சங்கீதம் 62:1-8

சங்கீதம் 62:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

என் ஆத்துமா இறைவனில் இளைப்பாறுகிறது; என் இரட்சிப்பு அவரால் வருகிறது. அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும் என் கோட்டையுமாய் இருக்கிறார்; நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன். எவ்வளவு காலத்திற்கு நீங்கள் என்னைத் தாக்குவீர்கள்? நீங்கள் எல்லோரும் என்னைத் தூக்கி எறிந்துவிடுவீர்களா? நான் சாய்ந்த சுவரைப் போலவும் தள்ளப்பட்ட வேலியைப் போலவும் இருக்கிறேன். என்னுடைய உயர்ந்த நிலையிலிருந்து என்னைத் தள்ளி வீழ்த்துவதற்கு அவர்கள் ஆலோசனை செய்கிறார்கள், அவர்கள் பொய்களில் மகிழ்ச்சி கொள்கிறார்கள்; அவர்கள் தங்கள் வாய்களினால் ஆசீர்வதிக்கிறார்கள், ஆனால் தங்களுடைய இருதயங்களிலோ சபிக்கிறார்கள். ஆம், என் ஆத்துமாவே, நீ இறைவனில் மட்டுமே இளைப்பாறு; என் நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது. அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும் என் கோட்டையுமாயிருக்கிறார்; நான் அசைக்கப்படமாட்டேன். என் இரட்சிப்பும் என் கனமும் இறைவனிடத்தில் இருக்கிறது; இறைவன் என் பலமான கன்மலையும் என் புகலிடமுமாய் இருக்கிறார். மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; உங்கள் இருதயங்களின் பாரங்களை அவரிடத்தில் இறக்கி வையுங்கள்; இறைவனே நமது புகலிடம்.

சங்கீதம் 62:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேவனையே நோக்கி என்னுடைய ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும். அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாக அசைக்கப்படுவதில்லை. நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனிதனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் அழிக்கப்படுவீர்கள், சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள். அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைசெய்து, பொய்பேச விரும்புகிறார்கள்; தங்களுடைய வாயினால் ஆசீர்வதித்து, தங்களுடைய உள்ளத்தில் சபிக்கிறார்கள். (சேலா) என்னுடைய ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். அவரே என்னுடைய கன்மலையும், என்னுடைய இரட்சிப்பும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை. என்னுடைய இரட்சிப்பும், என்னுடைய மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என்னுடைய கன்மலையும் என்னுடைய அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார். (சேலா)

சங்கீதம் 62:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

என்ன நடந்தாலும் பரவாயில்லை, என் ஆத்துமா பொறுமையோடு தேவன் என்னை மீட்கும்படி காத்திருக்கிறது. என் இரட்சிப்பு அவரிடத்திலிருந்து மட்டுமே வருகிறது. எனக்கு அநேக விரோதிகள் இருக்கிறார்கள். ஆனால் தேவனே எனக்கு அரணாக இருக்கிறார். தேவன் என்னைக் காப்பாற்றுகிறார். உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம். பெரும் படைகளும் என்னைத் தோற்கடிக்க இயலாது. எத்தனை காலம் என்னைத் தாக்குவீர். நானோ சாய்ந்த சுவரைப் போலவும், வீழும் நிலையிலுள்ள வேலியைப் போலவும் இருக்கிறேன். மேன்மையான என் நிலையை எண்ணி அந்த ஜனங்கள் என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் என்னைக் குறித்துப் பொய்களைக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். வெளிப்படையாக அவர்கள் என்னைப்பற்றி நல்லவற்றைப் பேசினாலும் இரகசியமாக என்னை சபிக்கிறார்கள். தேவன் என்னை மீட்க வேண்டுமென்று பொறுமையோடு என் ஆத்துமா காத்திருக்கிறது. தேவன் ஒருவரே என் நம்பிக்கை. தேவனே என் அரண். தேவன் என்னைக் காப்பாற்றுகிறார். உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம். என் பெருமையும் வெற்றியும் தேவனிடமிருந்து வருகிறது. அவர் எனக்குப் பலமான அரண். தேவன் எனக்குப் பாதுகாவலான இடம். ஜனங்களே, எப்போதும் தேவனை நம்புங்கள்! தேவனிடம் உங்கள் தொல்லைகளைக் கூறுங்கள்! தேவனே நமக்குப் பாதுகாவலான இடம்.

சங்கீதம் 62:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும். அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை. நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவீர்கள், சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள். அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைபண்ணி, அபத்தம்பேச விரும்புகிறார்கள்; தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள். (சேலா) என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை. என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா)

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்