தானியேல் 6:4-11
தானியேல் 6:4-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இதையறிந்த மற்றைய நிர்வாகிகளும், சிற்றரசர்களும், தானியேலின் அரசியல் விவகாரங்களில் தானியேலின் நடத்தைக்கு எதிராகக் குற்றம் சாட்டுவதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முயற்சித்தார்கள். ஆனால் அவர்களால் அப்படிச் செய்ய முடியவில்லை. அவன் நம்பிக்கைக்குரியவனும், ஊழலும் கடமையில் அலட்சியமும் இல்லாதவனுமாய் இருந்தபடியால், அவனில் எந்தவித குற்றத்தையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக அந்த மனிதர்கள், “தானியேலை வேறொன்றிலும் குற்றப்படுத்த முடியாது. அவனை அவனுடைய இறைவனது சட்டத்தைப்பற்றிய விஷயங்களில் மட்டுமே குற்றப்படுத்தலாம் என்றார்கள்.” எனவே நிர்வாகிகளும், சிற்றரசர்களும் ஒரு குழுவாக அரசனிடம் சென்று, “தரியு அரசே, நீர் நீடூழி வாழ்க. அரச நிர்வாகிகள், நிர்வாக அதிகாரிகள், சிற்றரசர்கள், ஆலோசகர்கள், ஆளுநர்கள் ஆகிய நாங்கள் எல்லோரும், வரப்போகும் முப்பது நாட்களில் அரசராகிய உம்மைத்தவிர, வேறு தெய்வங்களிடமோ, மனிதரிடமோ ஒருவனும் மன்றாடக்கூடாது. அப்படி யாராவது செய்தால் அவன் சிங்கத்தின் குகையில் போடப்படுவதற்கு அரசர் ஒரு ஆணை பிறப்பித்து நடைமுறைப்படுத்த வேண்டுமென ஒன்றாய்த் தீர்மானித்திருக்கிறோம். எனவே அரசே, இரத்துச் செய்யப்பட முடியாத மேதியர், பெரிசியரின் சட்டத்தின்படியே அதை மாற்ற முடியாததாய் எழுதிவையும் என்றார்கள்.” அப்படியே தரியு அரசன் கட்டளையை எழுதிவைத்தான். இக்கட்டளை பகிரங்கமாய் அறிவிக்கப்பட்டதைத் தானியேல் அறிந்தபோது, அவன் தனது வீட்டிற்குப்போய் மேல் வீட்டறையில் எருசலேமின் பக்கமாயிருந்த ஜன்னல் அருகே போனான். அவன் தான் முன்பு செய்ததுபோலவே நாளொன்றுக்கு மூன்றுமுறை முழங்காற்படியிட்டு தன் இறைவனுக்கு நன்றி செலுத்தி மன்றாடினான். அப்பொழுது அந்த மனிதர்கள், குழுவாக அங்கு சென்றபோது தானியேல் தனது இறைவனிடம் உதவிகேட்டு மன்றாடிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
தானியேல் 6:4-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது அதிகாரிகளும் தேசாதிபதிகளும் ராஜ்ஜியத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி காரணத்தைத் தேடினார்கள்; ஆனாலும் ஒரு காரணத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் முடியாமலிருந்தது; அவன் உண்மையுள்ளவனாக இருந்ததால் அவன்மேல் சுமத்த எந்தவொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை. அப்பொழுது அந்த மனிதர்கள்: நாம் இந்த தானியேலை அவனுடைய தேவனைப்பற்றிய வேதவிஷயத்திலே குற்றப்படுத்தும் காரணத்தைக் கண்டுபிடித்தாலொழிய அவனை வேறொன்றிலும் குற்றப்படுத்தும் காரணத்தைக் கண்டுபிடிக்கமுடியாது என்றார்கள். பின்பு அந்தப் அதிகாரிகளும் தேசாதிபதிகளும் ஒன்றுகூடி ராஜாவினிடத்தில் போய், அவனை நோக்கி: தரியு ராஜாவே, நீர் என்றும் வாழ்க. எவனாகிலும் முப்பது நாட்கள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனிதனையானாலும் நோக்கி, எந்தவொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்செய்தால், அவன் சிங்கங்களின் குகையிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான உத்திரவிடவேண்டுமென்று ராஜ்ஜியத்தினுடைய எல்லா அதிகாரிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஆலோசனை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆதலால் இப்போதும் ராஜாவே, மேதியர்களுக்கும் பெர்சியர்களுக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படியே அந்த உத்திரவு மாற்றப்படாதபடி நீர் அதைக் கட்டளையிட்டு, அதற்குக் கையெழுத்து இடவேண்டும் என்றார்கள். அப்படியே ராஜாவாகிய தரியு அந்தக் கட்டளைப் பத்திரத்தில் கையெழுத்து போட்டான். தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்தில் கையெழுத்து போடப்பட்டதென்று அறிந்திருந்தாலும், தன் வீட்டிற்குள்ளேபோய், தன் மேலறையிலே எருசலேமிற்கு நேராக ஜன்னல்கள் திறந்திருக்க, அங்கே தான் முன்பு செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்செய்து, ஸ்தோத்திரம் செலுத்தினான். அப்பொழுது அந்த மனிதர்கள் ஒன்றுகூடி, தானியேல் தன் தேவனுக்கு முன்பாக ஜெபித்து விண்ணப்பம் செய்கிறதைக் கண்டார்கள்.
