ரோமர் 15:1-7

ரோமர் 15:1-7 TCV

விசுவாசத்தில் பலமுள்ளவர்களாயிருக்கிற நாம், பலவீனமாய் இருக்கிறவர்களின் தவறுகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். நம்மைப் பிரியப்படுத்தக் கூடாது. நாம் ஒவ்வொருவரும் நமது அயலவனை அவனது நன்மையின் நிமித்தம் விசுவாசத்தில் வளரச்செய்யும்படி, அவனைப் பிரியப்படுத்த வேண்டும். கிறிஸ்துவுங்கூட, தம்மைப் பிரியப்படுத்துவதற்காக வாழவில்லை, “உம்மை அவமானப்படுத்தியவர்களுடைய அவமரியாதைப் பேச்சுக்கள் என்மேலே விழுந்தன” என்று கிறிஸ்துவைப்பற்றி எழுதியிருக்கின்றன. முற்காலத்தில் எழுதப்பட்டவை எல்லாம் நம்முடைய போதனைக்காகவே எழுதப்பட்டிருக்கின்றன. இதனால் நாம் வேதவசனங்களில் இருந்து பொறுமையையும், உற்சாகத்தையும் பெற்று, அவற்றின் மூலமாய் நமக்கு எதிர்பார்ப்பு உள்ளவர்களாயிருக்கிறோம். பொறுமையும் உற்சாகத்தையும் கொடுக்கின்ற இறைவன், நீங்கள் கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றுகையில் உங்களுக்கிடையே ஒற்றுமையின் ஆவியைத் தருவாராக. அப்பொழுது நீங்கள் ஒரே மனதுள்ளவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவீர்கள். ஆகவே, இறைவனுக்கு மகிமை உண்டாகும்படி கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டதைப் போலவே நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். இது இறைவனுக்குத் துதியைக் கொண்டுவரும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்