தீயவற்றைச் செய்யும்படியாகத் தூண்டவிடாதீர்கள். எது சரியென்றும் நியாயமானதென்றும் தெரிகிறதோ, அதையே செய்யுங்கள். “ஒரு ஏழை நியாயந்தீர்க்கப்படுகையில் அவன் மீதுள்ள இரக்கத்தினால் ஜனங்கள் அவனுக்கு ஆதரவாக இருக்கலாம். ஆனால், நீங்கள் அவ்வாறு செய்யக்கூடாது. அவன் செய்தது சரியாக இருந்தால் மட்டுமே அவனுக்கு ஆதரவாக இருங்கள். “காணாமற்போன மாட்டையோ, கழுதையையோ பார்த்தீர்களானால், அதை அதன் உரிமையாளனிடம் சேர்ப்பிக்க வேண்டும். அதன் உரிமையாளன் உனது பகைவனாக இருந்தாலும், நீ அதைச் செய்ய வேண்டும். “மிகுந்த பாரத்தால் நடக்க முடியாத மிருகத்தைக் கண்டால் அதை நிறுத்தி அதற்கு உதவ வேண்டும். அது உனது பகைவர்களில் ஒருவனுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் அம்மிருகத்திற்கு நீ உதவ வேண்டும். “ஒரு ஏழை மனிதனுக்கு ஜனங்கள் அநியாயம் செய்ய விடாதே. அவனும் பிறரைப் போன்றே நியாயந்தீர்க்கப்பட வேண்டும். “ஒருவன் குற்றவாளி என நீ கூறும்போது எச்சரிக்கையாக இரு. ஒருவனுக்கு எதிராக வீண் பழி சுமத்தாதே. குற்றமற்ற ஒருவன் செய்யாத செயலுக்குத் தண்டனையாகக் கொல்லப்படுவதற்கு வகை செய்யாதே. குற்றமற்ற மனிதனைக் கொல்பவன் கொடியவன். அம்மனிதனை நான் மன்னிக்கமாட்டேன். “ஒருவன் தவறு செய்யும்போது அவன் செயலை ஆமோதிப்பதற்காக ஒருவன் உனக்கு லஞ்சம் கொடுக்க வந்தால் அதை ஏற்றுக்கொள்ளாதே. நீதிபதிகள் உண்மையைப் பார்க்காதபடிக்கு இத்தகைய பணம் நீதிபதிகளைக் குருடாக்கும். அந்தப் பணம் உண்மையுள்ளவர்களையும் பொய்யராக்கும். “அந்நியனுக்குத் தீங்குசெய்யாதீர்கள். எகிப்து தேசத்தில் வாழ்ந்தபோது நீங்களும் அந்நியராக இருந்ததை நினைவு கூருங்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்