அப்போஸ்தலர் 20:17-38

அப்போஸ்தலர் 20:17-38 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பவுல் மிலேத்து பட்டணத்திலிருந்து, எபேசு பட்டணத்துத் திருச்சபையின் தலைவர்களை தன்னை வந்து சந்திக்கும்படி ஆளனுப்பினான். அவர்கள் அவனிடம் வந்தபோது, அவன் அவர்களைப் பார்த்து: “நான் ஆசியா பகுதிக்கு வந்தநாள் தொடங்கி, உங்களுடன் இருந்த காலம் முழுவதும், எப்படி வாழ்ந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் அதிகத் தாழ்மையோடும் கண்ணீரோடும் கர்த்தருக்கு ஊழியம் செய்தேன். ஆனால் நான் யூதரின் சூழ்ச்சிகளினாலே மிகவும் சோதிக்கப்பட்டேன். உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கக்கூடிய எதையும் உங்களுக்கு பிரசங்கிப்பதற்கு நான் தயங்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நான் வெளியரங்கமாகவும், வீடுகள்தோறும் உங்களுக்குப் போதித்தேன். யூதர், கிரேக்கர் ஆகிய இரு பிரிவினருக்கும், அவர்கள் மனஸ்தாபப்பட்டு மனமாற்றம் அடைந்து இறைவனிடம் திரும்பவேண்டும் என்றும், நம் கர்த்தராகிய இயேசுவில் விசுவாசமாய் இருக்கவேண்டும் என்றும் நான் அறிவித்தேன். “இப்பொழுதும், பரிசுத்த ஆவியானவரால் கட்டுண்டவனாக நான் எருசலேமுக்குப் போகிறேன். அங்கே எனக்கு என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. நான் சிறையில் போடப்படுவேன் என்றும், பாடுகளை அனுபவிக்கவேண்டும் என்றும் எல்லாப் பட்டணங்களிலும், பரிசுத்த ஆவியானவர் என்னை எச்சரிக்கை செய்கிறார். இதை மட்டுமே நான் அறிவேன். ஆனால் என் வாழ்வு எனக்கு ஒன்றுமில்லை என்று நான் கருதுகிறேன். எனக்கு ஒப்புவிக்கப்பட்ட ஓட்டத்தை ஓடி முடிக்கவும், கர்த்தராகிய இயேசு எனக்குக் கொடுத்திருக்கிற ஊழியத்தை நிறைவேற்றவுமே நான் விரும்புகிறேன். இறைவனுடைய கிருபையின் நற்செய்திக்கு சாட்சி கொடுக்கும் ஊழியத்தையே அவர் எனக்குக் கொடுத்திருக்கிறார். “உங்கள் மத்தியில் நான் இறைவனுடைய அரசைப்பற்றிப் பிரசங்கித்ததைக் கேட்ட யாவரும் என்னை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ஆகவே உங்களில் யாராவது அழிந்தால், அந்த இரத்தப்பழி என்மேல் சுமராது என்று, நான் உங்களுக்கு இன்று உறுதியாய் அறிவிக்கிறேன். ஏனெனில், இறைவனுடைய முழுத் சித்தத்தையும் உங்களுக்கு நான் அறிவிப்பதற்குத் தயங்கவில்லை. உங்களைக்குறித்து நீங்கள் கவனமாயிருங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்காணிகளாக நியமித்த உங்கள் மந்தை முழுவதைக் குறித்தும் கவனமாயிருங்கள். இறைவனுடைய திருச்சபைக்கு மேய்ப்பர்களாய் இருங்கள். அதை அவர் தமது சொந்த இரத்தத்தை விலையாகக் கொடுத்தல்லவோ பெற்றுக்கொண்டார். நான் போனபின், உங்களிடையே கொடிதான ஓநாய்கள் வரும் என்றும் அவை மந்தையைத் தப்பவிடாது தாக்கும் என்றும் எனக்குத் தெரியும். உங்களைச் சேர்ந்தவர்களில் சிலரும்கூட எழும்பி, தங்கள் பக்கமாய் சீடரை இழுத்துக் கொள்வதற்கு, உண்மையைத் திரித்துக் கூறுவார்கள். எனவே நீங்கள் கவனமாயிருங்கள்! நான் மூன்று வருடங்களாக இரவும், பகலும் உங்களைக் கண்ணீருடன் எச்சரிக்கைச் செய்ததை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். “இப்பொழுது நான் உங்களை இறைவனுக்கும், அவருடைய கிருபையுள்ள வார்த்தைக்கும் ஒப்புக்கொடுத்திருக்கிறேன்; அந்த வார்த்தையே உங்களைக் கட்டியெழுப்பி அதுவே பரிசுத்தமாக்கப்பட்ட எல்லோருடனும்கூட உங்களுக்கும் உரிமைச்சொத்தைக் கொடுக்க வல்லமையுள்ளது. யாருடைய வெள்ளிக்கோ, தங்கத்திற்கோ, உடைக்கோ நான் ஆசைப்படவில்லை. என்னுடைய தேவைகளுக்காகவும், என்னுடன் இருந்தவர்களின் தேவைகளுக்காகவும், என் கைகளினாலேயே வேலைசெய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். நான் செய்த இவை எல்லாவற்றிலும், இவ்விதம் கஷ்டப்பட்டு வேலைசெய்தே, நாம் நலிவுற்றோர்க்கு உதவிசெய்ய வேண்டும் என்று, நான் உங்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காண்பித்தேன். ‘பெற்றுக்கொள்வதைப் பார்க்கிலும், கொடுக்கிறதே அதிக ஆசீர்வாதம்’ என்று கர்த்தராகிய இயேசு தாமே சொன்னதையும் உங்களுக்கு நினைவுப்படுத்தினேன்” என்றான். பவுல் இதைச் சொன்னபின்பு, அவர்கள் எல்லோருடனும் முழங்காற்படியிட்டு மன்றாடினான். அவர்கள் அனைவரும் அவனை அணைத்து முத்தமிட்டு அழுதார்கள். “நீங்கள் எனது முகத்தை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள்” என்று அவன் சொன்ன அந்த வார்த்தைகள் அவர்களை ஆழ்ந்த துக்கத்திற்குள்ளாக்கியது. பின்பு அவர்கள் அவனைக் கூட்டிக்கொண்டு கப்பல்வரைக்கும் சென்றார்கள்.

