யாத்திராகமம் 1:13-22

யாத்திராகமம் 1:13-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் இஸ்ரயேலரைக் கொடூரமாய் நடத்தி வேலை வாங்கினார்கள். செங்கல்லும் சாந்தும் செய்யும் கடினமான வேலைகளினாலும், வயல்களில் செய்யும் எல்லா விதமான வேலைகளினாலும், எகிப்தியர் அவர்களுடைய வாழ்க்கையைக் கசப்பாக்கினார்கள்; இரக்கமின்றி அவர்களுடைய எல்லாக் கடின வேலைகளிலும் அவர்களைக் கொடூரமாய் நடத்தினார்கள். எகிப்திய அரசன், சிப்பிராள், பூவாள் என்னும் எபிரெய மருத்துவச்சிகளிடம், “எபிரெய பெண்களின் பிரசவ நேரத்தில் அவர்கள் மணையின்மேல் இருக்கையில் நீங்கள் பார்த்து, பிறக்கும் பிள்ளை ஆண் குழந்தையானால், அதைக் கொன்றுபோடுங்கள்; பெண் குழந்தையானால் அதை வாழவிடுங்கள்” என்றான். ஆனாலும் மருத்துவச்சிகளோ இறைவனுக்குப் பயந்து, எகிப்திய அரசன் தங்களுக்குச் செய்யச் சொல்லியிருந்ததைச் செய்யவில்லை; அவர்கள் ஆண்பிள்ளைகளையும் வாழவிட்டார்கள். இதை அறிந்த எகிப்திய அரசன் மருத்துவச்சிகளை அழைப்பித்து, “நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள்? ஆண் பிள்ளைகளை ஏன் வாழ விட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டான். மருத்துவச்சிகள் பார்வோனுக்குப் பதிலளித்து, “எபிரெய பெண்கள் எகிப்திய பெண்களைப் போன்றவர்களல்ல; அவர்கள் பலமுள்ளவர்கள், அதனால் மருத்துவச்சிகள் வந்து சேருமுன்பே அவர்கள் குழந்தைகளைப் பெற்றுவிடுகிறார்கள்” என்றார்கள். இறைவன் மருத்துவச்சிகளுக்குத் தயவு காட்டினார்; இஸ்ரயேல் மக்கள் பெருகி எண்ணிக்கையில் இன்னும் அதிகரித்தார்கள். மருத்துவச்சிகள் இறைவனுக்குப் பயந்தபடியால், அவர் அவர்களுடைய சொந்தக் குடும்பங்களை விருத்தியடையச் செய்தார். பின்பு பார்வோன் தன் மக்கள் எல்லோருக்கும் கட்டளை கொடுத்து, “எபிரெயருக்குப் பிறக்கும் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் நீங்கள் நைல் நதியில் எறிந்துவிடவேண்டும்; ஆனால், எல்லா பெண் குழந்தைகளையும் வாழவிடுங்கள்” என்றான்.

யாத்திராகமம் 1:13-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எகிப்தியர்கள் இஸ்ரவேர்களைக் கொடுமையாக வேலைவாங்கினார்கள். கலவையும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையாலும், வயலில் செய்யும் எல்லாவித வேலையாலும், அவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்த எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாக நடத்தினார்கள். அதுமட்டுமில்லாமல், எகிப்தின் ராஜா சிப்பிராள், பூவாள் என்னும் பெயருடைய எபிரெய மருத்துவச்சிகளுடன் பேசி: “நீங்கள் எபிரெய பெண்களுக்கு பிரசவம் பார்க்கும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது பார்த்து, ஆண்பிள்ளையாக இருந்தால் கொன்றுபோடுங்கள், பெண்பிள்ளையாக இருந்தால் உயிரோடு இருக்கட்டும்” என்றான். மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடு காப்பாற்றினார்கள். அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைத்து: “நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடு காப்பாற்றுகிற காரியம் என்ன” என்று கேட்டான். அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: “எபிரெய பெண்கள் எகிப்திய பெண்களைப்போல் இல்லை, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடம் போவதற்கு முன்பே அவர்கள் பிரசவித்துவிடுகிறார்கள்” என்றார்கள். இதினால் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மைசெய்தார். மக்கள் பெருகி மிகுதியும் பலத்துப்போனார்கள். மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததால், அவர்களுடைய குடும்பங்கள் செழிக்கும்படிச் செய்தார். அப்பொழுது பார்வோன், “எபிரெயருக்கு பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நைல் நதியிலே போடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடு வைக்கவும்” தன்னுடைய மக்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.

