யாத்திராகமம் 1:13-22

யாத்திராகமம் 1:13-22 TCV

அவர்கள் இஸ்ரயேலரைக் கொடூரமாய் நடத்தி வேலை வாங்கினார்கள். செங்கல்லும் சாந்தும் செய்யும் கடினமான வேலைகளினாலும், வயல்களில் செய்யும் எல்லா விதமான வேலைகளினாலும், எகிப்தியர் அவர்களுடைய வாழ்க்கையைக் கசப்பாக்கினார்கள்; இரக்கமின்றி அவர்களுடைய எல்லாக் கடின வேலைகளிலும் அவர்களைக் கொடூரமாய் நடத்தினார்கள். எகிப்திய அரசன், சிப்பிராள், பூவாள் என்னும் எபிரெய மருத்துவச்சிகளிடம், “எபிரெய பெண்களின் பிரசவ நேரத்தில் அவர்கள் மணையின்மேல் இருக்கையில் நீங்கள் பார்த்து, பிறக்கும் பிள்ளை ஆண் குழந்தையானால், அதைக் கொன்றுபோடுங்கள்; பெண் குழந்தையானால் அதை வாழவிடுங்கள்” என்றான். ஆனாலும் மருத்துவச்சிகளோ இறைவனுக்குப் பயந்து, எகிப்திய அரசன் தங்களுக்குச் செய்யச் சொல்லியிருந்ததைச் செய்யவில்லை; அவர்கள் ஆண்பிள்ளைகளையும் வாழவிட்டார்கள். இதை அறிந்த எகிப்திய அரசன் மருத்துவச்சிகளை அழைப்பித்து, “நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள்? ஆண் பிள்ளைகளை ஏன் வாழ விட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டான். மருத்துவச்சிகள் பார்வோனுக்குப் பதிலளித்து, “எபிரெய பெண்கள் எகிப்திய பெண்களைப் போன்றவர்களல்ல; அவர்கள் பலமுள்ளவர்கள், அதனால் மருத்துவச்சிகள் வந்து சேருமுன்பே அவர்கள் குழந்தைகளைப் பெற்றுவிடுகிறார்கள்” என்றார்கள். இறைவன் மருத்துவச்சிகளுக்குத் தயவு காட்டினார்; இஸ்ரயேல் மக்கள் பெருகி எண்ணிக்கையில் இன்னும் அதிகரித்தார்கள். மருத்துவச்சிகள் இறைவனுக்குப் பயந்தபடியால், அவர் அவர்களுடைய சொந்தக் குடும்பங்களை விருத்தியடையச் செய்தார். பின்பு பார்வோன் தன் மக்கள் எல்லோருக்கும் கட்டளை கொடுத்து, “எபிரெயருக்குப் பிறக்கும் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் நீங்கள் நைல் நதியில் எறிந்துவிடவேண்டும்; ஆனால், எல்லா பெண் குழந்தைகளையும் வாழவிடுங்கள்” என்றான்.