லூக்கா 14:25-35

லூக்கா 14:25-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மக்கள் பெரும் கூட்டமாய் இயேசுவுடன் போய்க்கொண்டிருந்தார்கள். இயேசு திரும்பி, அவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “யாராவது என்னிடம் வந்து, தன் தகப்பனையும், தாயையும், மனைவியையும், பிள்ளைகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தன் உயிரையும் வெறுக்காவிட்டால், அவர்கள் என் சீடராய் இருக்கமுடியாது. யாராவது தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்பற்றாவிட்டால் எனக்குச் சீடராயிருக்க முடியாது. “உங்களில் யாராவது ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பினால், முதலில் அவர்கள் உட்கார்ந்து, அதைக் கட்டி முடிப்பதற்குப் போதுமான பணம் தம்மிடம் இருக்கிறதா என்று கணக்குப் பார்க்காமல் இருப்பார்களோ? அஸ்திபாரத்தைப் போட்டு விட்டு, அதைக் கட்டிமுடிக்க அவர்களால் முடியாவிட்டால், அதைப் பார்க்கின்ற எல்லோரும், அவர்களை கேலி செய்வார்கள். ‘இவன் கட்டத் தொடங்கினான். ஆனாலும், அதைக் கட்டிமுடிக்க அவனால் முடியவில்லை’ என்பார்கள். “அல்லது ஒரு அரசன் இன்னொரு அரசனுக்கு எதிராக யுத்தம் செய்ய முற்பட்டால், முதலில் உட்கார்ந்து அவன், இருபதாயிரம் வீரர்களோடுத் தன்னை எதிர்த்து வருபவனை, தான் தன்னிடம் உள்ள பத்தாயிரம் வீரர்களோடு எதிர்த்து நிற்கமுடியுமா என்று யோசித்துப்பார்க்க மாட்டானோ? அவனால் அப்படி நிற்கமுடியாவிட்டால், எதிரி தூரத்தில் வந்துகொண்டிருக்கும் போதே, அவன் பிரதிநிதிகளை அனுப்பி, சமாதான உடன்பாட்டிற்கு வரும்படி கேட்டுக்கொள்வான். அவ்விதமாகவே, உங்களில் யாராவது தம்மிடமுள்ள எல்லாவற்றையும் விட்டுவிடாவிட்டால், எனக்கு சீடராக இருக்கமுடியாது. “உப்பு நல்லதே. ஆனால், அதன் உவர்ப்புத் தன்மையை இழந்துபோனால், மீண்டும் அதை எப்படி உவர்ப்பு உடையதாக்க முடியும்? அது மண்ணிற்கும் பயனற்றது. அதை உரமாகவும் பயன்படுத்த முடியாது; அதை வெளியேதான் கொட்டிவிடவேண்டும். “கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.

லூக்கா 14:25-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு அநேக மக்கள் அவரோடுகூடப் பயணமாகப் போகும்போது, அவர்களிடமாக அவர் திரும்பிப்பார்த்து: யாராவது ஒருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீடனாக இருக்கமாட்டான். தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என் பின்னே வராதவன் எனக்குச் சீடனாக இருக்கமுடியாது. உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்டவிருப்பமாக இருந்து, அஸ்திபாரம் போட்டப்பின்பு வேலையை முடிக்கமுடியாமற்போனால், பார்க்கிறவர்களெல்லோரும்: இந்த மனிதன் கட்டத்தொடங்கி, முடிக்க முடியாமற்போனான் என்று சொல்லி தன்னை ஏளனமாக பேசாதபடிக்கு, அதைக் கட்டிமுடிப்பதற்கு தனக்கு வேண்டிய பொருளாதாரம் உண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செலவாகும் தொகையைக் கணக்குப்பார்க்காமல் இருப்பானோ? அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடு போர்செய்யப்போகிறபோது, தன்மேல் இருபதாயிரம் போர்வீரர்களோடு வருகிற அவனைத் தான் பத்தாயிரம் போர்வீரர்களைக்கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்னமே உட்கார்ந்து ஆலோசனை செய்யாமலிருப்பானோ? கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, தூதுவரை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே. அப்படியே உங்களில் எவனாவது தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீடனாக இருக்கமாட்டான். உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்? அது நிலத்துக்காவது எருவுக்காவது உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார்.

லூக்கா 14:25-35 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசுவோடு பலர் பயணம் செய்துகொண்டு இருந்தனர். இயேசு மக்களை நோக்கி, “என்னிடம் வருகிற ஒருவன் அவனது தந்தையையோ, தாயையோ, சகோதரரையோ, சகோதரிகளையோ, என்னைக் காட்டிலும் அதிகமாக நேசித்தால் அம்மனிதன் எனக்குச் சீஷனாக ஆக முடியாது. ஒருவன் தன்னை நேசிப்பதைக் காட்டிலும் அதிகமாக என்னை நேசிக்க வேண்டும்! ஒருவன் என்னைப் பின்பற்றும்போது அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சிலுவையை (துன்பத்தை) சுமக்காவிட்டால் அவன் எனக்குச் சீஷனாக முடியாது. “ஒரு கோட்டையைக் கட்டும் முன்பு, முதலில் அமர்ந்து அதைக் கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைத் தீர்மானிப்பீர்கள். வேலையை முடிப்பதற்குத் தேவையான பணம் உங்களிடம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அதைச் செய்யாவிட்டால் நீங்கள் வேலையைத் தொடங்கினாலும், அதை முடிக்க உங்களால் முடியாது. நீங்கள் அதை முடிக்க முடியாவிட்டால் அதைக் கவனிக்கிற எல்லா மக்களும் உங்களைப் பார்த்து நகைப்பார்கள். அவர்கள், ‘இந்த மனிதன் கட்ட ஆரம்பித்தான். ஆனால் முடிக்க முடியவில்லை’ என்று சொல்வார்கள். “ஓர் ராஜா மற்றோர் ராஜாவுக்கு எதிராகப் போரிடச் சென்றால், முதலில் அமர்ந்து திட்டமிடுவான். ராஜாவிடம் பத்தாயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தால் இருபதாயிரம் வீரர்கள் கொண்ட மற்ற ராஜாவைத் தோற்கடிக்க முடியுமா எனப் பார்ப்பான். அவனால் மற்ற ராஜாவைத் தோற்கடிக்க முடியாதென்றால், எதிரி இன்னும் தொலைவான இடத்தில் இருக்கும்பொழுதே சில ஆட்களை அனுப்பி அந்த ராஜாவிடம் சமாதானத்திற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபடுவான். “அதைப்போலவே முதலில் நீங்கள் திட்டமிட வேண்டும். என்னைப் பின்பற்ற வேண்டுமானால் உங்களிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்துவிட வேண்டும், அவ்வாறு செய்யவில்லை என்றால், நீங்கள் எனது சீஷராக இருக்க முடியாது!” “உப்பு ஒரு நல்ல பொருள். ஆனால் உப்பு அதன் சுவையை இழந்துபோனால் அதனால் பயன் எதுவும் இல்லை. அதைத் திரும்பவும் சுவை உடையதாக மாற்ற முடியாது. மண்ணிற்காகவோ, உரமாகவோ, கூட அதனைப் பயன்படுத்த முடியாது. மக்கள் அதை வீசியெறிந்துவிடுவார்கள். “என்னைக் கேட்கிற மக்களே! கவனியுங்கள்” என்றார்.

லூக்கா 14:25-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர்களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து: யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்: இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானோ? அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப்போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ? கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாதிபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே. அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்? அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்