மத்தேயு 15:1-11

மத்தேயு 15:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து, “உமது சீடர்கள் ஏன் முன்னோரின் பாரம்பரிய முறையை மீறுகிறார்கள்? அவர்கள் தாங்கள் சாப்பிடுவதற்கு முன்பு தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே!” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “உங்களுடைய பாரம்பரிய முறைகளின் நிமித்தம், நீங்கள் ஏன் இறைவனின் கட்டளைகளை மீறுகிறீர்கள்? ஏனெனில், ‘உனது தகப்பனையும், தாயையும் கனம்பண்ணுவாயாக’ என்றும், ‘தனது தகப்பனையோ, தாயையோ சபித்தால், அவன் கொல்லப்படவேண்டும்’ என்றும், இறைவன் சொன்னாரே. ஆனால் நீங்களோ, ஒருவன் தன் தாய் தகப்பனைப் பார்த்து, ‘என்னிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய உதவியை காணிக்கையாக இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டேன்’ என்று அவன் சொன்னால், அவன் தன் தாயையோ தகப்பனையோ கனம்பண்ணவேண்டிய அவசியமில்லை என்று சொல்கிறீர்கள். நீங்கள் உங்கள் பாரம்பரியத்தின் நிமித்தம், இறைவனின் வார்த்தைகளை பயனற்றதாக்குகிறீர்கள். வேஷக்காரர்களே! உங்களைக்குறித்து சரியாகவே இறைவாக்கினன் ஏசாயா இறைவாக்குரைத்தான்: “ ‘இந்த மக்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; ஆனால் அவர்கள் இருதயமோ என்னைவிட்டுத் தூரமாயிருக்கிறது. அவர்கள் வீணாகவே என்னை ஆராதிக்கிறார்கள்; அவர்களுடைய போதனைகளோ, மனிதர்களின் ஒழுங்குவிதிகளே’ ” என்றார். பின்பு இயேசு மக்கள் கூட்டத்தைத் தன்னிடம் அழைத்து சொன்னதாவது: “கேட்டு விளங்கிக்கொள்ளுங்கள். மனிதனுடைய வாய்க்குள் போவது அவனை அசுத்தப்படுத்தாது. ஆனால் அவனுடைய வாயிலிருந்து வெளியே வருவது எதுவோ, அதுவே அவனை அசுத்தப்படுத்தும்” என்றார்.

மத்தேயு 15:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் இயேசுவினிடத்தில் வந்து: உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் சாப்பிடுகிறார்களே! என்றார்கள். அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? உன் தகப்பனையும் உன் தாயையும் மதித்து நடப்பாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கட்டளை கொடுத்திருக்கிறாரே. நீங்களோ, எவனாவது தகப்பனையாவது தாயையாவது பார்த்து உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதை தேவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது மதிக்காமற்போனாலும், அவனுடைய கடமை முடிந்ததென்று போதித்து, உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை அவமாக்கிவருகிறீர்கள். மாயக்காரர்களே, உங்களைக்குறித்து: இந்த மக்கள் தங்களுடைய உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து, தங்களுடைய உதடுகளினால் என்னை மதிக்கிறார்கள்; அவர்கள் இருதயமோ என்னைவிட்டு தூரமாக விலகியிருக்கிறது; மனிதர்களுடைய கட்டளைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாகச் சொல்லியிருக்கிறான் என்றார்.” பின்பு அவர் மக்களை வரவழைத்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்டு உணருங்கள். வாய்க்குள்ளே போகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும்என்றார்.

மத்தேயு 15:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்பொழுது பரிசேயர்கள் சிலரும் நியாயப்பிரமாண போதகர்களில் சிலரும் இயேசுவிடம் வந்தார்கள். எருசலேமிலிருந்து வந்த அவர்கள் இயேசுவிடம், “நமக்கு முன்னர் வாழ்ந்த பெரியோர்கள் நமக்கு இட்ட கட்டளைகளை உமது சீஷர்கள் ஏன் பின்பற்றுவதில்லை? உணவு உண்பதற்கு முன் உமது சீஷர்கள் ஏன் கைகளைக் கழுவுவதில்லை?” என்று கேட்டனர். இயேசு அவர்களுக்கு, “உங்கள் சட்டங்களைப் பின்பற்றும்படிக்கு நீங்கள் ஏன் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள்? ‘உன் தாய் தந்தையரை நீ மதிக்க வேண்டும்’ என்று தேவன் சொன்னார். மேலும் ‘தந்தையிடமோ தாயிடமோ தீய சொற்களைக் கூறுகிறவன் கொல்லப்படுவான்’ என்றும் தேவன் சொல்லியுள்ளார். ஆனால் நீங்கள் ஒருவனுக்கு தன் தாய் தந்தையரிடம், ‘நான் உங்களுக்கு ஒரு உதவி செய்யமுடியும். ஆனால், அதை உங்களுக்குச் செய்யமாட்டேன். அதைத் தேவனுக்குக் காணிக்கையாக்குவேன்’ என்று கூறுவதற்குப் போதிக்கிறீர்கள். தந்தையை மதிக்காதிருக்க நீங்கள் போதிக்கிறீர்கள். தேவன் சொன்னதைச் செய்வது முக்கியமல்ல என்று நீங்கள் போதிக்கிறீர்கள். நீங்கள் ஏற்படுத்தியுள்ள சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதே முக்கியமானதென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். நீங்கள் மாயமானவர்கள்! உங்களைப்பற்றி ஏசாயா சரியாகவே இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “இவர்கள் என்னை மதிப்பதாகக் கூறுகிறார்கள். ஆனாலும் மெய்யாகவே அவர்கள் வாழ்வில் நான் முக்கியமில்லை. என்னை வணங்குவதில் பொருளில்லை. அவர்கள் போதிப்பதெல்லாம் மனிதர் உண்டாக்கிய சட்டங்களே!” இயேசு மக்களைத் தன்னருகில் அழைத்து, “நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். ஒருவன் வாய்க்குள்ளே போகிறது அவனை அசுத்தமாக்காது. மாறாக, ஒருவன் பேசும் சொற்களாலேயே அசுத்தமடைகிறான்” என்று சொன்னார்.

மத்தேயு 15:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து: உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம்பண்ணுகிறார்களே! என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே. நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்து, உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள். மாயக்காரரே, உங்களைக்குறித்து: இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார். பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள். வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்