தானியேல் 6:4-11 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆனால் மற்ற மேற்பார்வையளர்களும், மற்ற தேசாதிபதிகளும் இதனை அறிந்ததும் மிகவும் பொறாமைகொண்டனர். அவர்கள் தானியேலை குற்றஞ்சாட்ட காரணங்களைத் தேடினர். எனவே அவர்கள் தானியேல் அரசு பணிகளைச் செய்யும்போது மிகக் கவனமாகக் கவனித்தனர். ஆனால் அவர்களால் தானியேலிடம் எந்தக் குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தானியேல் நேர்மையாளனாகவும், நம்பிக்கைக்குரியவனாகவும் இருந்தான். அவன் ராஜாவை ஏமாற்றாமல் மிகக் கடுமையாக வேலை செய்து வந்தான். இறுதியாக அந்த ஆட்கள், “நாம் தானியேலை குற்றம் கண்டுபிடிக்கும்படி தவறான எதையும் அவன் செய்யமாட்டான். எனவே நாம் அவனது தேவனுடைய சட்ட விஷயத்தில் குற்றம் காண வேண்டும்” என்று பேசிக்கொண்டனர். எனவே, அந்த மேற்பார்வையாளர்களும், தேசாதிபதிகளும் ஒரு குழுவாக ராஜாவிடம் சென்றனர். அவர்கள் அரசரை நோக்கி, “தரியு ராஜாவே, என்றென்றும் வாழ்வீராக. மேற்பார்வையாளர்களும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டார்கள். அதாவது நாங்கள் ராஜா ஒரு சட்டத்தைச் இயற்றவேண்டும் என்று எண்ணுகிறோம். எல்லோரும் அதற்கு அடி பணியவேண்டும். இதுதான் அந்தச் சட்டம், எவராவது இன்னும் 30 நாட்களுக்கு ராஜாவாகிய உம்மைத் தவிர வேறெந்த தேவனையோ, மனிதரையோ நோக்கி எந்த ஒரு காரியத்திற்கும் ஜெபம் செய்தால் அவன் சிங்கக்கூண்டிலே போடப்படுவான். இப்பொழுது இதனைச் சட்டமாக்கி இந்தத் தாளிலே கையெழுத்துப் போடும். இவ்வாறு இந்தச் சட்டம் மாற்ற முடியாதபடி இருக்கும். ஏனென்றால் மேதியர்கள் மற்றும் பெர்சியர்களின் சட்டங்கள் விலக்கவோ மாற்றவோ முடியாதவை” என்றனர். அவர்கள் சொன்னபடி ராஜாவான தரியு இச்சட்டத்தை இயற்றி கையெழுத்துப் போட்டான். தானியேல் ஒவ்வொரு நாளும் தேவனிடம் மூன்றுமுறை ஜெபம் செய்வான். தானியேல் ஒவ்வொரு நாளும் மூன்றுமுறை முழங்காலில் நின்று தேவனிடம் ஜெபித்து அவரைப் போற்றுவான். தானியேல் இப்புதிய சட்டத்தைக் கேள்விப்பட்டதும் தனது வீட்டிற்குப் போய் தனது அறையில் உள்ள மாடியின்மீது ஏறினான். தானியேல் எருசலேமை நோக்கியிருக்கிற ஜன்னல் அருகில் போய் முழங்காலிட்டு எப்பொழுதும் செய்வதுபோன்று ஜெபித்தான். அந்த ஆட்கள் குழுவாகச் சென்று தானியேலைக் கண்டுபிடித்தனர். அவர்கள் தானியேல் தேவனிடம் உதவிகேட்டு ஜெபிப்பதைக் கண்டனர்.
தானியேல் 6:4-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்; ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது; அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை. அப்பொழுது அந்த மனுஷர்: நாம் இந்த தானியேலை அவனுடைய தேவனைப்பற்றிய வேதவிஷயத்திலே குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடித்தாலொழிய அவனை வேறொன்றிலும் குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடிக்கக்கூடாது என்றார்கள். பின்பு அந்தப் பிரதானிகளும் தேசாதிபதிகளும் கூட்டங்கூடி ராஜாவினிடத்தில் போய், அவனை நோக்கி: தரியு ராஜாவே, நீர் என்றும் வாழ்க. எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்யவேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஆலோசனைபண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆதலால் இப்போதும் ராஜாவே, மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படியே அந்தத் தாக்கீது மாற்றப்படாதபடி நீர் அதைக் கட்டளையிட்டு, அதற்குக் கையெழுத்து வைக்கவேண்டும் என்றார்கள். அப்படியே ராஜாவாகிய தரியு அந்தக் கட்டளைப்பத்திரத்துக்குக் கையெழுத்து வைத்தான். தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான். அப்பொழுது அந்த மனுஷர் கூட்டங்கூடி, தானியேல் தன் தேவனுக்கு முன்பாக ஜெபம்பண்ணி விண்ணப்பம் செய்கிறதைக் கண்டார்கள்.