நீதிமொழி 22:17-27

நீதிமொழி 22:17-27 TCV

ஞானிகளின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றைக் கவனத்தில்கொள், நான் போதிக்கும் அறிவை உன் இருதயத்தில் பதித்து வை. ஏனெனில் அவைகளை உன் இருதயத்தில் வைத்து, அவற்றை உன் உதடுகளில் ஆயத்தமாய் வைத்துக்கொள். உன் நம்பிக்கை யெகோவாவின்மேல் இருக்கவேண்டும் என்பதற்காகவே இன்று இவற்றை நான் உனக்குப் போதிக்கிறேன். அறிவையும் ஆலோசனையையும் கொடுக்கும் மேன்மையான முப்பது முதுமொழிகளை நான் உனக்கு எழுதவில்லையா? அது உனக்கு உண்மையும் நம்பகமுமான வார்த்தைகளைப் போதித்திருக்கிறது; எனவே நீ உன்னை அனுப்பியவனுக்கு தகுந்த பதிலைக் கொடுக்கலாம். ஏழைகளாய் இருக்கிறார்கள் என்பதற்காக நீ ஏழைகளைச் சுரண்டாதே; அவர்களை நீதிமன்றத்தில் சிறுமைப்படுத்தாதே. ஏனெனில் யெகோவா அவர்களுக்காக வழக்காடி, அவர்களின் உயிரை வாங்கப் பார்க்கிறவர்களின் உயிரை அவர் பறித்துக்கொள்வார். கோபக்காரனுடன் நட்புகொள்ளாதே, கடுங்கோபியோடு கூட்டாளியாய் இராதே. ஏனெனில் ஒருவேளை நீயும் அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன்னை கண்ணியில் சிக்க வைத்துக்கொள்ளலாம். பிறரின் கடனுக்காக ஒருபோதும் பொறுப்பேற்றுக் கொள்ளாதே; மற்றவருடைய கடனுக்காக அடைமானம் கொடுப்பவராயும் இராதே. ஒருவேளை உனக்கு அதைச் செலுத்த வழியில்லாமற்போனால், உன் படுக்கையும்கூட உன்னிடமிருந்து பறித்துக்கொள்ளப்படும்.