எஸ்தர் 2:12-17
எஸ்தர் 2:12-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அரசன் அகாஸ்வேருவினிடம் ஒரு பெண் போவதற்கான தன்னுடைய முறை வருவதற்குமுன், அவள் பெண்களுக்காக நியமிக்கப்பட்டிருந்தபடி, பன்னிரண்டு மாத காலம் தன்னை அழகுபடுத்திக் கொள்ளவேண்டும். ஆறு மாதங்களுக்கு வெள்ளைப்போள எண்ணெயாலும், மற்ற ஆறு மாதங்களுக்கு வாசனைத் தைலத்தினாலும், அழகுசாதனப் பொருட்களினாலும் தன்னை அழகுபடுத்த வேண்டும். அவள் அரசனிடம் போகவேண்டியது எப்படியெனில், அவள் அந்தப்புரத்திலிருந்து அரசனுடைய அரண்மனைக்கு தான் எடுத்துச்செல்ல விரும்பிய எதுவும் அவளுக்குக் கொடுக்கப்படும். மாலையில் அவள் அரசனிடம் போய், மறுநாள் காலையில், அந்தப்புரத்தின் இன்னொரு பகுதியில் மறுமனையாட்டிகளுக்குப் பொறுப்பாயிருந்த அரசனுடைய அதிகாரியான சாஸ்காசின் பராமரிப்பில் விடப்படுவாள். ஒருத்தியின்மேல் அரசன் பிரியப்பட்டு அவளைப் பெயர்சொல்லி அழைத்தால் அன்றி, அவள் திரும்பவும் அரசனிடம் போகமுடியாது. மொர்தெகாயின் வளர்ப்பு மகளும், அவனுடைய சிறிய தகப்பன் அபிகாயிலின் மகளுமான எஸ்தர், அரசனிடம் போவதற்கான முறை வந்தபோது, அந்தப்புரத்திற்குப் பொறுப்பாயிருந்த அரசனின் அதிகாரியான யேகாய் கொண்டுபோகும்படி சொன்னதைத்தவிர, அவள் வேறு எதையும் கேட்கவில்லை. எஸ்தர் தன்னைக் கண்ட எல்லோரிடமிருந்தும் தயவைப் பெற்றாள். அரசன் அகாஸ்வேருவின் ஆட்சியின் ஏழாம் வருடத்தில் பத்தாவது மாதமாகிய தேபேத் மாதத்தில் அவள் அரசர் குடியிருக்கும் பகுதிக்கு அரசனிடத்தில் அழைத்துச் செல்லப்பட்டாள். அரசன் மற்ற எந்தப் பெண்ணையும் விட, எஸ்தரினால் அதிகமாய் கவரப்பட்டான். அவள் அவனிடமிருந்து மற்ற கன்னிகைகளையும்விட, அதிக தயவையும், பாராட்டையும் பெற்றாள். எனவே அவன் அரச கிரீடத்தை அவள் தலையில் வைத்து வஸ்திக்குப் பதிலாக அவளை அரசியாக்கினான்.
எஸ்தர் 2:12-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதங்கள் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதங்கள் வாசனைப்பொருட்களாலும், பெண்களுக்குரிய மற்ற அலங்கரிப்புகளினாலும் அலங்கரிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இப்படியாக பெண்களின் முறையின்படி பன்னிரண்டு மாதங்களாகச் செய்துமுடித்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடம் வர, அவளவளுடைய முறை வருகிறபோது, இப்படி அலங்கரிக்கப்பட்ட பெண் ராஜாவிடம் போவாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடு ராஜ அரண்மனைக்குப் போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவைகளை எல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும். மாலையில் அவள் உள்ளே போய், காலையில், பிடித்த பெண்களைக் காவல்காக்கிற ராஜாவின் அதிகாரியாகிய சாஸ்காசுடைய பொறுப்பில் இருக்கிற பெண்களின் இரண்டாம் மாடத்திற்குத் திரும்பிவருவாள்; ராஜா தன்னை விரும்பிப் பெயர்சொல்லி அழைக்கும்வரை அவள் ஒருபோதும் ராஜாவிடம் போகக்கூடாது. மொர்தெகாய் தனக்கு மகளாய் ஏற்றுக்கொண்டவளும், அவனுடைய சிறிய தகப்பனாகிய அபியாயேலின் மகளுமான எஸ்தர் ராஜாவிடம் போவதற்கு முறை வந்தபோது, அவள் பெண்களைக் காவல்காக்கிற ராஜாவின் அதிகாரியாகிய யேகாய் நியமித்த காரியத்தைத் தவிர வேறொன்றும் கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லோருடைய கண்களிலும் தயவு கிடைத்தது. அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருடம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே அரண்மனைக்கு ராஜாவிடம் அழைத்துக்கொண்டு போகப்பட்டாள். ராஜா எல்லாப் பெண்களையும்விட எஸ்தர்மேல் அன்புவைத்தான்; எல்லா கன்னிப்பெண்களையும்விட அவளுக்கு ராஜாவிற்கு முன்பாக அதிக தயவும் இரக்கமும் கிடைத்தது; ஆகையால் ராஜா ராஜகிரீடத்தை அவளுடைய தலையின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் இடத்தில் பட்டத்து ராணியாக்கினான்.
