யாத்திராகமம் 16:21-30

யாத்திராகமம் 16:21-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அதை விடியற்காலந்தோறும் அவரவர் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள், வெயில் ஏறஏற அது உருகிப்போகும். ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டத்தனையாய் ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர் எல்லாரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள். அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான். மோசே கட்டளையிட்டபடியே, அதை மறுநாள்வரைக்கும் வைத்துவைத்தார்கள்; அப்பொழுது அது நாறவும் இல்லை, அதிலே பூச்சிபிடிக்கவும் இல்லை. அப்பொழுது மோசே; அதை இன்றைக்குப் புசியுங்கள்; இன்று கர்த்தருக்குரிய ஓய்வுநாள்; இன்று நீங்கள் அதை வெளியிலே காணமாட்டீர்கள். ஆறுநாளும் அதைச் சேர்ப்பீர்களாக; ஏழாம்நாள் ஓய்வுநாளாயிருக்கிறது; அதிலே அது உண்டாயிராது என்றான். ஏழாம்நாளில் ஜனங்களில் சிலர் அதைச் சேர்க்கப் புறப்பட்டார்கள்; அவர்கள் அதைக் காணவில்லை. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: என் கட்டளைகளையும் என் பிரமாணங்களையும் கைக்கொள்ள எந்தமட்டும் மனதில்லாதிருப்பீர்கள்? பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம்நாளில் இரண்டு நாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன்தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார். அப்படியே ஜனங்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.

யாத்திராகமம் 16:21-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

காலைதோறும் ஒவ்வொருவனும் தனக்குத் தேவையான அளவைச் சேர்த்தான். வெயில் ஏறினபோது அது உருகிப்போனது. ஆறாம்நாளில் ஒவ்வொருவரும் ஒருவனுக்கு இரண்டு ஓமர் வீதம் இருமடங்கு உணவைச் சேர்த்தார்கள். சமுதாயத்தின் தலைவர்கள் இதை மோசேக்கு அறிவித்தார்கள். அப்பொழுது மோசே அவர்களிடம், “யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்டது இதுவே: நாளைய தினம் ஓய்ந்திருக்கும் ஒரு நாளாக யெகோவாவுக்குப் பரிசுத்த ஓய்வுநாளாய் இருக்கவேண்டும். எனவே, இன்றே சுடவேண்டியதை சுட்டு, அவிக்கவேண்டியதை அவித்துக்கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிட்டபின் மீதியானதை காலைவரை வையுங்கள்” என்றான். மோசே கட்டளையிட்டபடியே காலைவரை அதைச் சேமித்து வைத்தார்கள். அது நாற்றமெடுக்கவோ, புழுப்பிடிக்கவோ இல்லை. அப்பொழுது மோசே இஸ்ரயேலரிடம், “இன்றைக்கே அதைச் சாப்பிடுங்கள். ஏனெனில் இன்றைய நாள் யெகோவாவுக்குரிய ஓய்வுநாளாய் இருக்கிறது. இன்று நீங்கள் எதையும் நிலத்திலே காணமாட்டீர்கள். நீங்கள் ஆறு நாட்களும் அதைச் சேர்க்கவேண்டும். ஓய்வுநாளாகிய ஏழாம் நாளிலே அது கிடைக்காது” என்றான். ஆனாலும் மக்களில் சிலர் ஏழாம்நாள் அவற்றைச் சேர்ப்பதற்குப் போனபோது, அவர்கள் ஒன்றையும் காணவில்லை. அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீங்கள் எவ்வளவு காலத்திற்கு என் கட்டளைகளையும், அறிவுறுத்தல்களையும் கைக்கொள்ள மறுப்பீர்கள்? யெகோவா உங்களுக்கு ஓய்வுநாளைக் கொடுத்திருப்பதை மனதில் வைத்திருங்கள். அதனால்தான் ஆறாம்நாளில் இரண்டு நாட்களுக்குரிய அப்பத்தை அவர் உங்களுக்குக் கொடுக்கிறார். ஆகையால் ஏழாம்நாளில் நீங்கள் ஒவ்வொருவரும் இருக்கும் இடத்திலேயே இருக்கவேண்டும், ஒருவரும் வெளியே போகக்கூடாது” என்றார். எனவே மக்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.

