நீதிமொழி 23:19-35
நீதிமொழி 23:19-35 TCV
என் மகனே, சொல்வதைக் கவனமாய்க் கேட்டு ஞானமுள்ளவனாயிரு, உன் இருதயத்தைச் சரியான பாதையில் பதித்துக்கொள்: திராட்சை மதுவைக் குடிப்பவர்களோடும், மாம்சப் பெருந்தீனிக்காரரோடும் நீ சேராதே. ஏனெனில் குடிகாரர்களும், உணவுப்பிரியர்களும் ஏழைகள் ஆவார்கள்; போதை மயக்கம் அவர்களுக்குக் கந்தைத் துணிகளையே உடுத்துவிக்கும். உனக்கு வாழ்வு கொடுத்த உன் தந்தைக்குச் செவிகொடு; உன் தாய் வயது சென்றவளாயிருக்கும்போது அவளை இழிவாகக் கருதாதே. சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; ஞானத்தையும், அறிவுரையையும், மெய்யறிவையும் பெற்றுக்கொள். நீதிமானாகிய பிள்ளையின் தந்தை பெருமகிழ்ச்சியடைகிறான்; ஞானமுள்ள பிள்ளையை உடையவன் அதில் சந்தோஷப்படுகிறான். உன் தந்தையும் தாயும் மகிழ்ந்திருப்பார்களாக; உன்னைப் பெற்றவள் பெருமகிழ்ச்சியடைவாளாக! என் மகனே, உன் இருதயத்தை எனக்குக் கொடு; உன் கண்கள் என் வழிகளைப் பின்பற்றுவதில் மகிழட்டும். ஏனெனில் விபசாரி ஒரு ஆழமான படுகுழி; ஒழுக்கங்கெட்ட மனைவி மிக ஒடுக்கமான கிணறு. அவள் ஒரு கொள்ளைக்காரனைப்போல் பதுங்கிக் காத்திருக்கிறாள்; மனிதர்களுக்குள் உண்மையற்றவர்களைப் பெருகப்பண்ணுகிறாள். யாருக்கு வேதனை? யாருக்குத் துயரம்? யாருக்கு சண்டை? யாருக்கு பிதற்றுதல்? யாருக்குத் தேவையற்ற காயங்கள்? யாருக்கு இரத்தச் சிவப்பான கண்கள்? திராட்சைமது குடிப்பதிலேயே நேரத்தைக் கழிப்பவர்களுக்கும், எப்பொழுதும் கலப்பு மதுவைத் தேடித் திரிபவர்களுக்குமே. மது சிவப்பாய் இருக்கும்போதும், கிண்ணத்தில் பளபளக்கும் போதும் அதைப் பார்த்து மகிழாதே; அது மிருதுவாய் இறங்கும்போதும் மகிழ்ச்சி கொள்ளாதே! முடிவில் அது பாம்பைப்போல் கடிக்கும்; விரியன் பாம்பைப்போல் நஞ்சைக் கக்கும். அப்பொழுது உனது கண்கள் விசித்திரமான காட்சிகளைக் காணும், உனது மனம் குழப்பமானவற்றைக் கற்பனை செய்யும். நீ நடுக்கடலின்மேல் படுத்திருப்பவனைப் போலவும், கப்பலின் பாய்மரத்தில் படுத்து நித்திரை செய்பவனைப்போலவும் உணருவாய். “அவர்கள் என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை! அவர்கள் என்னைத் தாக்கினார்கள், நான் அதை உணரவில்லை! இன்னும் ஒருமுறை குடிப்பதற்கு நான் எப்பொழுது எழும்புவேன்?” என்று நீ சொல்வாய்.


