நீதிமொழிகள் 23:19-35 - Compare All Versions
நீதிமொழிகள் 23:19-35 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
என் மகனே, சொல்வதைக் கவனமாய்க் கேட்டு ஞானமுள்ளவனாயிரு, உன் இருதயத்தைச் சரியான பாதையில் பதித்துக்கொள்: திராட்சை மதுவைக் குடிப்பவர்களோடும், மாம்சப் பெருந்தீனிக்காரரோடும் நீ சேராதே. ஏனெனில் குடிகாரர்களும், உணவுப்பிரியர்களும் ஏழைகள் ஆவார்கள்; போதை மயக்கம் அவர்களுக்குக் கந்தைத் துணிகளையே உடுத்துவிக்கும். உனக்கு வாழ்வு கொடுத்த உன் தந்தைக்குச் செவிகொடு; உன் தாய் வயது சென்றவளாயிருக்கும்போது அவளை இழிவாகக் கருதாதே. சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; ஞானத்தையும், அறிவுரையையும், மெய்யறிவையும் பெற்றுக்கொள். நீதிமானாகிய பிள்ளையின் தந்தை பெருமகிழ்ச்சியடைகிறான்; ஞானமுள்ள பிள்ளையை உடையவன் அதில் சந்தோஷப்படுகிறான். உன் தந்தையும் தாயும் மகிழ்ந்திருப்பார்களாக; உன்னைப் பெற்றவள் பெருமகிழ்ச்சியடைவாளாக! என் மகனே, உன் இருதயத்தை எனக்குக் கொடு; உன் கண்கள் என் வழிகளைப் பின்பற்றுவதில் மகிழட்டும். ஏனெனில் விபசாரி ஒரு ஆழமான படுகுழி; ஒழுக்கங்கெட்ட மனைவி மிக ஒடுக்கமான கிணறு. அவள் ஒரு கொள்ளைக்காரனைப்போல் பதுங்கிக் காத்திருக்கிறாள்; மனிதர்களுக்குள் உண்மையற்றவர்களைப் பெருகப்பண்ணுகிறாள். யாருக்கு வேதனை? யாருக்குத் துயரம்? யாருக்கு சண்டை? யாருக்கு பிதற்றுதல்? யாருக்குத் தேவையற்ற காயங்கள்? யாருக்கு இரத்தச் சிவப்பான கண்கள்? திராட்சைமது குடிப்பதிலேயே நேரத்தைக் கழிப்பவர்களுக்கும், எப்பொழுதும் கலப்பு மதுவைத் தேடித் திரிபவர்களுக்குமே. மது சிவப்பாய் இருக்கும்போதும், கிண்ணத்தில் பளபளக்கும் போதும் அதைப் பார்த்து மகிழாதே; அது மிருதுவாய் இறங்கும்போதும் மகிழ்ச்சி கொள்ளாதே! முடிவில் அது பாம்பைப்போல் கடிக்கும்; விரியன் பாம்பைப்போல் நஞ்சைக் கக்கும். அப்பொழுது உனது கண்கள் விசித்திரமான காட்சிகளைக் காணும், உனது மனம் குழப்பமானவற்றைக் கற்பனை செய்யும். நீ நடுக்கடலின்மேல் படுத்திருப்பவனைப் போலவும், கப்பலின் பாய்மரத்தில் படுத்து நித்திரை செய்பவனைப்போலவும் உணருவாய். “அவர்கள் என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை! அவர்கள் என்னைத் தாக்கினார்கள், நான் அதை உணரவில்லை! இன்னும் ஒருமுறை குடிப்பதற்கு நான் எப்பொழுது எழும்புவேன்?” என்று நீ சொல்வாய்.
நீதிமொழிகள் 23:19-35 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என் மகனே, நீ கேட்டு ஞானமடைந்து, உன்னுடைய இருதயத்தை நல்வழியிலே நடத்து. மதுபானப்பிரியர்களோடும், இறைச்சி அதிகமாக சாப்பிடுகிறவர்களோடும் சேராதே. குடியனும், சாப்பாட்டுப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கிழிந்த துணிகளை அணிவிக்கும். உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன்னுடைய தாய் வயதானவளாகும்போது அவளை புறக்கணிக்காதே. சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு. நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள். என் மகனே, உன்னுடைய இருதயத்தை எனக்குக் கொடு; உன் கண்கள் என்னுடைய வழிகளைப் பார்ப்பதாக. ஒழுங்கீனமானவள் ஆழமான படுகுழி; அந்நியனுடைய மனைவி இடுக்கமான கிணறு. அவள் கொள்ளைக்காரனைப்போல் ஒளிந்திருந்து, மனிதர்களுக்குள்ளே பாவிகளைப் பெருகச்செய்கிறாள். ஐயோ, யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தம்கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி வாழ்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்கும்தானே. மதுபானம் இரத்த நிறமாக இருந்து, பாத்திரத்தில் பளபளப்பாகத் தோன்றும்போது, நீ அதைப் பார்க்காதே; அது மெதுவாக இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும். உன் கண்கள் ஒழுங்கீனமான பெண்களை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும். நீ நடுக்கடலிலே தூங்குகிறவனைப்போலவும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலவும் இருப்பாய். என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.
