அப்போஸ்தலர் 3:17-26

அப்போஸ்தலர் 3:17-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“சகோதரரே, நீங்களும் உங்கள் தலைவர்களும் உங்கள் அறியாமையினாலேயே இதைச் செய்தீர்களென்று எனக்குத் தெரியும். ஆனாலும், இறைவன் எல்லா இறைவாக்கினர் மூலமாகவும், முன்னறிவித்ததை இவ்விதமாகவே நிறைவேற்றினார். தமது கிறிஸ்து துன்பங்களை அனுபவிப்பார் என்று அவர் சொல்லியிருந்தாரே. ஆகவே, மனமாற்றமடைந்து இறைவனிடம் திரும்புங்கள். அப்பொழுது உங்கள் பாவங்கள் கழுவப்படும். கர்த்தரிடத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் உங்களுக்கு வரும். இறைவன் உங்களுக்காக ஏற்படுத்திய கிறிஸ்துவாகிய இயேசுவையும் அனுப்புவார். இறைவன் தமது பரிசுத்த இறைவாக்கினர்மூலம், வெகுகாலத்திற்கு முன்பே வாக்குப்பண்ணியபடி, அவர் எல்லாவற்றையும் புதுப்பிப்பார். அந்தக் காலம் வரும்வரை, கிறிஸ்து பரலோகத்தில் இருக்கவேண்டும். ஏனெனில் மோசே, ‘உங்கள் இறைவனாகிய கர்த்தர் என்னைப்போன்ற ஒரு இறைவாக்கினரை, உங்கள் சொந்த மக்கள் மத்தியிலிருந்து எழுப்புவார்; அந்த இறைவாக்கினர் சொல்வது எல்லாவற்றையும் நீங்கள் கேட்கவேண்டும். அவர் சொல்வதைக் கேட்காத எவனும், தன் மக்கள் மத்தியில் இருந்து முற்றுமாய் நீக்கப்படுவான்’ என்று சொல்லியிருக்கிறானே. “சாமுயேல் தொடங்கி, அவனுக்குப்பின் வந்த எல்லா இறைவாக்கினரும், இந்த நாட்களையே முன்னறிவித்தார்கள். நீங்களே இறைவாக்கினருக்கும், உங்கள் தந்தையருடன் இறைவன் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கும் உரிமையாளர்கள். ஏனெனில் இறைவன் ஆபிரகாமிடம், ‘உனது சந்ததியின் மூலமாக, பூமியிலுள்ள மக்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படுவார்கள்’ என்று சொன்னாரே. எனவே, இறைவன் தமது ஊழியக்காரனான இயேசுவை உயிருடன் எழுப்பியபோது, உங்கள் ஒவ்வொருவரையும் உங்கள் பொல்லாத வழிகளிலிருந்து திருப்பி ஆசீர்வதிக்கும்படி, முதன்முதலாக அவரை உங்களிடம் அனுப்பினார் என்றான்.”

அப்போஸ்தலர் 3:17-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சகோதரர்களே நீங்களும் உங்களுடைய அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று எனக்குத் தெரியும் கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்னவைகளை இவ்விதமாக நிறைவேற்றினார். ஆகவே, கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் நாட்கள் வரும்படிக்கும், முன்பே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடம் அனுப்பவும், உங்களுடைய குற்றங்கள் மன்னிக்கப்படவும் நீங்கள் மனந்திரும்பி குணப்படுங்கள். உலகம் உண்டானதுமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லோருடைய வார்த்தையினாலும் முன்னமே சொன்ன எல்லாம் நிறைவேறிமுடியும் நாட்கள் வரும்வரை அவர் பரலோகத்தில் இருக்கவேண்டும். மோசே முற்பிதாக்களைப்பார்த்து: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்களுடைய சகோதரர்களிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுங்கள். அந்தத் தீர்க்கதரிசியின் சொல்லைக் கேளாதவன் எவனோ, அவன் மக்கள் மத்தியில் இல்லாதபடிக்கு அழிக்கப்படுவான் என்றான். சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் சொன்னார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னமே அறிவித்தார்கள். நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் பிள்ளைகளாக இருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடு செய்த உடன்படிக்கைக்கும் பிள்ளைகளாக இருக்கிறீர்கள். அவர் உங்களெல்லோரையும் உங்களுடைய பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.

