தானியேல் 6:4-11

தானியேல் 6:4-11 TCV

இதையறிந்த மற்றைய நிர்வாகிகளும், சிற்றரசர்களும், தானியேலின் அரசியல் விவகாரங்களில் தானியேலின் நடத்தைக்கு எதிராகக் குற்றம் சாட்டுவதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முயற்சித்தார்கள். ஆனால் அவர்களால் அப்படிச் செய்ய முடியவில்லை. அவன் நம்பிக்கைக்குரியவனும், ஊழலும் கடமையில் அலட்சியமும் இல்லாதவனுமாய் இருந்தபடியால், அவனில் எந்தவித குற்றத்தையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக அந்த மனிதர்கள், “தானியேலை வேறொன்றிலும் குற்றப்படுத்த முடியாது. அவனை அவனுடைய இறைவனது சட்டத்தைப்பற்றிய விஷயங்களில் மட்டுமே குற்றப்படுத்தலாம் என்றார்கள்.” எனவே நிர்வாகிகளும், சிற்றரசர்களும் ஒரு குழுவாக அரசனிடம் சென்று, “தரியு அரசே, நீர் நீடூழி வாழ்க. அரச நிர்வாகிகள், நிர்வாக அதிகாரிகள், சிற்றரசர்கள், ஆலோசகர்கள், ஆளுநர்கள் ஆகிய நாங்கள் எல்லோரும், வரப்போகும் முப்பது நாட்களில் அரசராகிய உம்மைத்தவிர, வேறு தெய்வங்களிடமோ, மனிதரிடமோ ஒருவனும் மன்றாடக்கூடாது. அப்படி யாராவது செய்தால் அவன் சிங்கத்தின் குகையில் போடப்படுவதற்கு அரசர் ஒரு ஆணை பிறப்பித்து நடைமுறைப்படுத்த வேண்டுமென ஒன்றாய்த் தீர்மானித்திருக்கிறோம். எனவே அரசே, இரத்துச் செய்யப்பட முடியாத மேதியர், பெரிசியரின் சட்டத்தின்படியே அதை மாற்ற முடியாததாய் எழுதிவையும் என்றார்கள்.” அப்படியே தரியு அரசன் கட்டளையை எழுதிவைத்தான். இக்கட்டளை பகிரங்கமாய் அறிவிக்கப்பட்டதைத் தானியேல் அறிந்தபோது, அவன் தனது வீட்டிற்குப்போய் மேல் வீட்டறையில் எருசலேமின் பக்கமாயிருந்த ஜன்னல் அருகே போனான். அவன் தான் முன்பு செய்ததுபோலவே நாளொன்றுக்கு மூன்றுமுறை முழங்காற்படியிட்டு தன் இறைவனுக்கு நன்றி செலுத்தி மன்றாடினான். அப்பொழுது அந்த மனிதர்கள், குழுவாக அங்கு சென்றபோது தானியேல் தனது இறைவனிடம் உதவிகேட்டு மன்றாடிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள்.