மத்தேயு 15:1-11

மத்தேயு 15:1-11 TCV

பின்பு பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து, “உமது சீடர்கள் ஏன் முன்னோரின் பாரம்பரிய முறையை மீறுகிறார்கள்? அவர்கள் தாங்கள் சாப்பிடுவதற்கு முன்பு தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே!” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “உங்களுடைய பாரம்பரிய முறைகளின் நிமித்தம், நீங்கள் ஏன் இறைவனின் கட்டளைகளை மீறுகிறீர்கள்? ஏனெனில், ‘உனது தகப்பனையும், தாயையும் கனம்பண்ணுவாயாக’ என்றும், ‘தனது தகப்பனையோ, தாயையோ சபித்தால், அவன் கொல்லப்படவேண்டும்’ என்றும், இறைவன் சொன்னாரே. ஆனால் நீங்களோ, ஒருவன் தன் தாய் தகப்பனைப் பார்த்து, ‘என்னிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய உதவியை காணிக்கையாக இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டேன்’ என்று அவன் சொன்னால், அவன் தன் தாயையோ தகப்பனையோ கனம்பண்ணவேண்டிய அவசியமில்லை என்று சொல்கிறீர்கள். நீங்கள் உங்கள் பாரம்பரியத்தின் நிமித்தம், இறைவனின் வார்த்தைகளை பயனற்றதாக்குகிறீர்கள். வேஷக்காரர்களே! உங்களைக்குறித்து சரியாகவே இறைவாக்கினன் ஏசாயா இறைவாக்குரைத்தான்: “ ‘இந்த மக்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; ஆனால் அவர்கள் இருதயமோ என்னைவிட்டுத் தூரமாயிருக்கிறது. அவர்கள் வீணாகவே என்னை ஆராதிக்கிறார்கள்; அவர்களுடைய போதனைகளோ, மனிதர்களின் ஒழுங்குவிதிகளே’ ” என்றார். பின்பு இயேசு மக்கள் கூட்டத்தைத் தன்னிடம் அழைத்து சொன்னதாவது: “கேட்டு விளங்கிக்கொள்ளுங்கள். மனிதனுடைய வாய்க்குள் போவது அவனை அசுத்தப்படுத்தாது. ஆனால் அவனுடைய வாயிலிருந்து வெளியே வருவது எதுவோ, அதுவே அவனை அசுத்தப்படுத்தும்” என்றார்.

மத்தேயு 15:1-11 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்