யாத்திராகமம் 16:21-30

யாத்திராகமம் 16:21-30 TAERV

ஒவ்வொரு நாள் காலையிலும் உணவைச் சேகரித்துக்கொண்டனர். ஒருவன் தான் சாப்பிடக் கூடிய அளவு உணவை எடுத்துக்கொண்டான். வெயில் ஏறினதும் உணவு உருகி மறைந்துபோனது. வெள்ளியன்று, ஜனங்கள் இரண்டு மடங்கு உணவைச் சேர்த்தார்கள். ஒவ்வொருவருக்கும் 16 கிண்ண அளவு உணவைச் சேர்த்தார்கள். எனவே ஜனங்களின் தலைவர்கள் மோசேயிடம் வந்து இதனை அறிவித்தனர். மோசே அவர்களை நோக்கி, “இவ்வாறு தான் நடக்கும் என்று கர்த்தர் கூறியிருக்கிறார். நாளை கர்த்தரை மகிமைப்படுத்தும் விசேஷ நாளாகிய ஓய்வுநாள் என்பதால் இவ்வாறு நிகழ்ந்தது. இன்றைக்குத் தேவையான எல்லா உணவையும் சமையுங்கள். மீதமாகும் உணவை நாளை காலைக்காக எடுத்து வையுங்கள்” என்றான். எனவே மீதமான உணவை ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்து அடுத்த நாளுக்காகப் பத்திரப்படுத்தினார்கள். அன்று அந்த உணவு கெட்டுப்போகவில்லை, புழுக்களும் அந்த உணவை அணுகவில்லை. சனிக்கிழமையன்று மோசே ஜனங்களை நோக்கி, “இன்று ஓய்வுநாள், இது கர்த்தருக்கு மரியாதை செலுத்தும் விசேஷ நாள். எனவே உங்களில் ஒருவனும் வெளியே போகக்கூடாது. நேற்று சேர்த்து வைத்த உணவையே உண்ணுங்கள். ஆறு நாட்கள் நீங்கள் உணவைச் சேகரிக்கவேண்டும், ஆனால் வாரத்தின் ஏழாவதுநாள் ஓய்வுக்குரிய நாள். எனவே பூமியில் விசேஷ உணவு எதுவுமிராது” என்றான். சனிக்கிழமையன்று சில ஜனங்கள் உணவைச் சேகரிக்கச் சென்றார்கள், ஆனால் அவர்களுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை. அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “எனது கட்டளைகளுக்கும் போதனைகளுக்கும் கீழ்ப்படிய எத்தனை காலம் இந்த ஜனங்கள் மறுப்பார்கள்? பார், உங்களுக்கு ஓய்ந்திருக்கும் நாளாக கர்த்தர் ஓய்வு நாளை உண்டாக்கினார். எனவே வெள்ளியன்று இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவை கர்த்தர் கொடுப்பார், பின் ஓய்வு நாளில் உங்களில் ஒவ்வொருவனும் ஓய்வெடுக்கவேண்டும். நீங்கள் இருக்குமிடத்திலேயே தங்கியிருங்கள்” என்றார். எனவே ஜனங்கள் ஓய்வுநாளில் ஓய்வெடுத்துக்கொண்டார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்