யாத்திராகமம் 1:13-22 பரிசுத்த பைபிள் (TAERV)

எனவே, எகிப்தியர்கள் இஸ்ரவேலரை இன்னும் கடினமாக உழைக்கும்படியாகக் கட்டாயப்படுத்தினார்கள். இஸ்ரவேலரின் வாழ்க்கையை எகிப்தியர்கள் கடினமாக்கினார்கள். செங்கல்லும், சாந்தும் செய்யும்படியாக இஸ்ரவேலரை அவர்கள் வற்புறுத்தி வேலை வாங்கினார்கள். வயல்களிலும் கடினமாக உழைக்கும்படியாக அவர்களைக் கட்டாயப்படுத்தினர். அவர்கள் செய்த ஒவ்வொரு வேலையிலும் கடினமாக உழைக்குமாறு, கட்டாயப்படுத்தினார்கள். இஸ்ரவேல் பெண்கள் குழந்தை பெறுவதற்கு உதவ சிப்பிராள், பூவாள் என்ற இரண்டு எபிரெய மருத்துவச்சிகள் இருந்தனர். எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளிடம் பேசி, “எபிரெயப் பெண்களின் பிரசவத்திற்கு நீங்கள் இருவரும் தொடர்ந்து உதவுங்கள். பெண் குழந்தை பிறந்தால், அக்குழந்தை உயிரோடிருக்கட்டும். குழந்தை ஆணாக இருந்தால், நீங்கள் அதைக் கொன்றுவிட வேண்டும்!” என்றான். ஆனால் மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயப்படுகிறவர்களானதால் அவர்கள் ராஜாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் எல்லா ஆண் குழந்தைகளையும் உயிரோடு விட்டனர். எகிப்திய ராஜா மருத்துவச்சிகளை அழைத்து, “நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள்? ஆண் குழந்தைகளை ஏன் உயிரோடு விடுகிறீர்கள்?” என்று கேட்டான். மருத்துவச்சிகள் ராஜாவை நோக்கி, “எபிரெயப் பெண்கள் எகிப்தியப் பெண்களைக் காட்டிலும் வலிமையானவர்கள். நாங்கள் உதவுவதற்குப் போகும் முன்னரே அவர்களுக்குக் குழந்தை பிறந்துவிடுகின்றது” என்றனர். தேவன் மருத்துவச்சிகளின்மேல் மகிழ்ச்சி அடைந்து அவர்களுக்கு நன்மை செய்தார். அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் செழிப்படையச் செய்தார். எபிரெய ஜனங்கள் தொடர்ந்து பல குழந்தைகளைப் பெற்றெடுத்து, வலிமை மிகுந்தோர் ஆயினர். எனவே பார்வோன், தனது சொந்த ஜனங்களிடம், “எபிரெயரின் எல்லாப் பெண் குழந்தைகளும் உயிரோடிருக்கட்டும், ஆனால் ஒவ்வொரு ஆண் குழந்தை பிறக்கும்போதும், அதனை நைல் நதியில் வீசிவிட வேண்டும்” என்று ஆணையிட்டான்.

யாத்திராகமம் 1:13-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலைவாங்கினார்கள். சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள். அதுவுமன்றி, எகிப்தின் ராஜா, சிப்பிராள் பூவாள் என்னும் பேருடைய எபிரெய மருத்துவச்சிகளோடே பேசி: நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில் பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்றுபோடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான். மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள், அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து: நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான். அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப்போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்குப் போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள். இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மைசெய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப்போனார்கள். மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். அப்பொழுது பார்வோன், பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண்பிள்ளைகளை யெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லாருக்கும் கட்டளையிட்டான்.