அப்போஸ்தலர் 8:26-36

அப்போஸ்தலர் 8:26-36 TCV

கர்த்தரின் தூதன் பிலிப்புவிடம், “நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ” என்றார். எனவே அவன் புறப்பட்டுப்போய், அண்ணகனாய் இருந்த ஒரு எத்தியோப்பியனை வழியிலே சந்தித்தான். இவன் எத்தியோப்பியரின் அரசியான கந்தாகே என்பவளின் எல்லாச் சொத்துக்களுக்கும் பொறுப்பாயிருந்த, ஒரு முக்கிய அதிகாரி. இந்த எத்தியோப்பியன் வழிபடும்படி எருசலேமுக்குச் சென்றிருந்தான். அந்த அதிகாரி தனது வீட்டிற்குத் திரும்பிப் போய்க்கொண்டிருக்கும்போது, வழியிலே தனது தேரில் உட்கார்ந்து, இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவிடம், “நீ அந்தத் தேரை நோக்கிப் போய், அதன் அருகே செல்” என்றார். பிலிப்பு அந்தத் தேரை நோக்கி ஓடிச்சென்றப் போது, அவன் இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது பிலிப்பு அவனிடம், “நீ வாசிப்பதன் பொருள் உனக்குத் தெரிகின்றதா?” எனக் கேட்டான். “அதற்கு அவன், யாராவது எனக்கு அதை விவரித்துச் சொல்லாவிட்டால், எனக்கு எப்படி விளங்கும்?” என்று சொல்லி, பிலிப்புவைத் தன்னுடனேகூட வந்து உட்காரும்படி அழைத்தான். அந்த அதிகாரி வாசித்துக்கொண்டிருந்த வேதவசனப் பகுதியில்: “அவர் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டைப்போல் இருந்தார். மயிர்க்கத்தரிப்பவனுக்கு முன்பாக மவுனமாயிருக்கும் ஆட்டுக்குட்டியைப்போல், அவர் தமது வாயைத் திறவாதிருந்தார். அவர் அவமதிக்கப்படுகையில், அவருக்கு நீதி கிடைக்கவில்லை. அவருடைய சந்ததியைக்குறித்து யாரால் என்ன சொல்லமுடியும்? அவருடைய உயிர் பூமியிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டதே” என்றிருந்தது. அந்த அதிகாரி பிலிப்புவிடம், “இறைவாக்கினர் யாரைக்குறித்து இதைச் சொல்கிறார்? தம்மைக்குறித்தா, அல்லது வேறு ஒருவரைக்குறித்தா?” தயவுசெய்து எனக்குச் சொல்லும் என்றான். அப்பொழுது பிலிப்பு, அதே வேதவசனப் பகுதியைக்குறித்துப் பேசத்தொடங்கி, இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அவனுக்குச் சொன்னான். அவர்கள் பிரயாணமாய் போய்க்கொண்டிருக்கையில், தண்ணீர் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அந்த அதிகாரி பிலிப்புவிடம், “பார், இங்கே தண்ணீர் இருக்கிறது. நான் ஏன் திருமுழுக்கு பெறக்கூடாது?” என்றான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்