அப்போஸ்தலர் 20:17-38 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவிற்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பர்களை வரவழைத்தான். அவர்கள் தன்னிடத்தில் வந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியா நாட்டிலிருந்து வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களோடு நான் எப்படி இருந்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நான் மிகுந்த தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதர்களுடைய தீமையான யோசனையால் எனக்கு வந்த சோதனைகளோடும் கர்த்தருக்குப் பணி செய்தேன். பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி, தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் சாட்சியாக அறிவித்தேன். இப்பொழுதும் நான் பரிசுத்த ஆவியானவரிலே கட்டுண்டவனாக எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. தொடர்ச்சியான கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு உள்ளது என்று பரிசுத்த ஆவியானவர் பட்டணங்களெல்லாம் தெரிவிக்கிறதைமட்டும் அறிந்திருக்கிறேன். ஆனாலும் எதைக்குறித்தும் நான் கவலைப்படமாட்டேன். என் உயிரையும் பெரிதாக நினைக்கமாட்டேன்; என் ஓட்டத்தை சந்தோஷத்தோடு முடிக்கவும், தேவனுடைய கிருபையின் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். இதோ, நான் உங்களோடு வசித்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்கள் எல்லோரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்கள் என்று அறிந்திருக்கிறேன். தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியால், எல்லோருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாக இருக்கிறேன் என்பதற்கு உங்களை இன்று சாட்சிகளாக வைக்கிறேன். ஆகவே, உங்களைக்குறித்தும் தேவன், தம்முடைய சொந்த இரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை எல்லாவற்றையும்குறித்தும், எச்சரிக்கையாக இருங்கள். நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீடர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி தவறானவைகளைப் போதிப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். எனவே, நான் மூன்று வருடங்கள் இரவும் பகலும் கண்ணீரோடு இடைவிடாமல் உங்கள் அனைவருக்கும் புத்திச் சொன்னதை நினைத்து விழித்திருங்கள். இப்பொழுதும் சகோதரர்களே, உங்களுடைய பக்தி பெருகவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்கு உரிமைப்பங்கைக் கொடுக்கவும் வல்லவராக இருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்திற்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். ஒருவனுடைய வெள்ளியையோ பொன்னையோ ஆடையையோ நான் இச்சிக்கவில்லை. நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனே கூடி இருந்த மக்களுக்காகவும் இந்தக் கைகளே வேலைசெய்தது. இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைவிட கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான். இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்கால்படியிட்டு, அவர்கள் எல்லோரோடும் சேர்ந்து ஜெபம்பண்ணினான். அவர்கள் எல்லோரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்கள் என்று அவன் சொன்ன வார்த்தையினால் அதிகமாகத் துக்கப்பட்டு, பவுலைக் கட்டித்தழுவி, அவனை முத்தம் செய்து, கப்பல்வரைக்கும் அவனோடுகூடச் சென்றார்கள்.