எஸ்தர் 2:12-17 பரிசுத்த பைபிள் (TAERV)
ராஜா அகாஸ்வேருவின் முன் போவதற்கு முன்னால், ஒரு பெண் செய்யவேண்டியது இதுதான். அவள் பன்னிரண்டு மாதங்கள் அழகு சிகிக்சை செய்யப்பட்டிருக்கவேண்டும். அதாவது, ஆறு மாதங்கள் வெள்ளைப்போளத் தைலத்தாலும், ஆறு மாதம் சுகந்தவர்க்கங்களினாலும் பலவகை அலங்காரங்களாலும் அழகு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு பெண் இப்படி அலங்கரிக்கப்பட்டு, ராஜாவிடம் போவாள். கன்னிமாடத்திலிருந்து தன்னுடன் ராஜாவின் அரண்மனைக்கு போக தனக்கு வேண்டுமென்று கேட்டவை எல்லாம் கொடுக்கப்படும். மாலையில், அப்பெண் ராஜாவின் அரண்மனைக்குச் செல்லவேண்டும். காலையில் அவள் இன்னொரு பகுதிக்குத் திரும்பவேண்டும். பிறகு, அவள் சாஸ்காசுடைய பொறுப்பில் வைக்கப்படுவாள். சாஸ்காஸ் ராஜாவினுடைய பிரதானி. அவன் ராஜாவின் ஆசைப் பெண்களின் அதிகாரி. ராஜா விரும்பி அழைத்தால் தவிர எந்த ஒரு பெண்ணும் மீண்டும் ராஜாவிடம் செல்லக் கூடாது. பிறகு ராஜா அவளது பேரைச் சொல்லி திரும்ப வரும்படி அழைக்கலாம். எஸ்தருக்கு ராஜாவிடம் போக வேண்டியமுறை வந்தபோது, அவள் எதையும் கேட்கவில்லை. அவள் யேகா தன்னிடம் எதை எடுத்துச் செல்லவேண்டும் என்று கூறினானோ அவற்றை மட்டும் கேட்டாள். அவன் ராஜாவின் பிரதானி. ராஜாவின் பெண்களின் பொறுப்பான அதிகாரி. (எஸ்தர் மொர்தெகாயின் வளர்ப்பு குமாரத்தி. அவனது சிறிய தகப்பனான அபியாயேலின் குமாரத்தி) எஸ்தரைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அவளை விரும்பினார்கள். எனவே, எஸ்தர் அரண்மனைக்கு ராஜா அகாஸ்வேருவிடம் அழைத்துச் செல்லப்பட்டாள். இது, அவனது ஏழாம் ஆட்சியாண்டில் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்தில் நிகழ்ந்தது. ராஜா, மற்றப் பெண்களை விட எஸ்தரை மிகுதியாக நேசித்தான். அவனுக்கு அவளைப் பிடித்துப்போனது. அவன் மற்ற பெண்களைவிட அவளை மிகுதியாக ஏற்றுக்கொண்டான். எனவே, அகாஸ்வேரு ராஜா எஸ்தரின் தலையில் கிரீடத்தை அணிவித்து வஸ்தியின் இடத்தில் அவளைப் புதிய இராணியாகச் செய்தான்.
எஸ்தர் 2:12-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதம் சுகந்தவர்க்கங்களினாலும், ஸ்திரீகளுக்குரிய மற்ற சுத்திகரிப்புகளினாலும் ஜோடிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இவ்விதமாய் ஸ்திரீகளின் முறைமைப்படி பன்னிரண்டு மாதமாகச் செய்யப்பட்டுத் தீர்ந்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடத்தில் பிரவேசிக்க, அவளவளுடைய முறை வருகிறபோது, இப்படி ஜோடிக்கப்பட்ட பெண் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடேகூட ராஜ அரமனைக்குப்போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும். சாயங்காலத்திலே அவள் உள்ளே பிரவேசித்து, காலமே, அபிமான ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய சாஸ்காசுடைய விசாரிப்புக்குள்ளிருக்கிற ஸ்திரீகளின் இரண்டாம் மாடத்துக்குத் திரும்பிவருவாள்; ராஜா தன்னை விரும்பிப் பேர்சொல்லி அழைப்பித்தாலொழிய அவள் ஒருபோதும் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கக்கூடாது, மொர்தெகாய் தனக்குக் குமாரத்தியாய் ஏற்றுக்கொண்டவளும், அவன் சிறியதகப்பனாகிய அபியாயேலின் குமாரத்தியுமான எஸ்தர் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கிறதற்கு முறைவந்தபோது, அவள் ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாய் நியமித்த காரியமேயல்லாமல் வேறொன்றும் கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயை கிடைத்தது. அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருஷம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே ராஜாவினிடத்தில் அரமனைக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டாள். ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தான்; சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது; ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரீயாக்கினான்.