கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 1:20-30

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 1:20-30 TAERV

தற்காலத்தின் ஞானி எங்கே? கல்வியில் தேர்ந்தவன் எங்கே? இன்றைய தத்துவஞானி எங்கே? உலகத்து ஞானத்தை தேவனே மடமையாக மாற்றினார். தேவன் தனது ஞானத்தினால் விரும்பியது இதுவே: உலகத்தின் ஞானத்தால், உலகம் தேவனைக் கண்டுகொள்ள முடியவில்லை. தேவனை விசுவாசிக்கிற மக்களைக் காக்கும்பொருட்டு மடமையாய்த் தோன்றும் தனது செய்தியை தேவன் பயன்படுத்தினார். யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். ஆனால் நாங்கள் போதிப்பது இதுவே. கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும். ஆனால், தேவன் தேர்ந்துள்ள யூதருக்கும், கிரேக்கருக்கும் கிறிஸ்துவே தேவனின் வல்லமையும், தேவஞானமும் ஆவார். தேவனுடைய மடமை கூட மனிதரின் ஞானத்திலும் சிறந்தது. தேவனுடைய சோர்வும் கூட மனிதரின் பலத்தைக் காட்டிலும் வலிமை உடையது. சகோதர சகோதரிகளே! தேவன் உங்களைத் தெரிந்துள்ளார். அது பற்றிச் சிந்தியுங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர். ஞானிகளுக்கு வெட்கத்தைத் தரும்படியாக தேவன் உலகத்தின் முட்டாள்தனமான பொருள்களைத் தேர்ந்தெடுத்தார். பலவான்களான மனிதர்களை அவமதிக்க உலகத்தின் பலவீனமான பொருள்களைத் தேர்ந்தெடுத்தார். உலகம் முக்கியமற்றதென்று நினைப்பதை தேவன் தேர்ந்துகொண்டார். உலகம் வெறுப்பதையும், பயனற்றதெனக் கருதுவதையும் அவர் தேர்ந்தெடுத்தார். முக்கியமென உலகம் பார்க்கிறவற்றை அழிப்பதற்காகவே அவர் அப்படிச் செய்தார். எந்த மனிதனும் தேவனுக்கு முன்பு தற் பெருமை அடையாதபடிக்கு தேவன் இப்படிச் செய்தார். உங்களைக் கிறிஸ்து இயேசுவின் ஒரு பாகமாகும்படி செய்தவர் தேவனே, தேவனிடம் இருந்து கிறிஸ்து நமக்கு ஞானமாக இருக்கிறார். பாவத்தில் இருந்து விடுதலை அடையவும், தேவனோடு இணக்கமாக இருக்கவும் கிறிஸ்துவே காரணமாவார். நாம் பரிசுத்தமாய் இருப்பதற்கும் கிறிஸ்துவே காரணமாவார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 1:20-30