ரோமர் 15:1-7

ரோமர் 15:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

விசுவாசத்தில் பலமுள்ளவர்களாயிருக்கிற நாம், பலவீனமாய் இருக்கிறவர்களின் தவறுகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். நம்மைப் பிரியப்படுத்தக் கூடாது. நாம் ஒவ்வொருவரும் நமது அயலவனை அவனது நன்மையின் நிமித்தம் விசுவாசத்தில் வளரச்செய்யும்படி, அவனைப் பிரியப்படுத்த வேண்டும். கிறிஸ்துவுங்கூட, தம்மைப் பிரியப்படுத்துவதற்காக வாழவில்லை, “உம்மை அவமானப்படுத்தியவர்களுடைய அவமரியாதைப் பேச்சுக்கள் என்மேலே விழுந்தன” என்று கிறிஸ்துவைப்பற்றி எழுதியிருக்கின்றன. முற்காலத்தில் எழுதப்பட்டவை எல்லாம் நம்முடைய போதனைக்காகவே எழுதப்பட்டிருக்கின்றன. இதனால் நாம் வேதவசனங்களில் இருந்து பொறுமையையும், உற்சாகத்தையும் பெற்று, அவற்றின் மூலமாய் நமக்கு எதிர்பார்ப்பு உள்ளவர்களாயிருக்கிறோம். பொறுமையும் உற்சாகத்தையும் கொடுக்கின்ற இறைவன், நீங்கள் கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றுகையில் உங்களுக்கிடையே ஒற்றுமையின் ஆவியைத் தருவாராக. அப்பொழுது நீங்கள் ஒரே மனதுள்ளவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவீர்கள். ஆகவே, இறைவனுக்கு மகிமை உண்டாகும்படி கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டதைப் போலவே நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். இது இறைவனுக்குத் துதியைக் கொண்டுவரும்.

ரோமர் 15:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அன்றியும், பலம் உள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாக நடக்காமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். நம்மில் ஒவ்வொருவனும் அயலகத்தானுக்கு பக்திவளர்ச்சிக்குரிய நன்மையை உண்டாக்குவதற்காக அவனுக்குப் பிரியமாக நடக்கவேண்டும். கிறிஸ்துவும் தமக்கே பிரியமாக நடக்காமல்: உம்மை அவமதிக்கிறவர்களுடைய அவமானங்கள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார். தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும், ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை உள்ளவர்களாவதற்காக, முன்பே எழுதியிருக்கிறவைகள் எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது. நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவதற்காக, பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஒரே சிந்தை உள்ளவர்களாக இருக்க உங்களுக்கு தயவு செய்வாராக. எனவே, தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.

ரோமர் 15:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

விசுவாசத்தில் உறுதியாய் இருக்கிற நாம் பல வீனமானவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நாம் நமது திருப்திக்காக மட்டுமே வாழ்தல் கூடாது. நம்மில் ஒவ்வொருவரும் மற்றவர்களையும் மகிழ்ச்சியுறச் செய்தல் வேண்டும். இதனை மற்றவர்களுக்கு உதவியாகச் செய்ய வேண்டும். அவர்கள் விசுவாசத்தில் பலமுடையவர்களாக உதவி செய்யவேண்டும். கிறிஸ்து கூட தனது திருப்திக்காக வாழவில்லை. “அவர்கள் உங்களை நிந்தித்தால் என்னையும் நிந்திக்கிறவர்களாகிறார்கள்” என்று எழுதப்பட்டிருப்பதைப் போலாகும் அது. வேதவசனத்தினால் பொறுமையும் ஆறுதலும் உண்டாகிறது. அதனால் நாம் நம்பிக்கை உள்ளவர்களாகும்படிக்கு முன்பு எழுதப்பட்டவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதப்பட்டன. பொறுமையும் பலமும் தேவனிடமிருந்து வந்தன. இயேசு கிறிஸ்து விரும்புகிற வழியை நீங்கள் உங்களுக்குக்குள் ஏற்றுக்கொள்ள தேவனிடம் பிரார்த்திப்பேன். எனவே இதய ஒற்றுமையுடனும் ஒருமித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனைப் புகழ்வீர்கள். கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டார். எனவே நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தேவனுக்கு மகிமையைக் கொண்டு வரும்.

ரோமர் 15:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன். கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார் தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது. நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு, பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக. ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்