புலம்பல் 2:1-6

புலம்பல் 2:1-6 TCV

யெகோவா தமது கோபத்தின் மேகத்தால் சீயோன் மகளை எப்படி மூடிப்போட்டார்; இஸ்ரயேலின் சீர்சிறப்பை வானத்திலிருந்து பூமிக்குத் தள்ளிவிட்டார்; அவர் தமது கோபத்தின் நாளில் தமது பாதபீடத்தை நினைவுகூரவில்லை. யாக்கோபின் எல்லா குடியிருப்புகளையும் யெகோவா இரக்கமின்றி விழுங்கிவிட்டார்; யூதா மகளின் கோட்டைகளை தமது கோபத்தில் தகர்த்து வீழ்த்திப்போட்டார். அரசுகளையும், அதன் இளவரசர்களையும் அவமானப்படுத்தி தரையிலே தள்ளினார். அவருடைய கோபத்தினால் இஸ்ரயேலின் முழு பலத்தையும் இல்லாமல் பண்ணினார். அவர் தமது வலது கரத்தை, பகைவர்கள் நெருங்கி வருகையில், விலக்கிக்கொண்டார். அவர் யாக்கோபின் நாட்டில், தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் எரிக்கிற, கொழுந்துவிட்டெரிகிற நெருப்பைப்போல எரிந்தார். அவர் ஒரு பகைவனைப்போல வில்லை நாணேற்றினார்; அவரது வலதுகரம் ஆயத்தமாயிருக்கிறது. அவர் பகைவனைப்போல கண்ணுக்கு இனியவர்களையெல்லாம் வெட்டிப்போட்டார்; சீயோன் மகளின் கூடாரத்தில் தமது கடுங்கோபத்தை நெருப்பைப்போல் ஊற்றிவிட்டார். ஆண்டவர் ஒரு பகைவனைப் போலிருக்கிறார்; அவர் இஸ்ரயேலை விழுங்கிவிட்டார்; அவளுடைய எல்லா அரண்மனைகளையும் விழுங்கி, அவளுடைய கோட்டைகளை அழித்துவிட்டார். யூதாவின் மகளுக்கு புலம்பலையும், துக்கங்கொண்டாடலையும் அதிகரிக்கச் செய்தார். அவர் தமது ஆலயத்தை ஒரு தோட்டத்தின் குடிசையைப்போல பாழாக்கிவிட்டார்; அவர் தமது சபைக்கூடும் இடத்தையும் அழித்துப்போட்டார். யெகோவா, சீயோனுக்கு நியமித்த பண்டிகைகளையும், ஓய்வுநாட்களையும் அவள் நினைவிலிருந்தே எடுத்துப்போட்டார்; தமது கடுங்கோபத்தில் அரசனையும், ஆசாரியனையும் புறக்கணித்துப் போட்டார்.