லூக்கா 14:25-35

லூக்கா 14:25-35 TCV

மக்கள் பெரும் கூட்டமாய் இயேசுவுடன் போய்க்கொண்டிருந்தார்கள். இயேசு திரும்பி, அவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “யாராவது என்னிடம் வந்து, தன் தகப்பனையும், தாயையும், மனைவியையும், பிள்ளைகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தன் உயிரையும் வெறுக்காவிட்டால், அவர்கள் என் சீடராய் இருக்கமுடியாது. யாராவது தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்பற்றாவிட்டால் எனக்குச் சீடராயிருக்க முடியாது. “உங்களில் யாராவது ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பினால், முதலில் அவர்கள் உட்கார்ந்து, அதைக் கட்டி முடிப்பதற்குப் போதுமான பணம் தம்மிடம் இருக்கிறதா என்று கணக்குப் பார்க்காமல் இருப்பார்களோ? அஸ்திபாரத்தைப் போட்டு விட்டு, அதைக் கட்டிமுடிக்க அவர்களால் முடியாவிட்டால், அதைப் பார்க்கின்ற எல்லோரும், அவர்களை கேலி செய்வார்கள். ‘இவன் கட்டத் தொடங்கினான். ஆனாலும், அதைக் கட்டிமுடிக்க அவனால் முடியவில்லை’ என்பார்கள். “அல்லது ஒரு அரசன் இன்னொரு அரசனுக்கு எதிராக யுத்தம் செய்ய முற்பட்டால், முதலில் உட்கார்ந்து அவன், இருபதாயிரம் வீரர்களோடுத் தன்னை எதிர்த்து வருபவனை, தான் தன்னிடம் உள்ள பத்தாயிரம் வீரர்களோடு எதிர்த்து நிற்கமுடியுமா என்று யோசித்துப்பார்க்க மாட்டானோ? அவனால் அப்படி நிற்கமுடியாவிட்டால், எதிரி தூரத்தில் வந்துகொண்டிருக்கும் போதே, அவன் பிரதிநிதிகளை அனுப்பி, சமாதான உடன்பாட்டிற்கு வரும்படி கேட்டுக்கொள்வான். அவ்விதமாகவே, உங்களில் யாராவது தம்மிடமுள்ள எல்லாவற்றையும் விட்டுவிடாவிட்டால், எனக்கு சீடராக இருக்கமுடியாது. “உப்பு நல்லதே. ஆனால், அதன் உவர்ப்புத் தன்மையை இழந்துபோனால், மீண்டும் அதை எப்படி உவர்ப்பு உடையதாக்க முடியும்? அது மண்ணிற்கும் பயனற்றது. அதை உரமாகவும் பயன்படுத்த முடியாது; அதை வெளியேதான் கொட்டிவிடவேண்டும். “கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.

லூக்கா 14:25-35 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்