அப்போஸ்தலர் 20:17-38 பரிசுத்த பைபிள் (TAERV)

மிலேத்துவிலிருந்து பவுல் ஒரு செய்தியை எபேசுவுக்கு அனுப்பினான். எபேசு சபையின் மூப்பரைத் தன்னிடம் வருமாறு அவன் அழைத்தான். மூப்பர்கள் அவனிடம் வந்தபொழுது பவுல் அவர்களை நோக்கி, “நான் ஆசியாவுக்கு வந்த முதல் நாளிலிருந்து என் வாழ்க்கையைக் குறித்து நீங்கள் அறிவீர்கள். நான் உங்களோடிருந்த காலம் முழுவதும் நான் வாழ்ந்த வகையையும் நீங்கள் அறிவீர்கள். யூதர்கள் அடிக்கடி எனக்கு எதிராகக் காரியங்களைத் திட்டமிட்டனர். இது எனக்குத் துன்பங்களைத் தந்தது. நான் அடிக்கடி அழுதேன். ஆனால் மிகப் பணிவாக எப்போதும் தேவனுக்கு சேவை செய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு மிகவும் சிறந்ததையே நான் எப்போதும் செய்தேன். இயேசுவைக் குறித்த நற்செய்தியை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறினேன். வீடுகளிலும் உங்களுக்குக் கற்பித்தேன். தங்கள் இருதயங்களை மாற்றி, தேவனுக்கு நேராகத் திரும்பும்படி, யூதரும் கிரேக்கருமாகிய எல்லா மக்களுக்கும் நான் கூறினேன். நமது கர்த்தராகிய இயேசுவில் நம்பிக்கை வைக்குமாறு அவர்கள் எல்லோருக்கும் சொன்னேன். “ஆனால் இப்போது பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படிந்து எருசலேமுக்கு நான் போக வேண்டும். எனக்கு அங்கு என்ன நேருமென்று எனக்குத் தெரியாது. துன்பமும் சிறையும் எருசலேமில் எனக்காக காத்திருப்பதை பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு நகரிலும் கூறுவதை மட்டும் அறிவேன். நான் எனது உயிரைப் பொருட்படுத்தவில்லை. நான் பந்தயத்தை முடிக்கிறேன் என்பதும் தேவனுடைய கிருபையைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்குச் சொல்லுமாறு கர்த்தராகிய இயேசு எனக்குக் கொடுத்த வேலையை முடிக்கிறேன் என்பதும் முக்கியமானவை. “இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். என்னை உங்களில் ஒருவரும் திரும்பவும் பார்க்கமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை நான் உங்களோடிருந்த போதெல்லாம் உங்களுக்குக் கூறினேன். எனவே நான் உறுதியாயிருக்கிற ஒன்றைக் குறித்து இன்று உங்களுக்குக் கூற முடியும். உங்களில் சிலர் இரட்சிக்கப்படாவிட்டால் தேவன் என்னைக் குற்றம் சாட்டமாட்டார். நீங்கள் அறிந்துகொள்ளவேண்டுமென தேவன் விரும்பிய அனைத்தையும் உங்களுக்குக் கூறினேன். எதையும் விட்டு வைக்கவில்லை என்பதால் இதை நான் சொல்ல முடிகிறது. உங்களுக்காகவும் தேவன் உங்களுக்குத் தந்த எல்லா மக்களுக்காகவும் எச்சரிக்கையாக இருங்கள். அவரது மந்தையைக் கவனிக்கும் வேலையை பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். தேவனின் சபைக்கு நீங்கள் மேய்ப்பர்களைப்போல் இருக்க வேண்டும். தேவன் தமது சொந்த இரத்தத்தால் வாங்கிய சபை இது. நான் பிரிந்த பின் உங்கள் குழுவில் சில மனிதர்கள் வருவார்கள் என்பதை அறிவேன். அவர்கள் கொடிய ஓநாய்களைப் போல் இருப்பார்கள். அவர்கள் மந்தையை அழிக்க முயல்வர். மேலும் உங்கள் சொந்தக் குழுவின் மனிதர்களும் மோசமான தலைவராக மாறுவர். அவர்கள் தவறான போதனைகளைப் போதிக்கத் தொடங்குவர். உண்மையை விட்டு விலகி இயேசுவின் சீஷர்கள் சிலரைத் தம்மைப் பின்பற்றுமாறு செய்வார்கள். எனவே எச்சரிக்கையாக இருங்கள்! எப்போதும் இதை நினைவுகூருங்கள். நான் உங்களோடு மூன்று ஆண்டுகள் இருந்தேன். இக்காலத்தில் நான் உங்களை எச்சரிப்பதை நிறுத்தவில்லை. நான் இரவும் பகலும் உங்களுக்கு