யாத்திராகமம் 17:1-7

யாத்திராகமம் 17:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் சீன் பாலைவனத்திலிருந்து புறப்பட்டு, யெகோவாவின் கட்டளைப்படி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்தார்கள். பின்பு ரெவிதீம் என்னும் இடத்திற்கு வந்து அங்கே முகாமிட்டார்கள். அங்கே அவர்களுக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் இஸ்ரயேலர் மோசேயுடன் வாக்குவாதம் செய்து, “குடிப்பதற்கு எங்களுக்குத் தண்ணீர் தாரும்” என்றார்கள். அப்பொழுது மோசே அவர்களிடம், “என்னோடு ஏன் வாக்குவாதம் செய்கிறீர்கள்? யெகோவாவை ஏன் சோதிக்கிறீர்கள்?” என்றான். ஆனால் மக்கள் மிகவும் தாகமாயிருந்ததினால் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள். அவர்கள் அவனிடம், “எங்களையும், எங்கள் பிள்ளைகளையும், எங்கள் வளர்ப்பு மிருகங்களையும் தாகத்தினால் சாகும்படி, ஏன் எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தீர்?” என்று கேட்டார்கள். அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு, “நான் இந்த மக்களுக்கு என்ன செய்வேன்? அவர்கள் என்னைக் கல்லெறிய ஆயத்தமாயிருக்கிறார்களே” என்றான். அப்பொழுது யெகோவா மோசேயிடம், “இஸ்ரயேலின் சபைத்தலைவர்களில் சிலரை உன்னுடன் கூட்டிக்கொண்டு மக்களுக்கு முன்பாக நட. நீ நைல் நதியை அடித்த கோலை கையில் எடுத்துக்கொண்டு போ. நான் ஓரேபிலுள்ள கற்பாறையின் அருகே உனக்கு முன்பாக அங்கே நிற்பேன். நீ கற்பாறையை அடி. அப்பொழுது மக்கள் குடிப்பதற்கு அதிலிருந்து தண்ணீர் வெளிவரும்” என்றார். மோசே அவ்விதமே இஸ்ரயேலின் சபைத்தலைவர்கள் முன்னிலையில் செய்தான். இஸ்ரயேலர்கள், “யெகோவா எங்களுடன் இருக்கிறாரா? இல்லையா?” என்று கேட்டு யெகோவாவைப் சோதித்தபடியால் அந்த இடத்திற்கு மாசா என்றும், அவர்கள் வாதாடினபடியால் மேரிபா என்றும் மோசே பெயரிட்டான்.

யாத்திராகமம் 17:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் யெகோவாவுடைய கட்டளையின்படி சீன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு, பயணம்செய்து, ரெவிதீமிலே வந்து முகாமிட்டார்கள்; அங்கே மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருந்தது. அப்பொழுது மக்கள் மோசேயோடு வாதாடி: “நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும்” என்றார்கள். அதற்கு மோசே: “என்னோடு ஏன் வாதாடுகிறீர்கள், யெகோவாவை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள்” என்றான். மக்கள் அந்த இடத்தில் தண்ணீர்த் தாகமாக இருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து: “நீர் எங்களையும் எங்களுடைய பிள்ளைகளையும் எங்களுடைய ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தாகத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர்” என்றார்கள். மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: “இந்த மக்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே” என்றான். அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மூப்பர்களில் சிலரை உன்னோடு கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன்னுடைய கோலை உன்னுடைய கையில் பிடித்துக்கொண்டு, மக்களுக்கு முன்னே நடந்துபோ. அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும்” என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பர்களின் கண்களுக்கு முன்பாகச் செய்தான். இஸ்ரவேலர்கள் வாதாடினதற்காகவும், “யெகோவா எங்களுடைய நடுவில் இருக்கிறாரா இல்லையா” என்று அவர்கள் யெகோவாவை சோதித்துப் பார்த்ததினாலும், அவன் அந்த இடத்திற்கு மாசா என்றும், மேரிபா என்றும் பெயரிட்டான்.

யாத்திராகமம் 17:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

சீன் பாலைவனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பிரயாணம் செய்தார்கள். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பயணமானார்கள். ரெவிதீமிற்கு ஜனங்கள் பிரயாணம் செய்து அங்கு கூடாரமிட்டுத் தங்கினார்கள். குடிக்கக் கூட ஜனங்களுக்கு அங்கே தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே ஜனங்கள் மோசேக்கு எதிராக திரும்பி, அவனோடு வாதாட ஆரம்பித்தார்கள். “எங்களுக்குக் குடிப்பதற்கு தண்ணீர் தா” என்று ஜனங்கள் கேட்டார்கள். மோசே அவர்களை நோக்கி, “ஏன் எனக்கு எதிராகத் திரும்பினீர்கள்? ஏன் கர்த்தரை சோதிக்கிறீர்கள்? கர்த்தர் நம்மோடு வரவில்லை என்று நினைக்கிறீர்களா?” என்றான். ஆனால் ஜனங்கள் மிகவும் தாகமாக இருந்தபடியால் மோசேயிடம் தொடர்ந்து முறையிட்டார்கள், “ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்? நாங்களும், எங்கள் பிள்ளைகளும், ஆடு மாடுகளும் தாகத்தால் மரித்துபோவதற்காகவா எங்களை அழைத்து வந்தீர்?” என்றார்கள். எனவே மோசே கர்த்தரிடம் சத்தமாக அழுது, “நான் இந்த ஜனங்களோடு என்ன செய்ய முடியும்? இவர்கள் என்னைக் கொல்லத் தயாராயிருக்கிறார்கள்” என்றான். கர்த்தர் மோசேயை நோக்கி, “இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாகப் போ, ஜனங்களின் மூப்பர்களில் (தலைவர்களில்) சிலரையும் உன்னோடு அழைத்துச் செல். உனது கைத்தடியையும் எடுத்துக்கொள். நைல் நதியை அடித்தபோது நீ பயன்படுத்திய தடி இதுவே. உனக்கு முன்பாக ஓரேபிலுள்ள (சீனாய் மலையிலுள்ள) பாறையில் நான் இருப்பேன். உனது கைத்தடியால் பாறையை அடி, உடனே பாறையிலிருந்து தண்ணீர் சுரந்து வரும், அப்போது ஜனங்கள் அதைப் பருகலாம்” என்றார். மோசே அவ்வார்த்தைகளின்படியே செய்தான். இஸ்ரவேலின் மூப்பர்கள் (தலைவர்கள்) அதைப் பார்த்தார்கள். இவ்விடத்தில் ஜனங்கள் மோசேக்கு எதிராகத் திரும்பி கர்த்தரை சோதித்ததால் மோசே அதற்கு மேரிபா என்றும், மாசா என்றும் பெயரிட்டான். கர்த்தர் அவர்களோடு இருக்கிறாரா, இல்லையா என்று சோதிக்க ஜனங்கள் விரும்பினார்கள்.

யாத்திராகமம் 17:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் கர்த்தருடைய கட்டளையின்படியே சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது. அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான். ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர் என்றார்கள். மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ. அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான். இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்