நீதிமொழிகள் 23:19-35 TAERV (பரிசுத்த பைபிள்)
என் மகனே கவனி. அறிவுள்ளவனாக இரு. சரியான வழியில் வாழ்வதில் எச்சரிக்கையாக இரு. மிகுதியான இறைச்சியை உண்பவர்களோடும் மிகுதியான மதுவைக் குடிப்பவர்களோடும் நட்பாக இருக்காதே! மிகுதியாக உண்பவனும் குடிப்பவனும் ஏழையாகிவிடுகிறான். அவர்கள் செய்பவையெல்லாம் உண்பது, குடிப்பது மற்றும் தூங்குவது மட்டுமே. விரைவில் அவர்கள் ஒன்றும் இல்லாமல் போகிறார்கள். உன் தந்தை சொல்வதைக் கவனமாகக் கேள். உன் தந்தை இல்லாவிட்டால் நீ பிறந்திருக்க முடியாது. எவ்வளவுதான் முதியவளாக இருந்தாலும் உன் தாய்க்கு மரியாதை கொடு. உண்மை, ஞானம், கல்வி, புரிந்துகொள்ளுதல் ஆகியவை விலை மதிப்புள்ளவை. இவைகளை விற்கமுடியாது. ஏனெனில் இவை மிகவும் விலையுயர்ந்தவை. நல்லவனின் தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார். ஒருவன் அறிவுள்ள பிள்ளையைப் பெற்றால் அப்பிள்ளை மகிழ்ச்சியைத் தருகிறான். எனவே உன் தந்தையையும் தாயையும் உன்னோடு மகிழ்ச்சியாக இருக்கும்படிசெய். உன் தாயை ஆனந்தமாக வைத்திரு. என் மகனே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். என் வாழ்க்கை உனக்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும். வேசிகளும் மோசமான பெண்களும் வலைகளைப் போன்றவர்கள். அவர்கள் உன்னால் வெளியேற முடியாத அளவுக்கு ஆழமான கிணற்றைப் போன்றவர்கள். மோசமான பெண் திருடனைப்போன்று உனக்காகக் காத்திருப்பாள். பலரை அவள் பாவிகளாக்குகிறாள். நிறைய மது குடிப்பவர்களுக்கு அநேகத் தீங்கு உண்டாகிறது. தங்களுக்குள் அடித்துக்கொண்டு சண்டைகளும் விவாதங்களும் செய்வார்கள். அவர்களின் கண்கள் சிவக்கின்றன. தங்களுக்குள் சண்டையிட்டுப் புலம்பி தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்கின்றனர். அவர்களால் இத்துன்பங்களைத் தவிர்த்திருக்க முடியும். மதுவைப்பற்றி எச்சரிக்கையாக இரு. அது அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறது. அது கிண்ணத்திற்குள் பளபளப்பாக உள்ளது. குடிக்கும்போது அது மென்மையாகவும் மெதுவாகவும் வயிற்றில் இறங்குகிறது. முடிவில் அது ஒரு பாம்பைப்போன்று கடித்துவிடுகிறது. மதுவானது உன்னை விநோதமானவற்றைப் பார்க்க வைக்கும். உன் மனம் குழப்பமடையும். நீ படுத்திருக்கும்போது, நீ கடலுக்குமேல் படுத்திருப்பதுபோல தோன்றும். நீ கப்பலில் படுத்திருப்பதுபோல் தோன்றும். “அவர்கள் என்னை அடித்தார்கள். ஆனால் அதை நான் உணரவில்லை. அவர்கள் என்னைத் தாக்கினார்கள். அது எனக்கு நினைவில்லை. இப்போது என்னால் எழ முடியவில்லை. எனக்கு மேலும் குடிக்க வேண்டும்போல உள்ளது” என்று நீ சொல்வாய்.
நீதிமொழிகள் 23:19-35 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து. மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே. குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும். உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே. சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு. நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள், என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக. வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு. அவள் கொள்ளைக்காரனைப்போல் பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள், ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே. மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும். உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும். நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய். என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.