அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:17-26

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:17-26 TAERV

“எனது சகோதரர்களே, நீங்கள் செய்வதை அறியாததால் அவற்றை இயேசுவுக்குச் செய்தீர்கள் என்பதை நான் அறிவேன். உங்கள் தலைவர்களும் அதைப் புரிந்துகொள்ளவில்லை. இக்காரியங்கள் நடந்தேறுமென தேவன் கூறினார். அவரது கிறிஸ்து துன்புற்று இறப்பார் என்பதை தேவன் தம் தீர்க்கதரிசிகள் மூலமாகக் கூறினார். தேவன் இதை எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை உங்களுக்குக் கூறியுள்ளேன். எனவே நீங்கள் உங்கள் இருதயங்களையும், வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளுங்கள்! தேவனிடம் திரும்புங்கள். அவர் உங்கள் பாவங்களை மன்னிப்பார். பின் ஆண்டவர் உங்களுக்கு ஆவிக்குரிய இளைப்பாறுதலை நல்குவார். கிறிஸ்துவாக இருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவராகிய இயேசுவை அவர் உங்களுக்குக் கொடுப்பார். “ஆனால் எல்லாக் காரியங்களும் மீண்டும் சரியாகும் வரை இயேசு பரலோகத்தில் இருக்க வேண்டும். பல்லாண்டுகளுக்கு முன்னரே தேவன் தனது பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலமாகப் பேசியபோதே, இவற்றைப்பற்றிக் கூறியுள்ளார். மோசே, ‘கர்த்தராகிய உங்கள் தேவன் உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அளிப்பார். உங்கள் சொந்த மக்களிடையேயிருந்து அந்தத் தீர்க்கதரிசி தோன்றுவார். அவர் என்னைப் போலவே இருப்பார். அத்தீர்க்கதரிசி உங்களுக்குக் கூறுகின்ற எல்லாவற்றிற்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். எந்த மனிதனாகிலும் அந்தத் தீர்க்கதரிசிக்குக் கீழ்ப்படிய மறுத்தால் அப்போது அம்மனிதன் தேவனுடைய மக்களிடமிருந்து பிரிந்து இறப்பான்’” என்றான். “தேவனுக்காகப் பேசிய சாமுவேலும் அவருக்குப் பின் வந்த மற்ற எல்லாத் தீர்க்கதரிசிகளும் இக்காலத்தைக் குறித்துப் பேசினார்கள். தீர்க்கதரிசிகள் பேசிய அனைத்தையும் நீங்கள் பெற்றீர்கள். அதைப் போலவே தேவன் உங்கள் முன்னோரோடு செய்த உடன்படிக்கையையும் நீங்கள் பெற்றீர்கள். தேவன் உங்கள் தந்தையாகிய ஆபிரகாமிடம், ‘உன் தலைமுறையினரால் உலகின் ஒவ்வொரு தேசமும் ஆசீர்வதிக்கப்படும்’ என்று கூறினார். தேவன் தனது விசேஷ ஊழியரை அனுப்பியுள்ளார். தேவன் அவரை முதலாவதாக உங்களிடம் அனுப்பினார். உங்களை ஆசீர்வதிப்பதற்கு தேவன் இயேசுவை அனுப்பினார். நீங்கள் ஒவ்வொருவரும் தீய செயல்களைச் செய்கிறதிலிருந்து உங்களைத் திருப்புவதின் மூலம் தேவன் இதைச் செய்கிறார்” என்றான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்