ஆதியாகமம் 40:8-15
ஆதியாகமம் 40:8-15 TCV
அதற்கு அவர்கள், “நாங்கள் இருவரும் கனவு கண்டோம்; அவற்றுக்கு விளக்கம் தர ஒருவருமில்லை” என்றார்கள். அதற்கு யோசேப்பு, “விளக்கங்கள் இறைவனுக்குரியதல்லவா? உங்கள் கனவுகளை என்னிடம் சொல்லுங்கள்” என்றான். பானம் பரிமாறுவோருக்குப் பொறுப்பாயிருந்தவன் தன் கனவை யோசேப்புக்குச் சொன்னான். “என் கனவில் எனக்கு முன்பாக ஒரு திராட்சைக்கொடி இருப்பதைக் கண்டேன்; அக்கொடியில் மூன்று கிளைகள் இருந்தன. அவை துளிர்த்த உடனே பூ பூத்து, அதன் குலைகள் பழுத்துத் திராட்சைப் பழங்களாயின. பார்வோனுடைய பாத்திரம் என் கையில் இருந்தது, நான் திராட்சைப் பழங்களை எடுத்து, அவற்றை அப்பாத்திரத்தில் பிழிந்து, பார்வோனின் கையிலே கொடுத்தேன்” என்றான். அப்பொழுது யோசேப்பு, “கனவின் விளக்கம் இதுவே: மூன்று கிளைகளும் மூன்று நாட்களாகும். பார்வோன் மூன்று நாட்களுக்குள் உன்னை விடுவித்து, உன்னை உன் பழைய பதவியில் அமர்த்துவான்; நீ பானம் பரிமாறுகிறவனாய் இருந்தபோது செய்தவாறே, பார்வோனின் பாத்திரத்தை அவன் கையில் கொடுப்பாய்” என்றான். மேலும் அவன், “மீண்டும் நீ நல்ல நிலையில் இருக்கும்போது, என்னை நினைவில் வைத்து, எனக்குத் தயவுகாட்டு; பார்வோனிடம் என்னைப்பற்றிச் சொல்லி, இந்த சிறையிலிருந்து என்னை விடுதலையாக்கு. ஏனெனில், நான் எபிரெயருடைய நாட்டிலிருந்து பலவந்தமாய் இங்கு கொண்டுவரப்பட்டேன், இங்கேயும் இந்தக் காவல் கிடங்கில் வைக்கப்படுவதற்கு ஏதுவான குற்றம் எதையும் நான் செய்யவில்லை” என்றான்.


