சங்கீதம் 62:1-8
சங்கீதம் 62:1-8 TCV
என் ஆத்துமா இறைவனில் இளைப்பாறுகிறது; என் இரட்சிப்பு அவரால் வருகிறது. அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும் என் கோட்டையுமாய் இருக்கிறார்; நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன். எவ்வளவு காலத்திற்கு நீங்கள் என்னைத் தாக்குவீர்கள்? நீங்கள் எல்லோரும் என்னைத் தூக்கி எறிந்துவிடுவீர்களா? நான் சாய்ந்த சுவரைப் போலவும் தள்ளப்பட்ட வேலியைப் போலவும் இருக்கிறேன். என்னுடைய உயர்ந்த நிலையிலிருந்து என்னைத் தள்ளி வீழ்த்துவதற்கு அவர்கள் ஆலோசனை செய்கிறார்கள், அவர்கள் பொய்களில் மகிழ்ச்சி கொள்கிறார்கள்; அவர்கள் தங்கள் வாய்களினால் ஆசீர்வதிக்கிறார்கள், ஆனால் தங்களுடைய இருதயங்களிலோ சபிக்கிறார்கள். ஆம், என் ஆத்துமாவே, நீ இறைவனில் மட்டுமே இளைப்பாறு; என் நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது. அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும் என் கோட்டையுமாயிருக்கிறார்; நான் அசைக்கப்படமாட்டேன். என் இரட்சிப்பும் என் கனமும் இறைவனிடத்தில் இருக்கிறது; இறைவன் என் பலமான கன்மலையும் என் புகலிடமுமாய் இருக்கிறார். மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; உங்கள் இருதயங்களின் பாரங்களை அவரிடத்தில் இறக்கி வையுங்கள்; இறைவனே நமது புகலிடம்.

