அப்போஸ்தலர் 8:26-36

அப்போஸ்தலர் 8:26-36 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கர்த்தரின் தூதன் பிலிப்புவிடம், “நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ” என்றார். எனவே அவன் புறப்பட்டுப்போய், அண்ணகனாய் இருந்த ஒரு எத்தியோப்பியனை வழியிலே சந்தித்தான். இவன் எத்தியோப்பியரின் அரசியான கந்தாகே என்பவளின் எல்லாச் சொத்துக்களுக்கும் பொறுப்பாயிருந்த, ஒரு முக்கிய அதிகாரி. இந்த எத்தியோப்பியன் வழிபடும்படி எருசலேமுக்குச் சென்றிருந்தான். அந்த அதிகாரி தனது வீட்டிற்குத் திரும்பிப் போய்க்கொண்டிருக்கும்போது, வழியிலே தனது தேரில் உட்கார்ந்து, இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவிடம், “நீ அந்தத் தேரை நோக்கிப் போய், அதன் அருகே செல்” என்றார். பிலிப்பு அந்தத் தேரை நோக்கி ஓடிச்சென்றப் போது, அவன் இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது பிலிப்பு அவனிடம், “நீ வாசிப்பதன் பொருள் உனக்குத் தெரிகின்றதா?” எனக் கேட்டான். “அதற்கு அவன், யாராவது எனக்கு அதை விவரித்துச் சொல்லாவிட்டால், எனக்கு எப்படி விளங்கும்?” என்று சொல்லி, பிலிப்புவைத் தன்னுடனேகூட வந்து உட்காரும்படி அழைத்தான். அந்த அதிகாரி வாசித்துக்கொண்டிருந்த வேதவசனப் பகுதியில்: “அவர் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டைப்போல் இருந்தார். மயிர்க்கத்தரிப்பவனுக்கு முன்பாக மவுனமாயிருக்கும் ஆட்டுக்குட்டியைப்போல், அவர் தமது வாயைத் திறவாதிருந்தார். அவர் அவமதிக்கப்படுகையில், அவருக்கு நீதி கிடைக்கவில்லை. அவருடைய சந்ததியைக்குறித்து யாரால் என்ன சொல்லமுடியும்? அவருடைய உயிர் பூமியிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டதே” என்றிருந்தது. அந்த அதிகாரி பிலிப்புவிடம், “இறைவாக்கினர் யாரைக்குறித்து இதைச் சொல்கிறார்? தம்மைக்குறித்தா, அல்லது வேறு ஒருவரைக்குறித்தா?” தயவுசெய்து எனக்குச் சொல்லும் என்றான். அப்பொழுது பிலிப்பு, அதே வேதவசனப் பகுதியைக்குறித்துப் பேசத்தொடங்கி, இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அவனுக்குச் சொன்னான். அவர்கள் பிரயாணமாய் போய்க்கொண்டிருக்கையில், தண்ணீர் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அந்த அதிகாரி பிலிப்புவிடம், “பார், இங்கே தண்ணீர் இருக்கிறது. நான் ஏன் திருமுழுக்கு பெறக்கூடாது?” என்றான்.

அப்போஸ்தலர் 8:26-36 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்கு திசையாக எருசலேமிலிருந்து காசா பட்டணத்திற்குப் போகிற வனாந்திரப்பாதைவழியாகப் போ என்றான். அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜாத்தியாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாக இருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் தொழுதுகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து; ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார். அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குப் புரிகிறதா என்றான். அதற்கு அவன்: ஒருவன் எனக்குப் புரியவைக்காவிட்டால் அது எனக்கு எப்படி புரியும் என்று சொல்லி; பிலிப்பை, தன்னுடனே ஏறி உட்காரும்படி வேண்டிக்கொண்டான். அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: “அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தம்போடாத ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார். அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போனது; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும்” என்பதே. மந்திரி பிலிப்பை நோக்கி: “தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை அடிப்படையாக வைத்து இயேசுவைக்குறித்து அவனுக்குப் போதித்தான். இவ்விதமாக அவர்கள் போய்க்கொண்டிருக்கும்போது, தண்ணீர் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: “இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடை என்ன” என்றான்.

