நீதிமொழிகள் 22:17-27
நீதிமொழிகள் 22:17-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஞானிகளின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றைக் கவனத்தில்கொள், நான் போதிக்கும் அறிவை உன் இருதயத்தில் பதித்து வை. ஏனெனில் அவைகளை உன் இருதயத்தில் வைத்து, அவற்றை உன் உதடுகளில் ஆயத்தமாய் வைத்துக்கொள். உன் நம்பிக்கை யெகோவாவின்மேல் இருக்கவேண்டும் என்பதற்காகவே இன்று இவற்றை நான் உனக்குப் போதிக்கிறேன். அறிவையும் ஆலோசனையையும் கொடுக்கும் மேன்மையான முப்பது முதுமொழிகளை நான் உனக்கு எழுதவில்லையா? அது உனக்கு உண்மையும் நம்பகமுமான வார்த்தைகளைப் போதித்திருக்கிறது; எனவே நீ உன்னை அனுப்பியவனுக்கு தகுந்த பதிலைக் கொடுக்கலாம். ஏழைகளாய் இருக்கிறார்கள் என்பதற்காக நீ ஏழைகளைச் சுரண்டாதே; அவர்களை நீதிமன்றத்தில் சிறுமைப்படுத்தாதே. ஏனெனில் யெகோவா அவர்களுக்காக வழக்காடி, அவர்களின் உயிரை வாங்கப் பார்க்கிறவர்களின் உயிரை அவர் பறித்துக்கொள்வார். கோபக்காரனுடன் நட்புகொள்ளாதே, கடுங்கோபியோடு கூட்டாளியாய் இராதே. ஏனெனில் ஒருவேளை நீயும் அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன்னை கண்ணியில் சிக்க வைத்துக்கொள்ளலாம். பிறரின் கடனுக்காக ஒருபோதும் பொறுப்பேற்றுக் கொள்ளாதே; மற்றவருடைய கடனுக்காக அடைமானம் கொடுப்பவராயும் இராதே. ஒருவேளை உனக்கு அதைச் செலுத்த வழியில்லாமற்போனால், உன் படுக்கையும்கூட உன்னிடமிருந்து பறித்துக்கொள்ளப்படும்.
நீதிமொழிகள் 22:17-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை. அவைகளை உன் உள்ளத்தில் காத்து, அவைகளை உன்னுடைய உதடுகளில் நிலைத்திருக்கச்செய்யும்போது, அது இன்பமாக இருக்கும். உன் நம்பிக்கை யெகோவாமேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன். சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை பதிலாக சொல்லும்படிக்கும், ஆலோசனையையும், ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா? ஏழையாக இருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நீதிமன்றத்தில் உபத்திரவப்படுத்தாதே. யெகோவா அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய உயிரைக் கொள்ளையிடுவார். கோபக்காரனுக்குத் தோழனாகாதே; கோபமுள்ள மனிதனோடு நடக்காதே. அப்படிச் செய்தால். நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன்னுடைய ஆத்துமாவுக்குக் கண்ணியை கொண்டுவருவாய். உறுதியளித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே. செலுத்த உனக்கு ஒன்றும் இல்லாமல் இருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.
நீதிமொழிகள் 22:17-27 பரிசுத்த பைபிள் (TAERV)
நான் சொல்லுகிறதைக் கவனியுங்கள். அறிவாளிகள் சொல்லியிருக்கின்றவற்றை நான் உங்களுக்குப் போதிக்கிறேன். இப்போதனைகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நீ இவற்றை நினைவில் வைத்திருந்தால் இது உனக்கு நல்லது. நீ இவ்வார்த்தைகளைச் சொன்னால் இவை உனக்கு உதவியாக இருக்கும். இப்பொழுது இவற்றை நான் உனக்கு போதிக்கிறேன். நீ கர்த்தரை நம்ப வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நான் உனக்காக முப்பது அறிவுரைகளை எழுதியிருக்கிறேன். இவை அறிவும் ஞானமும் உடையவை. இவை உனக்கு உண்மையானவற்றையும் முக்கியமானவற்றையும் போதிக்கும். அப்போது உன்னை அனுப்பியவருக்கு நீ நல்ல பதில்களைக் கூறமுடியும். ஏழைகளிடமிருந்து திருடுவது எளிது. ஆனால் அதனைச் செய்யாதே. வழக்கு மன்றத்தில் ஏழைகளைச் சுரண்டாதே. கர்த்தர் அவர்கள் பக்கம் இருக்கிறார். அவர்களுக்கு அவர் உதவுகிறார். அவர்களிடமிருந்து எடுத்துக்கொண்ட எந்தப் பொருளையும் அவர் திரும்ப எடுத்துக்கொள்கிறார். மிக சீக்கிரத்தில் கோபங்கொள்கிறவர்களோடு நட்புகொள்ளாதே. விரைவில் நிதானம் இழப்பவர்கள் பக்கத்தில் போகாதே. நீ அவ்வாறு செய்தால், நீயும் அவர்களைப்போன்று ஆகக் கற்றுக்கொள்வாய். பிறகு அவர்களுக்குரிய அதே துன்பம் உனக்கும் வரும். அடுத்தவன் பட்ட கடனுக்குப் பொறுப்பேற்பதாக நீ வாக்குறுதி தராதே. உன்னால் அந்தக் கடனைத் தீர்க்க முடியாவிட்டால், உன்னிடமுள்ள அனைத்தையும் இழந்துபோவாய். நீ தூங்கும் படுக்கையை எதற்காக இழக்கவேண்டும்?
நீதிமொழிகள் 22:17-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை. அவைகளை உன் உள்ளத்தில் காத்து, அவைகளை உன் உதடுகளில் நிலைத்திருக்கப்பண்ணும்போது, அது இன்பமாயிருக்கும். உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன். சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை மறுமொழியாகச் சொல்லும்படிக்கும், ஆலோசனையையும் ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா? ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே. கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார். கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே. அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய். கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே. செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.