உபதேசித்தேன். நான் அடிக்கடி உங்களுக்காக அழுதேன். “நான் இப்போது உங்களை தேவனுக்கு நியமம் செய்கிறேன். உங்களை பலப்படுத்தக் கூடிய தேவனுடைய கிருபையைப் பற்றிய தேவனுடைய செய்தியைச் சார்ந்திருக்கிறேன். தேவன் தனது பரிசுத்த மக்கள் எல்லோருக்கும் கொடுக்கும் ஆசீர்வாதத்தை இந்தச் செய்தி உங்களுக்குக் கொடுக்கும். நான் உங்களோடிருந்தபோது, பிறருடைய பணத்தையோ விலை உயர்ந்த ஆடைகளையோ விரும்பவில்லை. எனது தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்கும், என்னோடிருந்த மக்களின் தேவைகளுக்காகவும் எனது கைகளைக் கொண்டே நான் எப்போதும் உழைத்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். நான் செய்ததைப் போலவே நீங்களும் உழைத்து எளிய மக்களுக்கு உதவ வேண்டுமென எப்போதும் உங்களுக்குச் சுட்டிக் காட்டினேன். கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நினைவு கூருவதற்கு உங்களுக்குக் கற்பித்தேன். ‘நீங்கள் ஒன்றைப் பெறும் வேளையைக் காட்டிலும் பிறருக்குக் கொடுக்கும்போதே மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று இயேசு கூறினார்” என்றான். இவ்விஷயங்களைக் கூறி முடித்த பின்னர், பவுல் எல்லோருடனும் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தான். அங்கு அழுகின்ற பெரும் சத்தம் இருந்தது. பவுல் மீண்டும், அவர்கள் தன்னைப் பார்க்கமாட்டார்கள் என்று கூறியதால் அம்மனிதர்கள், மிகவும் வருத்தமுடனிருந்தார்கள். அவர்கள் பவுலைக் கட்டிக்கொண்டு, முத்தம் கொடுத்தனர். அவனை வழியனுப்புவதற்காக அவனோடு கப்பல் வரைக்கும் சென்றனர்.

அப்போஸ்தலர் 20:17-38 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைத்தான். அவர்கள் தன்னிடத்தில் வந்துசேர்ந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியாநாட்டில் வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களுடனே இன்னவிதமாய் இருந்தேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனையால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன். பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி, தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன். இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன். கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன். ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன். தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையதினம் சாட்சிகளாக வைக்கிறேன். ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். ஆனபடியால், நான் மூன்று வருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்தி சொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள். இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூடி இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக்கைகளே வேலைசெய்தது. இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான். இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம் பண்ணினான். அவர்களெல்லாரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக்குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு, பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்து, கப்பல்வரைக்கும் அவனுடனே கூடப்போனார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்