அப்போஸ்தலர் 20:17-38

அப்போஸ்தலர் 20:17-38 TCV

பவுல் மிலேத்து பட்டணத்திலிருந்து, எபேசு பட்டணத்துத் திருச்சபையின் தலைவர்களை தன்னை வந்து சந்திக்கும்படி ஆளனுப்பினான். அவர்கள் அவனிடம் வந்தபோது, அவன் அவர்களைப் பார்த்து: “நான் ஆசியா பகுதிக்கு வந்தநாள் தொடங்கி, உங்களுடன் இருந்த காலம் முழுவதும், எப்படி வாழ்ந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் அதிகத் தாழ்மையோடும் கண்ணீரோடும் கர்த்தருக்கு ஊழியம் செய்தேன். ஆனால் நான் யூதரின் சூழ்ச்சிகளினாலே மிகவும் சோதிக்கப்பட்டேன். உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கக்கூடிய எதையும் உங்களுக்கு பிரசங்கிப்பதற்கு நான் தயங்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நான் வெளியரங்கமாகவும், வீடுகள்தோறும் உங்களுக்குப் போதித்தேன். யூதர், கிரேக்கர் ஆகிய இரு பிரிவினருக்கும், அவர்கள் மனஸ்தாபப்பட்டு மனமாற்றம் அடைந்து இறைவனிடம் திரும்பவேண்டும் என்றும், நம் கர்த்தராகிய இயேசுவில் விசுவாசமாய் இருக்கவேண்டும் என்றும் நான் அறிவித்தேன். “இப்பொழுதும், பரிசுத்த ஆவியானவரால் கட்டுண்டவனாக நான் எருசலேமுக்குப் போகிறேன். அங்கே எனக்கு என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. நான் சிறையில் போடப்படுவேன் என்றும், பாடுகளை அனுபவிக்கவேண்டும் என்றும் எல்லாப் பட்டணங்களிலும், பரிசுத்த ஆவியானவர் என்னை எச்சரிக்கை செய்கிறார். இதை மட்டுமே நான் அறிவேன். ஆனால் என் வாழ்வு எனக்கு ஒன்றுமில்லை என்று நான் கருதுகிறேன். எனக்கு ஒப்புவிக்கப்பட்ட ஓட்டத்தை ஓடி முடிக்கவும், கர்த்தராகிய இயேசு எனக்குக் கொடுத்திருக்கிற ஊழியத்தை நிறைவேற்றவுமே நான் விரும்புகிறேன். இறைவனுடைய கிருபையின் நற்செய்திக்கு சாட்சி கொடுக்கும் ஊழியத்தையே அவர் எனக்குக் கொடுத்திருக்கிறார். “உங்கள் மத்தியில் நான் இறைவனுடைய அரசைப்பற்றிப் பிரசங்கித்ததைக் கேட்ட யாவரும் என்னை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ஆகவே உங்களில் யாராவது அழிந்தால், அந்த இரத்தப்பழி என்மேல் சுமராது என்று, நான் உங்களுக்கு இன்று உறுதியாய் அறிவிக்கிறேன். ஏனெனில், இறைவனுடைய முழுத் சித்தத்தையும் உங்களுக்கு நான் அறிவிப்பதற்குத் தயங்கவில்லை. உங்களைக்குறித்து நீங்கள் கவனமாயிருங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்காணிகளாக நியமித்த உங்கள் மந்தை முழுவதைக் குறித்தும் கவனமாயிருங்கள். இறைவனுடைய திருச்சபைக்கு மேய்ப்பர்களாய் இருங்கள். அதை அவர் தமது சொந்த இரத்தத்தை விலையாகக் கொடுத்தல்லவோ பெற்றுக்கொண்டார். நான் போனபின், உங்களிடையே கொடிதான ஓநாய்கள் வரும் என்றும் அவை மந்தையைத் தப்பவிடாது தாக்கும் என்றும் எனக்குத் தெரியும். உங்களைச் சேர்ந்தவர்களில் சிலரும்கூட எழும்பி, தங்கள் பக்கமாய் சீடரை இழுத்துக் கொள்வதற்கு, உண்மையைத் திரித்துக் கூறுவார்கள். எனவே நீங்கள் கவனமாயிருங்கள்! நான் மூன்று வருடங்களாக இரவும், பகலும் உங்களைக் கண்ணீருடன் எச்சரிக்கைச் செய்ததை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். “இப்பொழுது நான் உங்களை இறைவனுக்கும், அவருடைய கிருபையுள்ள வார்த்தைக்கும் ஒப்புக்கொடுத்திருக்கிறேன்; அந்த வார்த்தையே உங்களைக் கட்டியெழுப்பி அதுவே பரிசுத்தமாக்கப்பட்ட எல்லோருடனும்கூட உங்களுக்கும் உரிமைச்சொத்தைக் கொடுக்க வல்லமையுள்ளது. யாருடைய வெள்ளிக்கோ, தங்கத்திற்கோ, உடைக்கோ நான் ஆசைப்படவில்லை. என்னுடைய தேவைகளுக்காகவும், என்னுடன் இருந்தவர்களின் தேவைகளுக்காகவும், என் கைகளினாலேயே வேலைசெய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். நான் செய்த இவை எல்லாவற்றிலும், இவ்விதம் கஷ்டப்பட்டு வேலைசெய்தே, நாம் நலிவுற்றோர்க்கு உதவிசெய்ய வேண்டும் என்று, நான் உங்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காண்பித்தேன். ‘பெற்றுக்கொள்வதைப் பார்க்கிலும், கொடுக்கிறதே அதிக ஆசீர்வாதம்’ என்று கர்த்தராகிய இயேசு தாமே சொன்னதையும் உங்களுக்கு நினைவுப்படுத்தினேன்” என்றான். பவுல் இதைச் சொன்னபின்பு, அவர்கள் எல்லோருடனும் முழங்காற்படியிட்டு மன்றாடினான். அவர்கள் அனைவரும் அவனை அணைத்து முத்தமிட்டு அழுதார்கள். “நீங்கள் எனது முகத்தை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள்” என்று அவன் சொன்ன அந்த வார்த்தைகள் அவர்களை ஆழ்ந்த துக்கத்திற்குள்ளாக்கியது. பின்பு அவர்கள் அவனைக் கூட்டிக்கொண்டு கப்பல்வரைக்கும் சென்றார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்