ஆதியாகமம் 21:9-19

ஆதியாகமம் 21:9-19 TCV

ஆனாலும், எகிப்தியப் பெண்ணான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகன், தன் மகனைக் கேலி பண்ணுகிறதை சாராள் கண்டாள். அப்பொழுது அவள் ஆபிரகாமிடம், “இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் வெளியே அனுப்பிவிடும்; உரிமைச்சொத்தில் இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் மகன் ஈசாக்குடன் சொத்துரிமையை ஒருபோதும் பகிர்ந்துகொள்ளக் கூடாது” என்றாள். தன் மகனைக் குறித்த இந்தக் காரியம் ஆபிரகாமை வெகுவாய்த் துயரப்படுத்தியது. அப்பொழுது இறைவன் ஆபிரகாமிடம், “அந்தச் சிறுவனையும், உன் பணிப்பெண்ணையும் குறித்து அதிகம் கவலைப்படாதே. சாராள் சொல்வதை எல்லாம் கேள், ஏனெனில் ஈசாக்கின் மூலமே உனக்கு சந்ததிகள் உண்டாகும். பணிப்பெண்ணின் மகனும் உன் சந்ததியானபடியால், அவனையும் ஒரு நாடாக்குவேன்” என்றார். மறுநாள் அதிகாலையில் ஆபிரகாம் கொஞ்சம் உணவையும், ஒரு தோல் குடுவையில் தண்ணீரையும் எடுத்து ஆகாரிடம் கொடுத்தான். அவன் அவற்றை அவளுடைய தோளில் வைத்து, மகனுடன் அவளை அனுப்பிவிட்டான். அவள் தன் வழியே போய் பெயெர்செபாவின் வனாந்திரத்தில் அலைந்து திரிந்தாள். தோல் குடுவையின் தண்ணீர் முடிந்ததும், அவள் புதர்ச்செடிகள் ஒன்றின்கீழ் தன் மகனை விட்டு, “பிள்ளை சாகிறதை என்னால் பார்க்க முடியாது” என்று சொல்லி அவன் இருக்கும் இடத்திலிருந்து ஒரு அம்பு பாயும் தூரத்தில் போய் உட்கார்ந்து, அவள் சத்தமாய் அழத்தொடங்கினாள். இறைவன் பிள்ளை அழும் சத்தத்தைக் கேட்டார், இறைவனின் தூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு, “ஆகாரே, நடந்தது என்ன? பயப்படாதே; அங்கே உன் மகன் அழும் சத்தத்தை இறைவன் கேட்டார். அவனைத் தூக்கி, அவனைக் கையில் பிடித்துக்கொண்டு போ. அவனை ஒரு பெரிய நாடாக்குவேன்” என்றார். பின்பு இறைவன் அவளுடைய கண்களைத் திறந்தார், அப்போது அவள் தண்ணீருள்ள ஒரு கிணற்றைக் கண்டாள். அவள் தன் குடுவையில் நீரை நிரப்பி தன் மகனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்