எஸ்தர் 2:12-17
எஸ்தர் 2:12-17 TCV
அரசன் அகாஸ்வேருவினிடம் ஒரு பெண் போவதற்கான தன்னுடைய முறை வருவதற்குமுன், அவள் பெண்களுக்காக நியமிக்கப்பட்டிருந்தபடி, பன்னிரண்டு மாத காலம் தன்னை அழகுபடுத்திக் கொள்ளவேண்டும். ஆறு மாதங்களுக்கு வெள்ளைப்போள எண்ணெயாலும், மற்ற ஆறு மாதங்களுக்கு வாசனைத் தைலத்தினாலும், அழகுசாதனப் பொருட்களினாலும் தன்னை அழகுபடுத்த வேண்டும். அவள் அரசனிடம் போகவேண்டியது எப்படியெனில், அவள் அந்தப்புரத்திலிருந்து அரசனுடைய அரண்மனைக்கு தான் எடுத்துச்செல்ல விரும்பிய எதுவும் அவளுக்குக் கொடுக்கப்படும். மாலையில் அவள் அரசனிடம் போய், மறுநாள் காலையில், அந்தப்புரத்தின் இன்னொரு பகுதியில் மறுமனையாட்டிகளுக்குப் பொறுப்பாயிருந்த அரசனுடைய அதிகாரியான சாஸ்காசின் பராமரிப்பில் விடப்படுவாள். ஒருத்தியின்மேல் அரசன் பிரியப்பட்டு அவளைப் பெயர்சொல்லி அழைத்தால் அன்றி, அவள் திரும்பவும் அரசனிடம் போகமுடியாது. மொர்தெகாயின் வளர்ப்பு மகளும், அவனுடைய சிறிய தகப்பன் அபிகாயிலின் மகளுமான எஸ்தர், அரசனிடம் போவதற்கான முறை வந்தபோது, அந்தப்புரத்திற்குப் பொறுப்பாயிருந்த அரசனின் அதிகாரியான யேகாய் கொண்டுபோகும்படி சொன்னதைத்தவிர, அவள் வேறு எதையும் கேட்கவில்லை. எஸ்தர் தன்னைக் கண்ட எல்லோரிடமிருந்தும் தயவைப் பெற்றாள். அரசன் அகாஸ்வேருவின் ஆட்சியின் ஏழாம் வருடத்தில் பத்தாவது மாதமாகிய தேபேத் மாதத்தில் அவள் அரசர் குடியிருக்கும் பகுதிக்கு அரசனிடத்தில் அழைத்துச் செல்லப்பட்டாள். அரசன் மற்ற எந்தப் பெண்ணையும் விட, எஸ்தரினால் அதிகமாய் கவரப்பட்டான். அவள் அவனிடமிருந்து மற்ற கன்னிகைகளையும்விட, அதிக தயவையும், பாராட்டையும் பெற்றாள். எனவே அவன் அரச கிரீடத்தை அவள் தலையில் வைத்து வஸ்திக்குப் பதிலாக அவளை அரசியாக்கினான்.