யாத்திராகமம் 16:21-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அதை அதிகாலைதோறும் அவரவர் சாப்பிடும் அளவுக்குத்தகுந்தபடி சேர்த்தார்கள், வெயில் ஏறஏற அது உருகிப்போகும். ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டுமடங்காக ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர்கள் எல்லோரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள். அவன் அவர்களை நோக்கி: “யெகோவா சொன்னது இதுதான்; நாளைக்குக் யெகோவாவுக்குறிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேகவைக்கவேண்டியதை வேகவைத்து, மீதியாக இருக்கிறதையெல்லாம் நாளைவரை உங்களுக்காக வைத்துவையுங்கள்” என்றான். மோசே கட்டளையிட்டபடி, அதை மறுநாள்வரைக்கும் வைத்துவைத்தார்கள்; அப்பொழுது அது நாறவும் இல்லை, அதிலே பூச்சிபிடிக்கவும் இல்லை. அப்பொழுது மோசே; “அதை இன்றைக்குச் சாப்பிடுங்கள்; இன்று யெகோவாவுக்குரிய ஓய்வுநாள்; இன்று நீங்கள் அதை வெளியிலே காணமாட்டீர்கள். ஆறுநாட்களும் அதைச் சேர்ப்பீர்களாக; ஏழாம்நாள் ஓய்வுநாளாக இருக்கிறது; அதிலே அது உண்டாகாது” என்றான். ஏழாம்நாளில் மக்களில் சிலர் அதைச் சேர்க்கப் புறப்பட்டார்கள்; அவர்கள் அதைப் பார்க்கவில்லை. அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய சட்டங்களையும் கைக்கொள்ள எதுவரை மனம் இல்லாமல் இருப்பீர்கள்? பாருங்கள், யெகோவா உங்களுக்கு ஓய்வுநாளை கொடுத்தபடியால், அவர் உங்களுக்கு ஆறாம்நாளில் இரண்டு நாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் இடத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் இடத்திலே இருக்கவேண்டும்” என்றார். அப்படியே மக்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.

யாத்திராகமம் 16:21-30 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒவ்வொரு நாள் காலையிலும் உணவைச் சேகரித்துக்கொண்டனர். ஒருவன் தான் சாப்பிடக் கூடிய அளவு உணவை எடுத்துக்கொண்டான். வெயில் ஏறினதும் உணவு உருகி மறைந்துபோனது. வெள்ளியன்று, ஜனங்கள் இரண்டு மடங்கு உணவைச் சேர்த்தார்கள். ஒவ்வொருவருக்கும் 16 கிண்ண அளவு உணவைச் சேர்த்தார்கள். எனவே ஜனங்களின் தலைவர்கள் மோசேயிடம் வந்து இதனை அறிவித்தனர். மோசே அவர்களை நோக்கி, “இவ்வாறு தான் நடக்கும் என்று கர்த்தர் கூறியிருக்கிறார். நாளை கர்த்தரை மகிமைப்படுத்தும் விசேஷ நாளாகிய ஓய்வுநாள் என்பதால் இவ்வாறு நிகழ்ந்தது. இன்றைக்குத் தேவையான எல்லா உணவையும் சமையுங்கள். மீதமாகும் உணவை நாளை காலைக்காக எடுத்து வையுங்கள்” என்றான். எனவே மீதமான உணவை ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்து அடுத்த நாளுக்காகப் பத்திரப்படுத்தினார்கள். அன்று அந்த உணவு கெட்டுப்போகவில்லை, புழுக்களும் அந்த உணவை அணுகவில்லை. சனிக்கிழமையன்று மோசே ஜனங்களை நோக்கி, “இன்று ஓய்வுநாள், இது கர்த்தருக்கு மரியாதை செலுத்தும் விசேஷ நாள். எனவே உங்களில் ஒருவனும் வெளியே போகக்கூடாது. நேற்று சேர்த்து வைத்த உணவையே உண்ணுங்கள். ஆறு நாட்கள் நீங்கள் உணவைச் சேகரிக்கவேண்டும், ஆனால் வாரத்தின் ஏழாவதுநாள் ஓய்வுக்குரிய நாள். எனவே பூமியில் விசேஷ உணவு எதுவுமிராது” என்றான். சனிக்கிழமையன்று சில ஜனங்கள் உணவைச் சேகரிக்கச் சென்றார்கள், ஆனால் அவர்களுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை. அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “எனது கட்டளைகளுக்கும் போதனைகளுக்கும் கீழ்ப்படிய எத்தனை காலம் இந்த ஜனங்கள் மறுப்பார்கள்? பார், உங்களுக்கு ஓய்ந்திருக்கும் நாளாக கர்த்தர் ஓய்வு நாளை உண்டாக்கினார். எனவே வெள்ளியன்று இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவை கர்த்தர் கொடுப்பார், பின் ஓய்வு நாளில் உங்களில் ஒவ்வொருவனும் ஓய்வெடுக்கவேண்டும். நீங்கள் இருக்குமிடத்திலேயே தங்கியிருங்கள்” என்றார். எனவே ஜனங்கள் ஓய்வுநாளில் ஓய்வெடுத்துக்கொண்டார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்