அப்போஸ்தலர் 3:17-26 பரிசுத்த பைபிள் (TAERV)

“எனது சகோதரர்களே, நீங்கள் செய்வதை அறியாததால் அவற்றை இயேசுவுக்குச் செய்தீர்கள் என்பதை நான் அறிவேன். உங்கள் தலைவர்களும் அதைப் புரிந்துகொள்ளவில்லை. இக்காரியங்கள் நடந்தேறுமென தேவன் கூறினார். அவரது கிறிஸ்து துன்புற்று இறப்பார் என்பதை தேவன் தம் தீர்க்கதரிசிகள் மூலமாகக் கூறினார். தேவன் இதை எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை உங்களுக்குக் கூறியுள்ளேன். எனவே நீங்கள் உங்கள் இருதயங்களையும், வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளுங்கள்! தேவனிடம் திரும்புங்கள். அவர் உங்கள் பாவங்களை மன்னிப்பார். பின் ஆண்டவர் உங்களுக்கு ஆவிக்குரிய இளைப்பாறுதலை நல்குவார். கிறிஸ்துவாக இருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவராகிய இயேசுவை அவர் உங்களுக்குக் கொடுப்பார். “ஆனால் எல்லாக் காரியங்களும் மீண்டும் சரியாகும் வரை இயேசு பரலோகத்தில் இருக்க வேண்டும். பல்லாண்டுகளுக்கு முன்னரே தேவன் தனது பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலமாகப் பேசியபோதே, இவற்றைப்பற்றிக் கூறியுள்ளார். மோசே, ‘கர்த்தராகிய உங்கள் தேவன் உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அளிப்பார். உங்கள் சொந்த மக்களிடையேயிருந்து அந்தத் தீர்க்கதரிசி தோன்றுவார். அவர் என்னைப் போலவே இருப்பார். அத்தீர்க்கதரிசி உங்களுக்குக் கூறுகின்ற எல்லாவற்றிற்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். எந்த மனிதனாகிலும் அந்தத் தீர்க்கதரிசிக்குக் கீழ்ப்படிய மறுத்தால் அப்போது அம்மனிதன் தேவனுடைய மக்களிடமிருந்து பிரிந்து இறப்பான்’” என்றான். “தேவனுக்காகப் பேசிய சாமுவேலும் அவருக்குப் பின் வந்த மற்ற எல்லாத் தீர்க்கதரிசிகளும் இக்காலத்தைக் குறித்துப் பேசினார்கள். தீர்க்கதரிசிகள் பேசிய அனைத்தையும் நீங்கள் பெற்றீர்கள். அதைப் போலவே தேவன் உங்கள் முன்னோரோடு செய்த உடன்படிக்கையையும் நீங்கள் பெற்றீர்கள். தேவன் உங்கள் தந்தையாகிய ஆபிரகாமிடம், ‘உன் தலைமுறையினரால் உலகின் ஒவ்வொரு தேசமும் ஆசீர்வதிக்கப்படும்’ என்று கூறினார். தேவன் தனது விசேஷ ஊழியரை அனுப்பியுள்ளார். தேவன் அவரை முதலாவதாக உங்களிடம் அனுப்பினார். உங்களை ஆசீர்வதிப்பதற்கு தேவன் இயேசுவை அனுப்பினார். நீங்கள் ஒவ்வொருவரும் தீய செயல்களைச் செய்கிறதிலிருந்து உங்களைத் திருப்புவதின் மூலம் தேவன் இதைச் செய்கிறார்” என்றான்.

அப்போஸ்தலர் 3:17-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச் செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன். கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார். ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள். உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும். மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக: அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான். சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள். நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடேபண்ணின உடன்படிக்கைக்கும் புத்திரராயிருக்கிறீர்கள். அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்