யாத்திராகமம் 17:1-7

யாத்திராகமம் 17:1-7 TAERV

சீன் பாலைவனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பிரயாணம் செய்தார்கள். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பயணமானார்கள். ரெவிதீமிற்கு ஜனங்கள் பிரயாணம் செய்து அங்கு கூடாரமிட்டுத் தங்கினார்கள். குடிக்கக் கூட ஜனங்களுக்கு அங்கே தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே ஜனங்கள் மோசேக்கு எதிராக திரும்பி, அவனோடு வாதாட ஆரம்பித்தார்கள். “எங்களுக்குக் குடிப்பதற்கு தண்ணீர் தா” என்று ஜனங்கள் கேட்டார்கள். மோசே அவர்களை நோக்கி, “ஏன் எனக்கு எதிராகத் திரும்பினீர்கள்? ஏன் கர்த்தரை சோதிக்கிறீர்கள்? கர்த்தர் நம்மோடு வரவில்லை என்று நினைக்கிறீர்களா?” என்றான். ஆனால் ஜனங்கள் மிகவும் தாகமாக இருந்தபடியால் மோசேயிடம் தொடர்ந்து முறையிட்டார்கள், “ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்? நாங்களும், எங்கள் பிள்ளைகளும், ஆடு மாடுகளும் தாகத்தால் மரித்துபோவதற்காகவா எங்களை அழைத்து வந்தீர்?” என்றார்கள். எனவே மோசே கர்த்தரிடம் சத்தமாக அழுது, “நான் இந்த ஜனங்களோடு என்ன செய்ய முடியும்? இவர்கள் என்னைக் கொல்லத் தயாராயிருக்கிறார்கள்” என்றான். கர்த்தர் மோசேயை நோக்கி, “இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாகப் போ, ஜனங்களின் மூப்பர்களில் (தலைவர்களில்) சிலரையும் உன்னோடு அழைத்துச் செல். உனது கைத்தடியையும் எடுத்துக்கொள். நைல் நதியை அடித்தபோது நீ பயன்படுத்திய தடி இதுவே. உனக்கு முன்பாக ஓரேபிலுள்ள (சீனாய் மலையிலுள்ள) பாறையில் நான் இருப்பேன். உனது கைத்தடியால் பாறையை அடி, உடனே பாறையிலிருந்து தண்ணீர் சுரந்து வரும், அப்போது ஜனங்கள் அதைப் பருகலாம்” என்றார். மோசே அவ்வார்த்தைகளின்படியே செய்தான். இஸ்ரவேலின் மூப்பர்கள் (தலைவர்கள்) அதைப் பார்த்தார்கள். இவ்விடத்தில் ஜனங்கள் மோசேக்கு எதிராகத் திரும்பி கர்த்தரை சோதித்ததால் மோசே அதற்கு மேரிபா என்றும், மாசா என்றும் பெயரிட்டான். கர்த்தர் அவர்களோடு இருக்கிறாரா, இல்லையா என்று சோதிக்க ஜனங்கள் விரும்பினார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்