அப்போஸ்தலர் 8:26-36 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவதூதன் ஒருவன் பிலிப்புவிடம் பேசினான். “புறப்பட்டு தெற்கு நோக்கிச் செல். எருசலேமிலிருந்து காசாவிற்குப் போகும் பாதைக்குச் செல். அந்தப் பாதை பாலைவனம் வழியாகச் செல்கிறது” என்றான். எனவே பிலிப்பு தயாராகிப் புறப்பட்டுச் சென்றான். பாதையில் எத்தியோப்பியாவிலிருந்து வந்த மனிதன் ஒருவனைக் கண்டான். அம்மனிதன் ஆண்மையிழந்தவன். எத்தியோப்பியாவின் இராணியாகிய கந்தாகே என்பவளின் அலுவலரில் அவன் ஒரு முக்கிய அதிகாரியாக இருந்தான். அவன் அவளது கருவூலத்திற்குப் பொறுப்பாயிருந்தான். அம்மனிதன் எருசலேமில் வழிபாடு செய்யச் சென்றிருந்தான். இப்போது அவன் வீட்டிற்குப் பயணமாகிக்கொண்டிருந்தான். அவன் தனது இரதத்தில் அமர்ந்து தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் புத்தகத்தில் சில பகுதிகளை வாசித்துக்கொண்டிருந்தான். ஆவியானவர் பிலிப்புவை நோக்கி, “இரதத்தின் அருகே போய் காத்திரு” என்றார். எனவே பிலிப்பு இரதத்தை நோக்கி ஓடினான். அம்மனிதன் தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் நூலிலிருந்து வாசிப்பதைக் கேட்டான். பிலிப்பு அவனை நோக்கி, “நீ படித்துக்கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?” என்று கேட்டான். அம்மனிதன், “நான் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? அதை விளக்கிச் சொல்லக் கூடிய ஒருவர் தேவை!” என்றான். அவன் பிலிப்புவை இரதத்தினுள் ஏறி, அவனோடு உட்காருமாறு வேண்டினான். வேதவாக்கியத்தில் அவன் படித்துக்கொண்டிருந்த பகுதி இதோ, “அவர் கொல்லப்படுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஆட்டைப் போன்றிருந்தார். அவர், தனது முடிவெட்டப்படுகிறபோது சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப் போன்றிருந்தார். அவர் அவமானப்படுத்தப்பட்டார். அவர் உரிமைகள் பறிக்கப்பட்டன. உலகில் அவர் வாழ்க்கை முடிந்தது. அவர் குடும்பம்பற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை.” அதிகாரி பிலிப்புவிடம், “யாரைக் குறித்து தீர்க்கதரிசி சொல்கின்றார் என்பதை தயவு செய்து எனக்குக் கூறுங்கள். தன்னைக் குறித்தா அல்லது வேறு யாரைக் குறித்து அவர் போசுகிறார்?” என்று கேட்டான். பிலிப்பு பேச ஆரம்பித்தான். அவன் வேதவாக்கியத்தின் இந்தப் பகுதியிலிருந்து பேச ஆரம்பித்து, அம்மனிதனுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைச் சொல்லத் தொடங்கினான். அவர்கள் மேலும் பயணம் செய்கையில் தண்ணீர் இருந்த ஓர் இடத்திற்கு அருகே வந்தனர். அதிகாரி, “பார்! இங்கு தண்ணீர் உள்ளது. நான் ஞானஸ்நானம் பெறுவதற்குத் தடை ஏது?” என்றான்.

அப்போஸ்தலர் 8:26-36 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்கு முகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ என்றான். அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து; ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக் கொண்டிருந்தான். ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார். அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான். அதற்கு அவன்: ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி; பிலிப்பு ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை வேண்டிக்கொண்டான். அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார். அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்பதே. மந்திரி பிலிப்பை நோக்கி: தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான். இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்