சங்கீதம் 104:24-35

சங்கீதம் 104:24-35 TCV

யெகோவாவே, உமது செயல்கள் எண்ணற்றவை! அவை அனைத்தையும் நீர் ஞானத்தில் படைத்திருக்கிறீர்; பூமி நீர் படைத்த உயிரினங்களால் நிறைந்திருக்கின்றது. அங்கே விரிந்து பரந்த கடல் உண்டு; பெரிதும் சிறிதுமான எண்ணிலடங்கா வாழும் உயிரினங்கள் அங்கே உண்டு. அங்கே கப்பல்கள் இங்குமங்கும் போகின்றன; நீர் உருவாக்கிய லிவியாதானும் அங்கே துள்ளி விளையாடும். நீர் அவைகளுக்கு உரிய நேரத்தில் உணவு கொடுப்பீர் என்று அவைகளெல்லாம் உம்மையே பார்த்திருக்கின்றன. நீர் அதை அவர்களுக்கு வழங்கும்போது, அவை சேகரித்துக்கொள்கின்றன; நீர் உமது கரத்தைத் திறக்கும்போது, அவை நன்மைகளால் திருப்தியடைகின்றன. நீர் உமது முகத்தை மறைக்கும்போது, அவை திகைக்கின்றன; நீர் அவைகளின் சுவாசத்தை எடுத்துவிட, அவை இறந்து தூசிக்குத் திரும்புகின்றன. நீர் உமது ஆவியை அனுப்புகையில், அவை படைக்கப்படுகின்றன; நீர் பூமியின் மேற்பரப்பைப் புதுப்பிக்கிறீர். யெகோவாவின் மகிமை என்றென்றும் நிலைத்திருப்பதாக; யெகோவா தமது செயல்களில் மகிழ்வாராக. அவர் பூமியைப் பார்க்கும்போது அது நடுங்குகின்றது; மலைகளைத் தொடும்போது அவை புகைகின்றன. நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைப் பாடுவேன்; நான் உயிரோடிருக்குமட்டும் என் இறைவனுக்குத் துதி பாடுவேன். நான் யெகோவாவிடம் களிகூரும்பொழுது, என் தியானமும் அவருக்கு மகிழ்ச்சியாய் இருப்பதாக. ஆனால் பாவிகள் பூமியிலிருந்து இல்லாமல் போவார்களாக; கொடியவர்கள் இனி இல்லாமல் போவார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்